வேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல

சிலர் சமுதாயத்திலிருந்து விலகித் தங்கள் வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்கும் நிலையை ஜப்பானியர்கள் ‘ஹிக்கிக்கோமோரி’ என்று அழைப்பர். வேலை கிடைக்காத சில இளையர்களும் இந்த நிலைமைக்குத் தள்ளப்படுவது கவலைக்கிடமான ஒன்றாகும். 

சென்ற வாரத் தொடர்ச்சியாக வேலையின்மை தொடர்பில் மேலும் பல தகவல்களை அறிந்துகொள்வோம்.  

பயிற்சி வகுப்புகள் மூலம் மேம்பாடு 

Property field_caption_text
பவித்ரா

ஈராண்டுக்கு முன்பு பட்டம் பெற்ற பவித்ரா சுமார், 25 முறை நேர்முகத் தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளார். மேற்படிப்பை முடித்தவுடன் வங்கி, இணக்கம் (compliance) ஆகிய துறைகளில் நிரந்தர வேலைகளுக்கு விண்ணப்பித்த பவித்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தொடக்கத்தில் நிரந்தர வேலைதான் வேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவரது கண்ணோட்டத்தை மாற்றியது.

“ஒரு நேர்முகத் தேர்வின்போது நான் சரியாகவே பதில் அளிக்கவில்லை. பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகி அந்தக் கட்டடத்திலிருந்து அழுதுகொண்டே நான் வெளியேறினேன்.

“பின்னர் அந்தச் சம்பவத்தைப் பற்றி யோசித்தபோது அந்த நேர்முகத் தேர்வுக்கு நான் சரியாகத் தயார் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். மேலும் அனுபவமே இல்லாத துறைகளில் உடனடியாக வேலை கிடைத்துவிடவேண்டும் என்ற கண்ணோட்டம் தவறான ஒன்று என்பதை உணர்ந்து எனது திறனை மேம்படுத்திக்கொள்ள, நான் விரும்பிய இணக்கம் (compliance) துறைக்குத் தேவையான பயிற்சியைப் பெற்றேன். 

“தற்போது முழுநேர வேலையில் உள்ளேன். ஒன்றரை ஆண்டுகளாக தற்காலிக வேலைகளைச் செய்து வந்தேன். பட்டப்படிப்பை முடித்த பின்பு உடனடியாக முழுநேர வேலையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு பிடித்த வேலைக்கான திறன்களைப் பயிற்சி வகுப்புகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்,” என்றார் பவித்திரா.

நட்பு வலையை விரிவுபடுத்துதல்

Property field_caption_text
வி‌ஷ்ணு

ஒன்றரை ஆண்டுகளாக 100 வேலைகளுக்கு விண்ணப்பித்த விஷ்ணு, கிட்டத்தட்ட 30 நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றிருக்கிறார்.

“தன்னம்பிக்கையைத் நான் இழக்கவில்லை. பகுதிநேர உயிர்க்காப்பாளராகப் பணிபுரிந்தபோது சில நண்பர்கள் முழுநேர நீச்சல் பயிற்றுவிப்பாளர் வகுப்புகளுக்குச் சென்றதைக் கண்டேன். அவர்களிடம் அதைப் பற்றி விசாரித்து, வகுப்புகளுக்குச் சென்று நானும் முழுநேர நீச்சல் பயிற்றுவிப்பாளருக்கான சான்றிதழைப் பெற்றேன்,” என்றார் 28 வயது விஷ்ணு. நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் பலரைச் சந்தித்து வேலைவாய்ப்புகளுக்கான ஆலோசனையையும் பரிந்துரையையும் பெறலாம்,” என்றார் அவர்.

 

நிறுவன முதலாளியின் கருத்து:

Property field_caption_text
திரு ராஜ்குமார் பெருமாள் சுப்பையா

வாழ்க்கைத்தொழில் குறித்து ஓர் உறுதியான திட்டத்தை மனதில் கொண்ட பிறகே இளையர்கள் வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார் திரு ராஜ்குமார் பெருமாள் சுப்பையா.

சுற்றுலா, பயண நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் திரு ராஜ்குமார், 49, இக்காலத்து இளையர்கள் சேர விரும்பும் வேலைகள் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

“விண்ணப்பித்துள்ள அந்த வேலையில் என்னென்ன பொறுப்புகள் உள்ளன, நிறுவனம் முன்னேற எவ்வாறு அவர்கள் பங்களிக்கலாம், தாங்கள் எவ்வாறு சுய முன்னேற்றம் காணலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

“நிறுவனத்தின் இலக்கைப் புரிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்துவிடவேண்டும் என்பதற்காக அவ்வேலைக்கு விண்ணப்பம் செய்வோரின் எண்ணத்தை நேர்முகத் தேர்வாளர்கள் கண்டுபிடித்து விடுவர்.

“ஒரு துறையில் அனுபவமே இல்லாவிட்டாலும் கொடுக்கப்படும் வேலையில் நிறுவனத்திற்குத் தேவைப்படும் தகுதிகளை எவ்வாறு வளர்த்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதை நேர்முகத் தேர்வாளருக்குப் புரியவைக்கவேண்டும்,” என்று   பகிர்ந்துகொண்டார் திரு ராஜ்குமார்.

வேலையின்மை குறித்து மனோதத்துவ நிபுணர் டாக்டர்     க.சத்தியவாணி:

* தாழ்வு மனப்பான்மை. 

* எதற்கும் பயனில்லாதவர் என்ற எண்ணம் தோன்றுதல்.

* உறவினர், நண்பர்களிட      மிருந்து விலகி இருத்தல்.

* தொடர்ந்து மனவுளைச்சல், மனநோய் போன்றவற்றால் பாதிப்புறுதல்.

எப்படி தவிர்க்கலாம்:

* நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரிடம் வேலையின்மையைப் பற்றி பேசுவது.

* துவண்டுபோகாமல் தன்னைத் தானே ஊக்குவிப்பது.

* வேலை கிடைக்காததற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது.

* நண்பர்கள், உறவினர்களிடம் உதவி நாடுவது. 

* சமூகக் குழுக்களில் சேர்வதன் மூலம் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கலாம். அவர்கள் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெறுவது.

நேர்முகத் தேர்வுக்கான முன்தயாரிப்புகள்:

* தற்குறிப்பு கச்சிதமாக அமைதல்.

* வேலைச் சந்தைக்குச் சென்று அங்குள்ள நிபுணர்களிடம் வேலை வாய்ப்புகளைப் பற்றி மேலும் தகவல் அறிதல்.

* வேலைக்காக எளிதில் இணையம்வழி விண்ணப்பிக்க, தற்குறிப்பை முன்னரே பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ளுதல்.

* நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டு நேர்முகத் தேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்தல்.

* நேர்முகத் தேர்வின்போது வேலை தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.