வேலையின்மை இயலாமை அல்ல

போட்டித்தன்மையும் சவால்களும் நிறைந்த உலகில் வேலை இல்லாமல் இருப்பதைப் பற்றிய கவலை சிங்கப்பூர் இளையர்களிடையே அதிகரித்து வருகிறது.

மேற்படிப்பைத் தொடராத, தொழிற்சார்ந்த பயிற்சிகளுக்குச் செல்லாத மற்றும் வேலையில் இல்லாத 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளையர்கள், ‘ நீட்’ (NEET - Not in Education, Employment or Training) பிரிவுக்குக் கீழ் வருவர்.

மனிதவள அமைச்சின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி இந்த ‘நீட்’ பிரிவில் இருந்தோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 20,500ஆக இருந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன் இந்த எண்ணிக்கை 19,700ஆக இருந்தது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் உள்ள ‘நீட்’ பிரிவினர் எண்ணிக்கை குறைவு. ஆனால் இங்குள்ள இளையர்கள் வேலையின்மையை ஒரு பெரிய குறையாகக் கருதி மனவுளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

வெற்றிகரமாகத் தங்கள் கல்விப் பயணத்தை முடித்தாலும் தகுந்த வேலையில் சேரப் பல மாதங்களாவதை எண்ணி இளையர்கள் வருந்துகின்றனர்.அப்படி ஒரு நிலையில் இருந்து மீண்டு வந்த இளையர்கள் தங்கள் அனுபவங்களை இளையர் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.

நேர்முகத் தேர்வுக்குத் தயாராகுதல்

கலைத் துறையில் கல்விப்படிப்பை மேற்கொண்ட முன்னாள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவி நந்தினி, இதுவரை 60 வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளார். போட்டித்தன்மை மிக்க உலகத்தில் வேலை கிடைப்பது கடினம் என்று நம்புகின்ற நந்தினி, தற்போது தற்காலிகமாக உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

வேலைச் சந்தையில் தேவைப்படும் திறன்களை முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நேர்முகத் தேர்வுக்குத் தயார்செய்துகொள்வதும் மிக அவசியம் என்கிறார்.

“நான் பல அரசாங்க, தனியார் நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பித்தேன். அவற்றில் கிட்டத்தட்ட பத்து நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றிருப்பேன். ஒவ்வொரு முறையும் நேர்முகத் தேர்வுக்குச் சென்று வேலை கிடைக்காத பட்சத்தில் மனவுளைச்சலுக்கு ஆளானேன். என் நிலையை எண்ணி என்னையே நான் நொந்துகொள்வேன்.

“பட்டத்தைப் பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே வேலைக்கு விண்ணப்பிக்கத் தொடங்கிய நான், பட்டத்தைப் பெற்ற பிறகும் வேலை கிடைக்காததை எண்ணி மிகுந்த கவலையடைந்தேன்.

“பின்னர் என்னிடம் உள்ள குறைபாடுகளை உணரத் தொடங்கினேன். நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் நிறுவனத்தைப் பற்றி முழுமையான விவரங்களை நான் தெரிந்துகொள்ளவில்லை. நேர்முகப் பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சிறப்பான பதில்களையும் நான் தரவில்லை. “அதை முதலில் சரிசெய்ய எண்ணினேன். நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது அணிய வேண்டிய உடை, பேசும் பாணி, கேள்விக்கான பதிலைத் திறமையாக வெளிப்படுத்துதல் போன்றவை குறித்து இணையத்தில் தேடித் தகவல் பெற்றுக்கொண்டேன்.

“வேலைக்காக விண்ணப்பித்திருக்கும் நிறுவனத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு நிறுவனத்திற்கு நான் எவ்வாறு பங்காற்றுவேன் என்பதை நேர்முகத் தேர்வில் பகிர்ந்துகொண்டேன். அவ்வாறு செய்ததால் நான் விரும்பி விண்ணப்பித்திருந்த வேலை கிடைத்தது. இது ஒரு நிரந்தர வேலை இல்லாவிட்டாலும் எனக்குக் கிடைத்துள்ள தற்காலிக வேலையில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்,” என்று கூறினார் 26 வயதான நந்தினி.

சொந்தத் தொழிலுக்கு அதிபதி

கிட்டத்தட்ட 20 வேலைகளுக்கான விண்ணப்பங்களை இணையத்தளங்களின் மூலம் சமர்ப்பித்து இதுவரை 10 நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றுள்ள விக்னேஷ், எட்டு மாதங்களாக வேலையின்றி இருந்தார். இயந்திரப் பொறியியல் துறையில் பட்டயப்படிப்பை முடித்திருந்த விக்னேஷ், அத்துறைக்குத் தொடர்புடைய வேலை என்னவென்று ஆராய்ச்சி செய்தார். அந்த வேலைகளுக்கு விண்ணப்பித்த போதும் வேலை அனுபவம் இல்லாத காரணத்தால் அவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

கல்வித்துறை, காவல்துறை போன்ற மற்ற துறைகளில் எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. மனந்தளராத விக்னேஷ், தற்போது ஓர் உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளராக இருக்கிறார்.

“தற்போது வேலை கிடைப்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அதை எண்ணி வருந்தாமல் நமது திறன் என்ன என்பதை உணர்ந்து நாம் சொந்த தொழிலையும் தொடங்கலாம். அதற்கான முதலீட்டை எவ்வாறு பெறலாம் என்பதைப் பற்றி கவலைப்படாமல் இது குறித்துக் குறிப்பிட்ட சில அமைப்புகளிடமிருந்து நாம் ஆலோசனை பெறலாம்,” என்றார் 28 வயது விக்னேஷ்.

இளந்தொழிலதிபர் என்ற வகையில் இவரது பயணம் சவால்மிக்க ஒன்றாக இருந்தாலும் இதன் தொடர்பில் நிபுணர்களிடமிருந்து பெறும் ஆலோசனைகளின் மூலம் தமது உடற்பயிற்சிக் கூடத்தை, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி வருகிறார்.

எதிர்பார்ப்புகளைக் குறைத்து மனநிறைவைப் பெறுதல்

கல்விப் பயணத்தை முடித்த பின் வாழ்வாதாரத்திற்காக செய்யும் வேலை, தற்போது இளையர்களுக்கு உடனே கிடைத்துவிடுவதில்லை. இதனால் ‘வேலையின்மை’ என்ற வார்த்தைகூட இளையர்களை அச்சுறுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. பல்கலைக்கழகக் கல்வியை முடித்து ஒரு பட்டதாரியாக மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் மிதந்த ஷர்பினி, சில மாதங்களுக்குப் பின் வெறுமையில் வாடினார்.

மேற்படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து வந்த ஷர்பினி, ஓர் ஆண்டு ஆகியும் ஒரு நிரந்தர வேலையில் சேரவில்லை.
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகளாக வரலாற்றுத் துறையில் பயின்ற 26 வயது ஷர்பினி, இதுவரை 20க்கும் மேற்பட்ட வேலைகளுக்குப் பதிவு செய்துள்ளார். வரலாற்றுத் துறை தொடர்பில் ஆசிரியர் பணி உட்பட பல துறைகளிலும் வேலைக்காக விண்ணப்பித்தார் ஷர்பினி.
அவ்வப்போது வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டபோதும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

ஷர்பினி தற்காலிகமாக ஓர் உதவி ஆராய்ச்சியாளராகத் தற்போது பணிபுரிந்து வந்தாலும் வேலையில்லா நாட்களில் தாம் அனுபவித்த வேதனையை நினைவுகூர்ந்தார்.

“எனது மேற்படிப்பு முடிந்து சான்றிதழ் பெற்றதும் பட்டதாரியான எனக்கு உடனடியாக வேலை கிடைத்துவிடும் என்ற கனவில் இருந்தேன். ஆனால் அது வெறும் கனவாகவே இருந்துவிட்டது. ஓராண்டு காலமாகப் பல வேலைகளுக்குப் பதிவு செய்து அதில் தோல்வியுற்றபோது மனவுளைச்சலுக்கு ஆளானேன்.

“நேர்முகத் தேர்வுக்காக என்னைத் தயார்ப்படுத்திக்கொண்ட போதும் வேலையில்லா கூட்டத்தில் ஒருவராக நரக வேதனை அனுபவித்தேன்.

“குடும்பத்தில் மூத்த பிள்ளையாக இருந்த நான், என்னுடைய குடும்பப் பொறுப்புகளை ஏற்பதற்காக வேலை கிடைத்தாக வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன். அந்தக் காலகட்டத்தில் பெற்றோரின் தொடர்ச்சியான ஆதரவே எனக்குப் பக்கபலமாக இருந்தது.

“விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கிச் செல்லும்போது ஏற்படும் சிற்சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் முக்கியம் என்று என்னுடைய பெற்றோர் கூறிய அறிவுரை என் மனதில் ஆழப் பதிந்தது,” என்றார் ஷர்பினி.

நிரந்தர வேலையில் மட்டுமே சேர வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு, எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டேன். இந்த ஆக்கபூர்வமான சிந்தனை இருந்தால் முன்னேற்றம் காணலாம் என்றார் ஷர்பினி.

இறுதி இலக்கே முக்கியம்

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் நிர்வாகத் துறை தொடர்பில் பட்டயக் கல்வியை முடித்தவுடன் (diploma in tourism and hospitality management) இணையம்வழி எந்த வேலை விளம்பரத்தைப் பார்த்தாலும் உடனே அவற்றுக்கு விண்ணப்பித்தார் கவிதா. இப்படியே ஒன்றரை ஆண்டுகள் கழிந்தாலும் ஒருபோதும் அதை எண்ணி அவர் சோர்வடையவில்லை.

“போட்டித்தன்மைமிக்க உலகில் இப்போது நினைத்தவுடன் வேலை கிடைப்பது சாத்தியமற்றது. அதனால் முடிந்த அளவிற்கு நாம் படித்த படிப்புக்குத் தொடர்புடைய வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதனால் அத்துறை தொடர்பான கேள்விகளை நேர்முகத் தேர்வில் கேட்கும்போது நம்மால் தன்னம்பிக்கையுடன் பதிலளிக்க முடியும். நம் இறுதி இலக்கை நோக்கித் தொடர்ந்து செல்ல அதுவே சிறந்தது,” என்றார் 25 வயது கவிதா.

இன்னும் நிரந்தர வேலை கிடைக்காவிட்டாலும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தில் தற்போது மூத்த நிர்வாகியாகப் பணியாற்றும் வேலையை நிரந்தரமாக்கிக்கொள்ள விடாமுயற்சியுடன் உழைத்து வருகிறார், கவிதா.

(இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி, அடுத்த வாரம் வெளியிடப்படும்...)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!