எங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில், தான் மேற்கொண்ட போராட்டங்களுக்காகவும் பிரசாரங்களுக்காகவும் ஏறத்தாழ 80,000 கிலோ மீட்டர், அதாவது பூமியின் சுற்றளவில் இரண்டு மடங்கு தூரத்தை நடந்தே கடந்த மனிதர். 

1893லிருந்து 1915 வரை தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது அங்கு சிறுபான்மை சமூகத்தினராக இருந்த இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடிய சமூகப் போராளி. அமைதிக்கான நோபெல் பரிசுக்காக ஐந்து முறை நியமனம் செய்யப்பட்டவர். 

அதோடு, குறைந்தபட்சம் அப்பரிசை வென்ற அறுவருக்கு தன்னுடைய கொள்கைகளின் வழி முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். எந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக தன்னுடைய வாழ்நாளையே அர்ப்பணித்திருந்தாரோ, அந்த தேசத்தின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்குகொள்ள இயலாமல் கோல்

கத்தாவில் சமய நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்ட மகாத்மா. 

இந்திய தேசிய ராணுவம், 1944ஆம் ஆண்டில் டெல்லிக்கு அணிவகுத்துச் சென்றபோது சுபாஸ் சந்திரபோஸ், ‘தேசத்தின் தந்தை’ என பட்டம் சூட்டியவரின் பிறந்தநாளை ‘காந்தி ஜெயந்தி’ என்று அக்டோபர் 2ஆம் தேதியன்று, இந்தியா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் நினைவுகூருகின்றனர். 

அமைதி வழியில் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடும் அகிம்சையில் ஆழ்ந்த நம்பிக்கையைக் கொண்டதோடு, அந்த நம்பிக்கையை இழக்காமல் தனது இறுதி மூச்சுவரை கடைப்பிடித்து வந்தார் மகாத்மா காந்தி. 

அகிம்சையின் வழியில் அவர் சென்றது, சுமார் நூறு ஆண்டுகளாக பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்று தரும் போராட்டத்தில் வெற்றியையும் ஈட்டித் தந்தது. 

ஒருவர் தவறு என்று எண்ணும் செயலில் ஈடுபடுவதற்கு வன்முறையற்ற முறையில் மறுப்பு தெரிவித்து, உண்மைக்கும் அன்புக்கும் மட்டுமே கட்டுப்படும் சத்யாகிரகத்தை, 1930ல் பிரிட்டிஷ் அரசு, உப்பிற்காக நடைமுறைப்படுத்திய வரியை எதிர்த்து காந்தி செயல்படுத்தினார். அகமதாபாத்திலிருந்து தண்டி வரை, 240 மைல்களுக்கு நடந்து மஹாத்மா காந்தி மேற்கொண்ட உப்பு சத்யாகிரகம் இன்றளவிலும் பலரால் பேசப்பட்டு வருகிறது. 

மகாத்மா காந்தி பின்பற்றிய அகிம்சையும் அக்கொள்கையின் தாக்கமும் இந்தியாவின் எல்லைகளுக்குள் நின்றுவிடவில்லை. 

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரைப் போல், உலகெங்கும் சமூக மாற்றங்களைக் கொண்டுவர அயராது போராடிய பல மாபெரும் தலைவர்களுக்கு பெரும் உந்துதலாக இருந்துள்ளது. 

காந்தியின் அகிம்சையைக் கண்டு வியந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், அக்கொள்கையை அனைத்து வித மக்களின் மீதான, பாகுபாடற்ற அன்பின் வெளிப்பாடாக கருதத் தொடங்கினார். 

ஆனால், அறத்தின் வழியில் வன்முறைக்கு மாற்றாக அகிம்சையை ஆயுதமாக ஏந்திய மகாத்மா காந்தியின் கொள்கைகள் தனித்தன்மை வாய்ந்தவை. 

தன்னுடைய வாழ்நாளில் அவர் கடைப்பிடித்த தார்மீக பண்புநலன்கள், அவருடைய அரசியல் செயல்பாடுகளின் மீதும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவை இரண்டையும் நம்மால் பிரித்துப் பார்க்க இயலாததே அவரை பிற சமூகத் தலைவர்களிடமிருந்து மாறுபடுத்துகிறது. 

ஆகவே, காந்தியின் கொள்கைகளை ஆராயும்போது, அவற்றுக்குப் பின்னால் அடிப்படையாக இருந்தது சமத்துவமும் மனிதநேயமும்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இவ்விரு முக்கியமான விழுமியங்களும் அவருடைய தனி மனித நடத்தையிலும் அரசியல் நகர்வுகளிலும் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன. 

அதோடு, சமத்துவமும் மனிதநேயமும் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாக இருந்ததால், அவர் இன்றுவரை அனைத்துலக அளவில் மாபெரும் தலைவர்களால் போற்றப்பட்டு வருகிறார். 

இருப்பினும், அவருடைய கொள்கைகள் இன்றைய காலகட்டத்திற்கு உகந்தவையா என்ற கேள்வி பல விவாதங்களின் மையக் கருப்பொருளாக தொடர்ந்து இருந்துகொண்டு வருகின்றது. 

சமுதாயம் பெருமளவில் முன்னேற வேண்டுமென்றால் ஏழை எளியவர்களின் வாழ்வும் மேம்படவேண்டும் என்பதை நன்கறிந்ததால்தான் நாட்டு மக்களிடையேயான சமத்துவத்தை தானும் உணர்ந்ததோடு, பிறருக்கும் அவர் போதித்தார். 

ஒரு நாடு தன்னுடைய சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அமைப்பைக் கொண்டிருந்தால் மக்களிடைய ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடுகள் ஒழியும் என்று எண்ணிய அவர், கைத்தறி, பருத்தி விளைவிப்பது, விவசாயம் போன்ற கிராமப்புற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு குரல்கொடுத்தார். அதோடு, அவரே கைத்தறி ஆடைகளை உடுத்திக்கொள்வேன் என்று உறுதிபூண்டார்.

மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய காலகட்டத்திலும், பிறர் மீது காட்டும் மனிதநேயத்தையும் பொதுநலத்தையும் முக்கியமாகக் கருதினார். 

இந்தியாவின் சுதந்திரம் பிற நாடுகளுக்குச் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், உலகத்திற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே அவருடைய நம்பிக்கையாக இருந்து வந்தது. 

இந்தியா, சமயங்களின் அடிப்படையில் இரு வேறு நாடுகளாக பிளவுபடக்கூடாது என்பதற்காக இறுதிவரை போராடிய அவரின் கனவு நனவாகாமல் போயிருக்கலாம். 

இருப்பினும், இன மற்றும் சமய நல்லிணக்கத்தை முழுவதுமாகப் பேணியவர். அதன் காரணமாகவே, 1948ல் பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவிருந்த தருணம் பார்த்து சுட்டுக்கொல்லப்பட்டார்.