சாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்

தேசிய சேவையில் திருப்புமுனை

பெற்றோர் விவாகரத்தால் படிப்பில் எதற்காக கவனம் செலுத்த வேண்டும் என்ற வெறுப்பில் முகம்மது நிசார் பத்துஷா முகம்மது ஹனீஃபா, தீய நண்பர்களுடன் பழகத் தொடங்கினார்.

உயர்நிலை மூன்றை மறுபடியும் பயில வேண்டியதாயிற்று. உயர்நிலை 4ல் இருந்தபோது பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். இறுதியில் வழக்க நிலைத் தேர்வில் இரண்டு பாடங்களில் மட்டுமே தேறினார்.

நிசார் தேசிய சேவை முடிந்து படிப்பைத் தொடர முடிவெடுத்தார்.

தேசிய சேவையின்போது, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் சேவையாற்றியது அவரின் வாழ்க்கையின் திருப்புமுனைக்கு வித்திட்டது. அங்கிருந்த கட்டுப்பாடான சூழலில் அவருக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

தீயணைப்புப் பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த முகம்மது நிசாருக்கு, ஒரு குழுவை வழிநடத்தும் தலைமைத்துவப் பண்புகள் அனைத்தும் இருந்தன.

ஆனால் கல்வித் தகுதியின்மையால் நிசார் அடுத்த நிலைக்கு முன்னேறுவதில் சிரமம் இருந்தது. இது நிசாருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேசிய சேவை முடிந்ததும் கல்வியைத் தொடர உறுதி கொண்டார் நிசார்.

காலை முதல் பிற்பகல் வரை தாயாரின் உணவங்காடிக் கடையில் உதவி செய்துகொண்டு மாலையில் தொழில்நுட்பக் கல்விக் கழக வகுப்புகளுக்குச் சென்றார்.

ஓர் ஆண்டு காலமாக, கட்டுப்பாடான வாழ்க்கைமுறையைப் பின்பற்றியவர், 2017ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்விக் கழகக் கல்லூரியில் தமக்குப் பிடித்த சேவை நிர்வாகத் துறையில் படித்து ‘உயர் நைடெக்’ சான்றிதழ் பெற்றார். தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தகத் துறையில் நிசார் பயின்று வருகிறார்.

‘‘என்மேல் அதிகம் நம்பிக்கை வைத்த தாயார், நெருங்கிய நண்பர் ஆகியோருக்காக மாற வேண்டும் என்று நினைத்தேன்,” என்ற 24 வயது முகம்மது நிசார், வழிதவறிச் செல்லும் இளையர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதில் கடப்பாடு கொண்டுள்ளார்.

‘எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்’ என தாயார் திருவாட்டி பாத்திமா பேகம் கூறும் தாரக மந்திரம் தொடர்ந்து இவருக்கு உற்சாகம் அளித்து வருகிறது.

மனம் வைத்தால் மார்க்கம் வரும்

தொடக்கப்பள்ளி காலத்திலிருந்தே ஏஞ்சலின் புஷ்பநாதனுக்குத் தன்னம்பிக்கை குறைவு. அவரின் உடல் பருமனே அதற்குக் காரணம். சக மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் இவர் ஆளானார். உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றதும் கிண்டலும் கேலியும் மோசமானது. உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஏஞ்சலினுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தும் உடல் பருமன் காரணத்தினால் அவற்றில் சரியாகப் பங்குபெற இயலவில்லை.

உயர்நிலை 4ல் கிட்டத்தட்ட 120 கிலோ எடையில் இருந்த ஏஞ்சலின், தன் உயர்கல்வியைத் தொடங்கும்போது இதே பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடாது எனத் தீர்மானித்தார்.

உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுமுறை ஆகியவற்றைத் தன் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றத் தொடங்கினார்.

நாளடைவில் அதன் பலன் தெரியத் தொடங்கியது. தன்னிடம் அதிகம் பேசாத மாணவர்கள்கூட அவருடன் நண்பர்களாகினர். ஏஞ்சலினைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள தொடங்கியது

அவருக்கு ஆறுதலாக இருந்தது.

சாதாரண நிலைத் தேர்வின் கணிதப் பாடத்தில் அவர் நன்றாகச் செய்யவில்லை. அதனால், பல துறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றில் குறிப்பிட்ட ஒருசில துறைகளில் மட்டுமே பயில அவர் தகுதி பெற்றார்.

உடற்பயிற்சி, விளையாட்டு, சுகாதாரம் தொடர்பான துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த ஏஞ்சலின் அதன் தொடர்பாகவே படிக்க விரும்பினார். ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சுகாதார நிர்வாகம், மேம்பாட்டுத் துறையில் பயில அவருக்கு வாய்ப்பு கிட்டியது. தன் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினார். ஆரோக்கிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்த ஏஞ்சலின் 65 கிலோ எடைக்குக் குறைந்தார்.

தகுதி விருது (Merit) சான்றிதழுடன் பட்டயக்கல்வியை இவ்வாண்டு வெற்றிகரமாக முடித்த எஞ்சலின், எதிர்காலத்தில் சமூகப் பணியில் பட்டப்படிப்பு மேற்கொள்ளத் திட்டம் கொண்டுள்ளார்.

‘‘உடற்குறையுள்ள ஒரு நெருங்கிய சொந்தம் இன்று என்னுடன் இல்லை. உடற்குறையுள்ள சமூகத்தினருக்குப் பங்காற்றுவதுடன் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிப் படைபவர்கள் தங்களின் வாழ்க்கையைச் சமாளிக்க உதவுவதில் நாட்டம் கொண்டுள்ளேன்,’’ என்றார் 21 வயது ஏஞ்சலின். தற்போது கூ டெக் புவாட் மருத்துவமனையில் நோயாளிகள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

‘‘என்னுள் தன்னம்பிக்கையும் மனதைரியமும் கூடியுள்ளது. என்னைப் போன்று உடல் பருமன் பிரச்சினைகளை எதிர்கொள்வோருக்கு மனரீதியாக ஊக்கம் அளிக்க கடப்பாடு கொண்டுள்ளேன்,’’ என்று கூறுகிறார் பலதரப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு வரும் இந்தத் துடிப்புமிக்க இளையர்.

துன்பங்கள் நிரந்தரம் அல்ல

சுரேந்தர் குமார் ஐந்து வயதாக இருந்தபோது, அவரின் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டார்கள். குடும்பத்திலிருக்கும் ஐந்து பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பைத் தாயார் ஒருவரே ஏற்றுக்கொண்டார்.

கப்பற்பட்டறையில் பணியாற்றிய தாயாரின் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தவேண்டிய கட்டாயம்.

ஒரு வாடகை வீட்டிலிருந்து மற்றொரு வாடகை வீட்டுக்கு மாறுவது என்று வாழ்க்கை சென்றது. இளம் வயதில் அனுபவித்த சிரமங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் உத்வேகத்தை சுரேந்தருக்குத் தந்தது. செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையத்திலிருந்து கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரிக்கு அவர் முன்னேறினார்.

ஓரறை வீட்டில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை பிரச்சினையால் பெரும்பாலான நேரம் தொடக்கக் கல்லூரியில்தான் அவர் நேரத்தைச் செலவழிப்பார். படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க பள்ளியின் ஹாக்கி விளையாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.

குறிக்கோளில் தெளிவாக இருந்த சுரேந்தரின் அடுத்த கல்விப் பயணம் அவரை தேசிய பல்கலைக் கழகத்தின் சமூக அறிவியல் துறைக்குக் கொண்டு சென்றது. படிப்பில் சிறந்திருந்ததால் தொடக்கப் பள்ளியிலிருந்து அவருக்குக் கல்வி உதவி நிதி கிடைத்து வந்தது.

தொடர்ந்து சாதனைப் படிக்கட்டில் ஏறி, ‘ஹானர்ஸ்’ பட்டம் பெற்றுத் தாயாருக்குப் பெருமை சேர்த்தார்.

தற்போது தனியார் நிறுவனத்தில் ஆய்வு நிபுணராகப் பணிபுரியும் இவர், நான்கறை வீட்டில் வசிக்கிறார். குடும்பத்தின் வாழ்க்கைத் தரமும் இப்போது மேம்பட்டுள்ளது.

‘‘தாயாரின் உழைப்பு, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு, உறவினர்களின் உதவி, நல்ல நண்பர்களின் நட்பு, ஆசிரியர்களின் ஊக்கம், தனிப்பட்ட நிதி ஆதரவாளர்களின் அன்பு என ஒட்டுமொத்த சமுதாயமே கைகொடுத்ததால்தான் என்னால் இந்நிலையை எட்ட முடிந்தது,’’ என தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்தார் இளையர் சுரேந்தர்.

தமது எதிர்காலத்திற்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொண்ட சுரேந்தர், சமூகத்திற்கு எவ்வகையிலாவது பங்களிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் இருந்தபோது வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓர் அரசு சார்பற்ற அமைப்பில் வேலைப் பயிற்சியில் ஈடுபட வாய்ப்பு கிட்டியது.

அதில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர், கடன் பிரச்சினையால் தவிக்கின்றனர் என்றும் சிலர் கடுமையான வேலைச் சூழலுக்கு ஆளாகின்றனர் என்றும் தெரிய வந்தது. அவர்கள் கடுமையாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைப்பதற்கான உறுதி இல்லையே என்பதையும் சுரேந்தர் உணர்ந்தார்.

‘‘எதிர்காலத்தில் ஒரு சமூக அமைப்பை தோற்றுவித்து வெளி நாட்டு ஊழியர்கள் சுரண்டலுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வது எனது நீண்டநாள் ஆசை,’’ எனத் தெரிவித்தார் 25 வயது சுரேந்தர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!