தீபாவளி வியாபாரத்தில் இளையர்கள் ஆர்வம்

ஒரே குடியிருப்புப் பேட்டையில் ஓடி ஆடி விளையாடிய பாலர்கள், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து வர்த்தகத்தில் பங்காளிகளாகக் கைகோத்துள்ளனர். 

வைஷ்ணவி, அவரின் சகோதரி நிஷாலினி, நண்பர் இளமாறன் ஆகியோர் இணைந்து முந்தைய சிராங்கூன் பிளாசாவிற்கு எதிரில் உள்ள பெர்ச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளிச் சந்தையில் இவ்வாண்டு கடை நடத்துகிறார்கள். இதுபோன்ற பெரும் முயற்சியில் இறங்குவது இருவருக்குமே இது முதல்முறை. 

“கடந்த ஐந்து ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்காலத்தில் சிறிய அளவில்தான் ஆங்காங்கே ஆபரணங்கள் விற்று வந்தோம். இந்த ஆண்டு நாங்கள் துணிந்து இரண்டு கடைகளை வாடகைக்கு எடுத்துத் தொழில் தொடங்கியுள்ளோம்,” என்றார் 25 வயது ல.வைஷ்ணவி. 

தோடு, சங்கிலி போன்ற பெண்களுக்கான ஆபரணங்களுடன் ஆண்களுக்கான ஜிப்பா ஆடைகளையும் இவர்கள் விற்கின்றனர். 

இவர்களே ஆபரணங்களைக் கைப்பட வடிவமைத்து உருவாக்குகின்றனர்.

பரதநாட்டியத்தில் நிஷாலினி கொண்டுள்ள ஆர்வம், ஆபரண வடிவமைப்பில் அவரை ஈடுபாடு கொள்ளச் செய்தது. குறிப்பாக ‘டெம்பிள் ஜுவல்லரி’ என்றழைக்கப்படும் ஆபரண வகையைத் தயாரிப்பதில் அவர்  கைதேர்ந்தவர். 

பரதநாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றுள்ள நிஷாலினி, பல்வேறு வகையான மணிகளை வெவ்வேறு பதக்கங்களுடன் கலந்து தனித்துவமிக்க ஆபரணங்களைத் தயார் செய்கிறார். பலவித வண்ணக் கலவையில் ஆபரணங்கள் இவர் கைவசம் உள்ளன. சேலைகள், சுடிதார்கள், நவீன உடைகள் என அனைத்து வகையான ஆடைகளுக்கும் பொருந்தும் விதத்தில் ஆபரணங்களை இவர் விற்கிறார்.  

இக்காலத்து இளையர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன இப்பொருட்கள். 

“பழங்காலத்து பாரம்பரிய வடிவங்கள் மீண்டும் தற்காலத்தின் ‘ஃபேஷன்’ ஆக உருவெடுக்கின்றன. அந்த வரிசையில் பாரம்பரிய ‘டெம்பிள் டிசைன்’ நகைகளைச் சற்று புத்தாக்கத்துடன் மாற்றியமைத்தாலும் பழமை மாறாமல், அழகு குலையாமல் அவை இருக்கும்,” என்றார் வைஷ்ணவி. 

“இளையர்கள் மத்தியில் இந்த நகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வகைவகையான உடைகளை அணியும் பெண்கள், அந்தந்த உடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களை அணிய விரும்புகிறார்கள். எங்களிடம் உள்ள ஆபரணங்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்கின்றன,” என்று அவர் கூறினார். ‘பிரஹம் அங்கா’ எனும் பெயரில் இயங்கி வரும் அவர்களது கடை, ஆண்களுக்கான ஆடைகளிலும் தனித்துவம் பெற்றுள்ளது. 

ஆண்களுக்கான ஜிப்பாவைத் தேர்ந்தெடுப்பதில் 29 வயது இளமாறன் அன்பழகன் கைதேர்ந்தவர். 

“வெப்பம் மிகுந்த சிங்கப்பூரில் இதம் அளிக்கும் ஆடைகளை அணிய அனைவரும் விரும்புவார்கள். அதனால் ‘சாட்டின்’ போன்ற துணியைத் தெரிவுசெய்து அதில் ஆடைகளைத் தயாரிக்கிறோம்,” என்றார் இளமாறன். 

“வெளிநாட்டில் வாங்கப்படும் துணிகளைத் திறன் வாய்ந்த தையல்காரர்களிடம் கொடுத்து அதைத் தைத்து கொண்டு வருகிறோம்” என்றார் இளமாறன். 

“பெண்களுக்காக பல கடைகளில் வண்ண வண்ண ஆடைகள் விற்கப்படுகின்றன. ஆனால் ஆண்களுக்கு அதுபோன்ற தெரிவுகள் அதிகம் இருப்பதில்லை என்ற எண்ணம் என் நண்பர்கள் மத்தியில் பரவலாகவே இருந்தது. அதனால் நான் அதற்கு ஒரு தீர்வு காண நினைத்தேன்,” என்றார் அவர். 

“பல வண்ணங்கள், பல வடிவங்கள், பல வகைத் துணிகள், பல டிசைன்கள் என பலதரப்பட்ட தெரிவுகளை வாடிக்கையாளர்களுக்கு அள்ளி இறைக்கவேண்டும் என்ற கடப்பாடு எங்களுக்கு உண்டு. இந்தக் கடையில் விற்கப்படும் எல்லாமே எங்களின் சொந்தத் தயாரிப்பு,” என்று கூறினார் இளமாறன். 

“ஜிப்பாவில் உள்ள பொத்தான்கள் உட்பட நாங்கள் கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பொருத்தமானதை மட்டுமே பயன்படுத்துகிறோம்,” என்று குறிப்பிட்டார். 

அவர்கள் விற்கும் உடைகளின் விலை 70 வெள்ளியில் தொடங்கி 85 வெள்ளி வரையில் உள்ளன. 

வியாபாரம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் முதன் முறையாக கடை அமைத்து வியாபாரம் தொடங்கியது அத்தனை சுலபமாக அமையவில்லை. 

ஆர்வமும் ஆற்றலும் உண்டு, செய்துதான் பார்த்துவிடுவோமே என்ற உத்வேகத்தில் கடை திறப்பதில் தீவிரமாக இருந்த மூன்று நண்பர்களுக்கும் காத்திருந்தது ஓர் அதிர்ச்சி. 

கடையைத் திறக்கப்போகிறோம் என்ற ஆனந்தத்தில் தீபாவளிச் சந்தை நடைபெறும் கூடாரத்திற்குச் சென்றவர்கள், வெறும் பலகைத் தரையையும் இரும்புக் கம்பிகளையும் பார்த்துத் திகைத்தனர்.  தங்களுக்குக் கடை வைக்க ஒதுக்கப்படும் இடம் இப்படித்தான் இருக்கும் என்பதை முன்னரே அறியாமல் இருந்தனர். 

“என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. தரைவிரிப்பு, சுவர் விரிப்பு, விளக்குகள் என அனைத்து அலங்காரங்களையும் நாங்களே வாங்கி கடையை அழகுபடுத்தவேண்டும் என்பது அங்கு சென்றவுடன்தான் எங்களுக்குத் தெரியவந்தது,” என்று தன் முதல் நாள் அனுபவத்தை சுவாரசியத்துடன் பகிர்ந்துகொண்டார் இளமாறன். 

“எங்களைச் சுற்றி உள்ள மற்ற கடைக்காரர்கள் அனைவரும் பல ஆண்டுகளாகச் சந்தையில் கடை நடத்திவருபவர்கள். அவர்களுக்கு இதில் அனுபவம் உள்ளது என்பதாலும் நாங்கள் இளையர்கள் என்பதாலும் அவர்கள் எங்களுக்கு பல ஆலோசனைகளைத் தந்தனர்,” என்றார். மெல்ல மெல்ல கடை நடத்துவது சுலபமான முயற்சி அல்ல என்பதை இந்த இளம் வர்த்தகர்கள் நன்கு அறிந்தனர். 

கடையை அமைக்க இரண்டு நாட்கள் ஆனதாகவும் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் இவர்களுக்குக் கைகொடுத்ததாகவும் இந்த இளையர்கள் உணர்ச்சி பொங்கக் கூறினர்.

இளையர்களின் விருப்பங்களை அறிந்து கடை நடத்தும் இந்த இளையர்கள், பெரியவர்களுக்கான உடைகள், ஆபரணங்களையும் விற்கின்றனர்.

Loading...
Load next