உடற்பயிற்சி, ஊக்கம், உயர்ந்த சிந்தனை

உடல் தோற்றத்தைக் காரணம் காட்டி நண்பர்களிடையே கேலி செய்யப்படுபவர்கள் மத்தியில் 131 கிலோ எடை கொண்டிருந்த விக்னேஷ் எதைப் பற்றியும் கவலைப் படாமல் தமது இளமைக் காலத்தை இன்பமாகக் கழித்து வந்தார்.

நண்பர் கூட்டத்துடன் அடிக்கடி மதுபானம் அருந்துவது, ஆரோக்கியமற்ற உணவு உண்பது என்றிருந்த விக்னேஷுக்கு எதிர்பாராத விதமாக ஒரு பெரும் ஆபத்து காத்திருந்தது. திடீரென்று ஒருநாள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு விக்னேஷ் மருத்துவரைக் காணச் சென்றார். சாதாரண மூச்சுத் திணறல் தானே என்று நினைத்த விக்னேஷுக்கு அதிகளவில் ரத்தக் கொழுப்பு இருந்தது தெரிய வந்தது. அதனால் அவருக்கு  மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளதாக மருத்துவர் கூறிய செய்தி இடியாய் விழுந்தது.

இவ்வாறு 23 வயதிலேயே நோய்க்கு ஆளாகியதை  எண்ணி சோகத்தில் தவித்த விக்னேஷ், அதிலிருந்து மீளவேண்டும் என்று முடிவெடுத்தார். முதலில் தமது வாழ்க்கைமுறையை முழுமையாக மாற்ற முற்பட்டார்.

உடற்பயிற்சி தொடர்பான காணொளிகளைப் பார்த்தும்  உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்பவர்களைக்  கவனித்தும் தமது உடல்வாகுக்கு ஏற்றவாறு உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் விக்னேஷ்.

இதற்கிடையே தேசிய சேவையில் அளிக்கப்பட்ட அடிப்படை ராணுவப் பயிற்சியும் அவருக்கு கைகொடுத்தது.

வாரத்தில் ஆறு நாட்களுக்கு எடையைக் குறைப்பதற்கான தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்ட 28 வயது விக்னேஷ், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இப்பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.

வாரத்தில் ஒரு நாள் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெதுவோட்டம் ஓடித் தன் உடலைக் கட்டாக வைத்துக்கொண்டுள்ளார்.

உடல் எடையைக் குறைக்கப் பல்வேறு உடற்பயிற்சிகளில் விடாமுயற்சியுடன் களம் இறங்கினார் இந்த இளைஞர். 

மேலும் தனக்கே சவால்விடும் வகையில் ஒரு விளையாட்டைத்  தேர்ந்தெடுத்து அதில் நிபுணத்துவம் பெற எண்ணினார்.

குத்துச்சண்டை ஒருவரது உடலைச் சீராக வைப்பதற்கு உதவும் என்பதை அறிந்துகொண்டு ஒரு குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரை நாடிச் சென்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குத்துச்சண்டைப் பயிற்சி பெற்று அனைத்துலக அரங்கில் பல குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்குபெற்றும் வருகிறார். இதற்காகத் தன் உடற்கட்டையும் கண்காணித்து வருகிறார் விக்னேஷ்.

உணவே மருந்து என்பதை வேதமந்திரமாகக் கொண்டு ‘கெட்டோஜெனிக்’ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.

கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை முழுவதும் தவிர்த்து புரதச் சத்து உள்ள கோழி, மீன், இறைச்சி உணவுவகைகளைச் சாப்பிடத் தொடங்கினார்.

இவ்வாறு உடலைச் சிறந்த முறையில் பேணிக்காத்து ஓர் ஆண்டிலேயே கிட்டத்தட்ட 56 கிலோ எடையைக் குறைத்தார் விக்னேஷ். 

இன்று ஓர் உடற்பயிற்சிக் கூட உரிமையாளராக, மற்ற இளையர்களுக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறார்.

“இளமைப் பருவத்திலேயே நம் உடலைத் திடமாக வைத்துக்கொள்ளத் தொடங்குவது அவசியம்.

“தினமும் நண்பர்களுடன்  கடைத்தொகுதிகளில் விற்கப்படும் பல்வேறு உணவுவகைகளைக் கட்டுப்பாடு இல்லாமல் உண்பதால் உடல் ஆரோக்கியமும் கெடுகிறது; பண விரயமும் ஏற்படுகிறது. 

“ஊக்கத்தைக் 

கைவிடாது உடற்பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, உயர்ந்த சிந்தனைகளை மட்டும் மனதில் கொண்டு வாழ்க்கையைச் சிறப்பான ஒன்றாக நாம் வழி நடத்த வேண்டும்,” என்றார் இளையர்

விக்–னேஷ்.