முன்னேறத் துடிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விருதுகள்

முத்துகுமார் ஸ்டீவனுக்கு மொத்தம் 7 சகோதர, சகோதரிகள். கல்வியில் தம் உடன்பிறந்தோருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என சிண்டா ‘ஸ்டெப்’ துணைப்பாடத் திட்டத்தில் சேர்ந்தார் அவர். 

முன்னாள் மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி மாணவரான ஸ்டீவன், ‘ஸ்டெப்’ துணைப்பாடத் திட்டத்தின் வழியாக மேம்பாடு கண்டு, தற்போது தொழில்நுட்பக் கல்விக் கழக (மத்திய கல்லூரி) விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் ’நைடெக்’ கல்வி பயில்கிறார்.  எதிர்காலத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேவையாற்ற கனவு கொண்டுள்ளார் இந்த 17 வயது இளையர். இவரைப் போன்று, துணைப்பாட வகுப்புகளின் வழி முன்னேற்றம் கண்டுள்ள மொத்தம் 454 மாணவர்களின் முயற்சியை அங்கீகரிக்க, ஆங்கிலோ சீனப் பள்ளி (தன்னாட்சி) வளாகத்தில் இம்மாதம் கூட்டு துணைப்பாட கல்வி விருது நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் சிறந்த முன்னேற்றம் கண்ட மாணவர்களுக்கு $100 புத்தக பற்றுச்சீட்டும் ‘ஜிசிஇ’ தேர்வுகளில் முன்னேற்றம் கண்ட மாணவர்களுக்கு $150 புத்தக பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து சிண்டா மற்றும் சீன, மலாய், யுரேஷியர் சுயஉதவிக் குழுக்கள் தங்கள் துணைப்பாட வகுப்புகளில்  சேர்ந்து தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு, ‘ஜிசிஇ’ சாதாரண நிலை, வழக்க நிலைத் தேர்வுகளில் அதிக முன்னேற்றம் கண்டுள்ள மாணவர்களை அங்கீகரித்து வருகின்றன.

சுயஉதவிக் குழுக்கள் நடத்தும் கூட்டு துணைப்பாடத் திட்டம் மூலம் குறைந்த வருமானப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் கட்டுப்படியான விலையில் துணைப்பாட வகுப்புகளுக்குச் செல்ல முடிகிறது. தீவு முழுவதும் இதுபோன்ற மொத்தம் 134 துணைப்பாட வகுப்புகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்விருது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கல்வி, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் வந்திருந்தார்.

மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் அதே வேளையில் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் முழுமையான மேம்பாட்டில் முக்கிய பங்குவகிக்க வேண்டும் என்று தம் உரையில் அவர் வலியுறுத்தினார். “ஒவ்வோர் ஆண்டும் சிண்டாவின் ‘ஸ்டெப்’ துணைப்பாடத் திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களின் தேர்ச்சி நிலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 35 மாணவர்கள் கூடுதலாக இவ்வாண்டிற்கான விருதுகளுக்குத் தகுதி பெற்றனர். சிண்டா ‘ஸ்டெப்’ வகுப்புகளின் தரத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு,” என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரா. அன்பரசு.

சிண்டா ‘ஸ்டெப்’ துணைப்பாடத் திட்டத்திலிருந்து மொத்தம் 149 மாணவர்கள் இவ்விருதுக்குத் தகுதி பெற்றனர். தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வுப் பிரிவில் விருது பெற்ற உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி மாணவியான திவியா ஏஞ்சலின், 13, பள்ளி விடுமுறையின்போது பாடப் பயிற்சிப் புத்தகங்களை வாங்க பற்றுச்சீட்டு உதவும் என்று சொன்னார்.