தமிழோடு பாரம்பரியம் கற்பித்த ‘தமிழ் விழா’

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

தமிழரின் பண்பாடு, உணவு போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்வதுடன் பொய்க்கால் குதிரை, பறையாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற தமிழர் பாரம்பரியக் கலைகளில் மாணவர்கள் ஈடுபடவும் வகை செய்தது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘தமிழ் விழா’. 

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பரிசளிப்பு விழாவும் ‘தமிழ் விழா’வும் கடந்த மாதம் 3ஆம் தேதி நடைபெற்றன.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

‘‘தாய்மொழியின் வழியாக நம் பண்பாடு, பண்புநலன், பாரம்பரியம் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. இது நம் தாய்மொழிக்கு உள்ள தனிச் சிறப்பு. இந்நிலையத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மொழி, பண்பாடு, பாரம்பரியம், பண்புநலன்களில் சிறந்து விளங்க,  இவ்விழாவைப் போன்ற கற்றல்-கற்பித்தல் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது,’’ என்று திரு விக்ரம்  தமது உரையில் கூறினார்.    

உயர்தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றதோடு, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய நிகழ்ச்சிகளில் அதிகம் உதவி வந்துள்ளார் 17 வயது மாணவி பவானி பரமானந்தம். 

தேசிய தொடக்கக் கல்லூரியில் பயிலும் பவானி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளினால் தமக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகமானதாகக் கூறினார். மேலும், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வரும் உயர்நிலை மாணவர்களுக்கான தேசிய தமிழ்மொழி விருப் பப் பாடத் திட்டத்திலும் பவானி பங்கெடுத்துள்ளார்.‘தமிழ் விழா’வில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ‘ஏகேடி கிரியே‌‌ஷன்ஸ்’ நிறுவனத்திலிருந்து வந்த பயிற்றுவிப்பாளர்கள் தமிழர் பாரம்பரியக் கலைகளை மாணவர்களுக்குக் கற்பித்தனர். பல்வேறு நடவடிக்கைகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

“நான் கபடி விளையாட்டிலும் பாவைக்கூத்திலும் பங்கெடுத்தேன். கபடி என்பது ஒரு வீரமான விளையாட்டு. ஒருவரை எவ்வாறு லாவகமாகக் கிழே சாய்ப்பது என்று இவ்விளையாட்டில் கற்றுக்கொண்டேன்,” என்று கூறினார் செங்காங் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயது ஸ்ரீனிவாசன்.

Property field_caption_text
கரகம் சுமந்து ஆடிக் களித்த மாணவர்கள். படம்: நாதன் ஃபோட்டோ ஸ்டூடியோஸ்
Property field_caption_text
மாணவர்கள் பொய்க்கால் குதிரை ஆடி மகிழ்ந்தனர்.

“பொய்க்கால் குதிரையுடன் எவ்வாறு ஆடுவது, பாடுவது என்று கற்றுக்கொண்டேன்,” என்றார் ஜூரோங் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது ‌‌ஷஸ்மீன் பானு. 

“நம் கலாசாரத்தில் ஒரு முக்கியமான அங்கமான கரகாட்டம் எனக்குப் பிடித்திருந்தது,” என்று கூறினார் கிரெஸ்ட் உயர்நிலை பள்ளியில் பயிலும் 14 வயது ஜெய்ஸ்ரீ.

“நம்முடைய கலாசாரத்தைப் பாதுகாக்க இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்,” என்று கூறினார் ஜூரோங் உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவி சீ. சுதர்‌ஷினி.

Property field_caption_text
ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் தோரணம் செய்த மாணவர்கள்.