கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் பிரணவ்

‘நம் கட்டுப்பாடுகளை நம்மால் உணர முடிந்தால் அவற்றை மீறிச் செயல்படுவோம்’ என்று அறிவியலாளர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் கூறிய சொற்களுக்கு ஏற்ப இளைஞர் பிரணவ் பாலு, 19, சாதித்து வருகிறார்.

பிறப்பிலிருந்து பிரணவுக்கு ‘ஹெமிப்லேஜியா’ (hemiplegia) எனும் நரம்பு தொடர்பான பிரச்சினை இருந்தது. இதனால் இவரது உடலின் வலதுபக்க அசைவுகள் கட்டுப்படுத்தப்படும்.

தொடக்கப்பள்ளி நாட்கள் பலருக்கும் மலரும் நினைவுகளைத் தரும். ஆனால் பிரணவுக்குக் கசப்பான அனுபவங்களே அமைந்தன.

அவரிடம் இருந்த மருத்துவச் சிக்கலால் தான் படித்த தொடக்கப்பள்ளியில் சக மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் பிரணவ் ஆளானார். இப்பிரச்சினைகளைப் பெரிதாகக் கருதாமல் தொடர்ந்து நடைபோட பிரணவுக்குக் காற்பந்து விளையாட்டு சிறந்த வழியாக அமைந்தது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களை விரும்பிப் பார்க்கும் பிரணவ், செல்சி குழுவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ஈடன் ஹசார்ட்டின் அபாரத் திறனைக் கண்டு வியந்தார். தாமும் அவரைப் போன்று சிறந்த காற்பந்து விளையாட்டாளராக வேண்டும் என பிரணவ் கனவு கண்டார்.

உடல் அசைவுகளில் இருந்த கட்டுப்பாடு, ஒருபோதும் இவர் ஆசைக்குத் தடையாகக் குறுக்கே நிற்கவில்லை. துடிப்புடன் திடலில் களமிறங்கினார் பிரணவ்.

தாம் பயின்ற ஃபர்ஸ்ட் தோ பாயோ தொடக்கப்பள்ளியிலும் அதைத் தொடர்ந்து நார்த்லைட் பள்ளியிலும் காற்பந்துக் குழுவில் சேர்ந்து பயின்றார்.

தமது பயிற்றுவிப்பாளர் பரிந்துரையில் ஃபாண்டி அகமது காற்பந்துப் பயிலகத்தில் ஓர் இடத்தைப் பெற்றார். காற்பந்தாட்டத் திறமையில் முன்னேற்றமும் அடைந்தார். இதனால் பெருமூளை வாதம் (cerebral palsy) உடையவர்களுக்கென உள்ள தேசிய காற்பந்துக் குழுவின் தெரிவு ஆட்டத்தில் அசத்தி, தனது 16வது வயதிலேயே ஆக இளைய விளையாட்டாளராக குழுவில் சேர்க்கப்பட்டார்.  

‘‘தேசிய குழுவில் இடம்பெறும் வாய்ப்பு, கடவுள் எனக்குத் தந்த வரமாகக் கருதுகிறேன். நாட்டைப் பிரதிநிதித்து விளையாடும் தருணத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்,’’ எனக் குழுவில் சேர்க்கப்பட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டார் பிரணவ்.

அவர் காத்திருந்த தருணமும் வந்தது. 2017ஆம் ஆண்டில் நடந்த ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டியில், கம்போடியா குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரணவ் இடம்பெற்றார்.

தாக்குதல் ஆட்டக்காரராக வந்த பிரணவ், ஆட்டத்தில் கோல் எதுவும் போடவில்லை. ஆனால் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பிலிப்பீன்சில் நடக்கவிருக்கும் 10வது ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டியில் நாட்டுக்காக எப்படியும் கோல் புகுத்தும் இலக்குடன் தீவிர பயிற்சி செய்து வருகிறார் இவர்.

எடை தூக்குவது முதல் உடலை வலுவாக்கும் பல்வேறு உடற்பயிற்சிகள் மூலம் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டு வருகிறார் பிரணவ்.

எதிர்காலத்தில் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பங்காற்ற வேண்டும் என்று காலமான தமது தந்தை எப்போதும் வலியுறுத்தியதாகவும் அதனையே வேதமந்திரமாகக் கடைப்பிடித்து வருவதாகவும் கூறினார் தொழில்நுட்பக் கல்விக் கழக (மத்திய கல்லூரி) சில்லறை வர்த்தகச் சேவைத் துறையில் பயிலும் இந்த 19 வயது இளையர். 

‘‘ஒழுக்கத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக பிரணவ் திகழ்கிறார். படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டே வாரத்தில் நான்கு நாட்கள் தவறாமல் பயிற்சிக்கு வந்துவிடுவது அவரின் கடப்பாட்டுக்குச் சான்று,’’ என்று தெரிவித்தார் தேசிய பெருமூளை வாதம் உடையவர்களுக்கான தேசியக் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் முகம்மது அசார்.

அடுத்தாண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பிலிப்பீன்சில் நடக்கவிருக்கும் உடற்குறையுள்ளோருக்கான 10வது ஆசியான் விளையாட்டுப் போட்டியில் இந்த நம்பிக்கை நட்சத்திரம் களமிறங்கவுள்ளது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்