பட்டம்பெற்று இலக்கை அடைந்தவர்கள்

தமிழில் பட்டக்கல்வி பயிலவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கு வெகுநாட்கள் ஆகும் என்று நினைத்துக்கொண்டிருந்த 28 வயது ம.சதீஸ்வரனுக்கு இப்போது அந்த இலக்கை அடைந்த பேரானந்தம். 

பகுதிநேரமாகப் பட்டக்கல்வி பயிலவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த சதீஸ்வரன், தமது பட்டயக் கல்வியை முடித்தவுடன் தேசிய கல்விக் கழகத்தில் தொடங்கப்பட்ட புதிய தமிழ்ப் பட்டக்கல்வித் திட்டத்தில் இணைந்து தமது கல்விப் பயணத்தைத் தொடர்ந்தார். 2014ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டு பட்டயக்கல்வித் திட்டத்தில் சேர்ந்த அவர், 2016ஆம் ஆண்டு பட்டக் கல்வியைத் தொடங்கி இவ்வாண்டு ஜூலை மாதம் பட்டம் பெற்றார். 

“தமிழில் பட்டக்கல்வி படிக்கவேண்டும் என்ற ஆசையை எளிதில் நிறைவேற்றி வைத்துள்ளது இந்தப் புதிய பாடத்திட்டம்,” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார் சதீஸ்வரன். 

“பகுதிநேரமாகத்தான் பட்டக்கல்வி பயிலவேண்டும் என்பதால் ஒருவித அச்சம் எனக்குள் இருந்தது. வேலை செய்துகொண்டே படிக்கும்போது அதிக சவால்கள் உள்ளன. நேரத்தைச் சரியாகத் திட்டமிடுவது அதில் ஒன்று. இந்த நிலையில் முழுநேரப் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இரண்டரை ஆண்டுகளில் பட்டம் பெற்றுவிடலாம் என்ற தன்னம்பிக்கையும் வந்தது,” என்றார் அவர். 

“நாலரை ஆண்டுகளுக்கு முன் எனக்கிருந்த தமிழறிவும் தமிழுணர்வும் இன்று பன்மடங்காகியுள்ளன. தாய்மொழி கற்பித்தலைப் பணியாக மட்டுமல்லாமல் கடமையாக நினைத்துச் செயல்படுவதோடு, புதிய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடங்களை வடிவமைத்தால் நம் உயர் கொள்கையான ‘தமிழை வாழும் மொழி ஆக்குதல்’ என்பதை எளிதில் எட்டிவிடலாம்,” என்று குறிப்பிட்டார் வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரியும் ம.சதீஸ்வரன்.

இவ்வாண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இப்புதிய பாடத்திட்டத்தில் ம.சதீஸ்வரனுடன் பட்டம்பெற்றார் 26 வயது நஸிமா பானு முகமது அன்சாரி. 

“தமிழ்மொழிமீது நான் கொண்டிருக்கும் ஆர்வத்தை ஓர் ஆற்றல் வாய்ந்த ஆயுதமாக இந்தத் தமிழ்ப் பட்டக்கல்வி மாற்றியுள்ளது. இலக்கியம், இலக்கணம், மொழியியல், கற்றல் கற்பித்தல் என எந்தவொரு பாடத்தை எடுத்துக்கொண்டாலும் அதை ஆழமாகவும் நுணுக்கமாகவும் படிக்கும் வாய்ப்பையும் இந்தப் பட்டக்கல்வி தந்தது. 

“நான் ஒரு தமிழாசிரியராய்த் தன்னம்பிக்கையுடன் என் மாணவர்களுக்கு மொழியைக் கற்பிக்க இந்தப் பட்டக்கல்வி எனக்கு நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது,” என்றும் கேஷ்யூரினா தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரியும் நஸிமா பானு குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவருக்குச் சிறந்த பயிற்சி ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. தரமான பட்டதாரிகளை உருவாக்குவதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்கீழ், சங்க இலக்கியம் உட்பட ஏனைய தமிழ் இலக்கியங்கள், இலக்கணம், மொழியியல், யாப்பியல், நாட்டுப்புறவியல், மொழிபெயர்ப்பியல் முதலியவற்றோடு கற்றல் கற்பித்தல் பாடங்கள் இந்த இளங்கலைப் பட்டப்படிப்பில் இடம்பெறுகின்றன. அத்துடன் தமிழ் சார்ந்த வெவ்வேறு பரிமாணங்களில் ஆய்வுகளை மேற்கொள்வதை ஒரு பாடமாகப் பயில இந்தப் பட்டக்கல்வி வழிவகுக்கிறது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் தேசியக் கல்விக் கழகமும் இணைந்து வழங்கும் தமிழுக்கான இளங்கலை பட்டக்கல்வியின் மூலம் இவ்விருவரும் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் முழுநேர பட்டக்கல்வித் திட்டம் இருக்கவேண்டும் என்பது சுமார் 40 ஆண்டுகால கனவு என்று கூறிய தேசியக் கல்விக்கழகத்தின் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.ரா. சிவகுமாரன், அத்துறையின் தலைவராகத் தாம் பொறுப்பு வகித்த காலத்தில் இக்கல்வித்திட்டத்திற்கான தயாரிப்புத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைந்தார்.

“புதிய பாடத்திட்டம், பயிற்றுவளங்கள் எனப் பல முக்கிய அம்சங்கள் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார். 

2016ஆம் ஆண்–டி–லி–ருந்து தேசி–யக் கல்–விக் கழ–கத்–தில் தமிழ் இளங்–கலை பட்–டப்–ப–டிப்பு நான்–காண்–டுக் கல்–வி–யாக வழங்–கப்–பட்டு வரு–கின்–றது. 

படங்–கள்: நஸ்–‌ரீன்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!