இளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’

பெற்றோர் கவனிப்பு இல்லாமை, தனிப்பட்ட அடையாளத்திற்கான போராட்டம், உறவுகளில் சிக்கல், மனச்சோர்வு, உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணுதல் ஆகியவை இளையர்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளில் சில. 

இப்பிரச்சினைகளை மேளதாள இசை முழங்க, ‘கலிங்கா’ என்ற மேடைப் படைப்பு காட்சிப்படுத்தியது.  

இயல், இசை, நாடகம், நடனம் எனப் பல கலை அம்சங்களின் சங்கமமாக விளங்கிய இது இளையர்களுக்கான கருத்துகளை கொண்டிருந்தது. 

‘டமாரு சிங்கப்பூர்’ (Damaru Singapore) எனும் இந்திய தாள வாத்திய இசைக் குழு ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் ‘தத்வா’ (Tattva) என்ற கலை அமைப்பைச் சேர்ந்த கலைஞர்கள் நடனமாடினர். 

டமாரு குழுவின் நிறுவனர் 31 வயது  அக்‌ஷரா திரு. இவர் சமூகப் பணியாளராகவும் கல்வி அமைச்சின் வெவ்வேறு பள்ளிகளுக்கு இசை ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.  

சிக்கலில் தவித்த பல இளையர்களைச் சந்தித்தார் அக்‌ஷரா திரு. அத்துடன் இப்படைப்புக்காக மூன்று தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், சிறுவர்கள் இல்லம் ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 50 இளையர்கள் பேட்டி காணப்பட்டனர். இந்தச் சந்திப்புகளும் தனிப்பட்ட அனுபவங்களும் கலிங்கா படைப்புக்கு அடித்தளமாக அமைந்தன. 

“பெற்றோரின் ஆதரவில்லாததால் இளையர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அரவணைப்பை நாடி முறைகேடான உறவுகளை அமைத்துக்கொள்கிறார்கள்.

“கலிங்கா படைப்புக்காக இளையர்களுடன் இணைந்து செயல்பட்டோம். தகுந்த வழிகாட்டி இல்லாத சூழலில் இளம் வயதினர், தாங்கள் தங்களின் கண்முன் பார்ப்பதைப் பின்பற்றுவார்கள். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சிறு வயதிலேயே தவறான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க நேரிடலாம்,” என்றார் அக்‌ஷரா திரு.   

கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்ற ‘டமாரு பாஜே’ என்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவ்வாண்டு ‘கலிங்கா’ கேட்வே தியேட்டரில் (Gateway Theatre) செப்டம்பர் 14ஆம் தேதியன்று சிறப்பாக மேடையேற்றப்பட்டது. 

மிருதங்கம், செண்டா, டோல், டஃப், நகடா போன்ற தாள வாத்தியங்களுடன் புல்லாங்குழல், ‘கித்தார்’, வாய்ப் பாடல் ஆகிய இசை வடிவங்கள் ஒன்றாக முழங்கி, திரளாக வந்த கிட்டத்தட்ட 400 ரசிகர்களைப் பரவசப்படுத்தின. 

கலிங்கா படைப்பில் ஒலித்த இசை வடிவம் ‘நியோ-பரதா ரொக்’ என்ற பெயர் பெற்றது. முற்போக்கு (Progressive), நவீன காலக்கட்ட ‘ரோக்’ (Post-modern rock) ஆகிய இரு இசை வடிவங்களுடன் இந்தியப் பாரம்பரிய இசையையும் இணைத்துத் தயாரிக்கப்படுவது இந்தப் புதுமையான இசை வடிவமான ‘நியோ-பரதா ரொக்’. 

வழக்கமான கச்சேரியைப் போன்று இல்லாமல் படைப்பில் இடம்பெற்ற 19 அங்கங்களுக்கு இடையிடையே காணொளிகள், நாடகம், நடனம் போன்ற உத்திகள் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டன. இது கோர்வையான ஒரு கலைப் படைப்பை உருவாக்கித் தந்தது.   

“இசை நிறுவனங்கள் பொதுவாக ரசிகர்களின் பார்வைக்குரிய அம்சங்களைப் பற்றி முறையாகச் சிந்திப்பதில்லை. இந்தப் படைப்பு ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்,” என்றார் அக்‌ஷரா திரு.  

காப்பியங்களில் கிருஷ்ணர் அழித்த கலிங்க பாம்பை, இன்றைய காலகட்டத்தில் இளையர்களின் சவால்களுடன் தொடர்புபடுத்தியது ‘கலிங்கா’. 

“கலிங்க பாம்பைக் கண்முன் கொண்டுவர எங்கள் நடனத்தில் பாம்பைப் போன்ற அசைவுகள் அமைந்தன. பிரச்சினைகளை எதிர்நோக்கிய இளையர்களைச் சிக்க வைக்க இந்தப் பாம்பு முயலும். பிரச்சினைகளிலிருந்து இளையர்கள் மீண்டு வரலாம் என்பதை உணர்த்த விரும்பி, கலிங்க பாம்பின் பிடியில் சிக்காமல் இளையர்கள்  விடுபடுவதைக் காண்பித்தோம்,” என்றார் தத்வா நடனமணி பிருந்தா சிவபாலன், 21. 

டமாரு இசை உறுப்பினரான 26 வயது ராதே வெங்கடேசன், ‘யாஷினி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஆழ்மனதில் நடக்கும் போராட்டத்தின்வழி தன் தனிப்பட்ட அடையாளத்தைக் கண்டறியும் கதாபாத்திரமாக யாஷினி வலம் வந்தார். 

“வாழ்க்கையில் நமது தனிப்பட்ட அடையாளத்தைக் கண்டறிவதில் சவால் ஏற்பட்டிருக்கலாம். அது ஏதோ ஒரு தருணத்திலோ வாழ்நாள் முழுவதுமோ நீடிக்கும் சவாலாகக்கூட இருக்கலாம். 

“இந்தத் தனிப்பட்ட அடையாளம், மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாறலாம். உலகுக்கு நாம் ஒத்துப்போகவில்லை என்பதற்காக நமது கனவுகள், விருப்பங்கள், தேவைகளைக் குறைவாக மதிப்பிடக்கூடாது. 

“மாறாக நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நாம்தான் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்,” என்றார் ராதே.      

டமாரு இசைக் குழு மற்ற நாடுகளில் தன் படைப்புகளை காட்சிப்படுத்துவது குறித்து நிகழ்ச்சி முடிவில் இடம்பெற்ற கேள்வி பதில் அங்கத்தின்போது பார்வையாளர் ஒருவர் கேட்டார்.

“எதற்காக வெளியூர் செல்லவேண்டும், முதலில் உள்ளூரில் சாதிக்க விரும்புகிறோம். முதலில் இங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம்,” என்று பதிலளித்தார் அக்‌ஷரா திரு.