சுடச் சுடச் செய்திகள்

சீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்

புளோக் 116 தோ பாயோ லோரோங் 2ல் உள்ள காப்பிக் கடையில்,  ‘லீனா ஃபிஷ்பால் நூடல்ஸ்’ கடைக்குச் சென்று உணவு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது.

இந்த உணவு வகையை பெரும்பாலும் சீனர்கள் சமைப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்திய இளையரான ஜீவன் ஆனந்தனின் கைப்பக்குவம் வாடிக்கையாளர்கள் பலரை இவரது கடைக்கு ஈர்த்துள்ளது.

சரியாக படிக்காதவர்கள், வேலை கிடைக்காதவர்கள் மட்டுமே உணவங்காடி நிலையத்தில் கடையை நடத்துவார்கள் என்று எண்ணுபவர்களின் மனப்போக்கை மாற்றியுள்ளார் இவர்.

வங்கி, நிதித் துறையில் பட்டப் படிப்பை முடித்து ஐந்து ஆண்டுகளாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் பணிபுரிந்தவர் திரு ஜீவன், 28.

அலுவலக சூழலில் வேலை செய்த இவர், இன்று அடுப்புக்கு முன்னால் நின்று பல மணி நேரம் நூடல்ஸ்  உணவைச் சமைக்கிறார்.

இருப்பினும், முகம் சுளிக்காமல் வாடிக்கையாளர்களை உபசரிப்பதற்கு இவரின் அதீத ஆர்வம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது.

உணவுத் தொழிலைத் தொடங்கிய மூன்றே மாதங்களில் வாடிக்கையாளர் கூட்டத்தை ஈர்ப்பதில் இவரது வருங்கால துணைவியாரான குமாரி மே லீனா கிருஷ்ணனும் பக்கபலமாக இருந்து வருகிறார்.

வர்த்தக துறையில் பட்டப்

படிப்பை  முடித்த குமாரி மே, 29, மின்னியல் விளம்பரத் துறையில் சில ஆண்டுகள் வேலை செய்ததை அடுத்து திரு ஜீவனுடன் இணைந்து உணவுத் துறையில் கால் பதிப்பது குறித்து யோசித்தார்.

ஒரே தொடக்கக் கல்லூரியில் பயின்ற இவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் மீண்டும் சந்திப்பு ஏற்பட்டு இருவரிடையே காதல் மலர்ந்தது.

கல்விப் பயணத்தை அடுத்து வேலைக்குச் சென்ற இவர்கள், ஒன்றாக சேர்ந்து தொழில் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று சென்ற ஆண்டு முடிவெடுத்தனர்.

எந்த வியாபாரத்தைத் தொடங்கலாம் என்று நினைத்த இவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது.

இக்காலத்து இளையர்கள் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள் போன்ற இடங்களில் தங்களது நண்பர்களோடு அதிக நேரம் செலவிடுகின்றனர்.

ஆனால், திரு ஜீவனும் குமாரி மேயும் சற்று வித்தியாசமான இளையர்கள். பெரும்பாலும் காப்பிக் கடைகளில்தான் தங்களுக்குப் பிடித்த உணவை வாங்கி  இவர்கள் சாப்பிடுவார்களாம்.

அவற்றில் ‘ஃபிஷ்பால் நூடல்ஸும்’ ‘சிக்கன் ரைஸும்’ இவர்களுக்குப் பிடித்தமானவை.

தாங்கள் விரும்பி உண்ணும் ‘ஃபிஷ்பால் நூடல்ஸ்’ உணவை விற்று வியாபாரம் செய்யலாம் என்று முடிவெடுத்த இவர்கள், கடந்த மூன்று மாதங்களாக ‘லீனா ஃபிஷ்பால் நூடல்ஸ்’ உணவுக் கடையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் சேமித்து வைத்த பணத்தில் ஐந்திலக்க தொகையை முதலீடு செய்து இக்கடையைத் திறந்தனர்.

பல கடைகளில் அங்காடிக்கா ரர்கள் ‘ஃபிஷ்பால் நூடல்ஸ்’ சமைக்கும் முறையைக் கவனித்து வந்த திரு ஜீவன், சமையல் நிபுணர் ஒருவரிடம் இந்த உணவைத் தயாரிக்கும் திறனைக் கற்றார்.

தமது திறனில் நம்பிக்கை ஏற்பட்ட பிறகே வியாபாரத்தில் களமிறங்கினார் திரு ஜீவன்.

இந்தியர் ஒருவர் ‘ஃபிஷ்பால் நூடல்ஸ்’ விற்பதைப் பார்த்து பல வாடிக்கையாளர்கள் ஆச்சரியப்பட்டாலும் இவர் அதைப் பக்குவமாக சமைப்பாரா என்ற சந்தேகமும் பலரிடையே எழுந்தது.

அதனால் தொடக்கத்தில் சிலர் இவர்களது கடையில் உணவு வாங்குவதைத் தவிர்த்துக்கொண்டாலும், தமது இனிய குரலால் அவர்களைச் சுண்டி இழுத்தார் குமாரி மே.

இந்திய-சீன தம்பதிக்கு பிறந்த குமாரி மே, சீன மொழியில் தமது வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசி அவர்களை கடைக்கு அழைப்பார்.

“இந்தியர் ஒருவர் எப்படி சீன உணவைத் திறம்பட சமைப்பார் என்று வாடிக்கையாளர்கள் சிலர் சந்தேகித்தனர். அவர்களை அன்போடு எங்களது கடைக்கு அழைத்து, ஜீவன் சமைக்கும் உணவை ஒருமுறை சாப்பிட்டுப் பார்க்கச் சொல்வேன்.

“எங்களுக்கு உதவிக்காக பகுதி நேர பணியாளர் இருந்தாலும் ஜீவனின் கைப்பக்குவ சமையலால் அசந்துபோன வாடிக்கையாளர்கள்,  அவர் கடையில் இருக்கும் நேரம் பார்த்து வருவார்கள்,” என்று தங்களது தொழில் வளர்ச்சி குறித்து பேசினார் குமாரி மே.

காலை 7 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இயங்கும் இக்

கடையில் $3க்கு ‘ஃபிஷ்பால் நூடல்ஸ்’, $3.50க்கு காளானும் அரைத்த இறைச்சியும் கொண்ட நூடல்ஸ் என பற்பல நூடல்ஸ் வகை விற்கப்படுகின்றன.

காலை 7 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை கடையில் வியாபாரம் செய்யும் திரு ஜீவனும் குமாரி மேயும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்வதைப் பாரமாக கருதவில்லை.

தங்களது குழந்தையைப்போல் இந்தக் கடையைக் கருதும் இவர்கள், தொழில் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.

அதே உத்வேகத்துடன் செயல்பட்டு வரும் இவர்கள், தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 50 வாடிக்கையாளர்களை ஈர்த்தாலும் இன்று திரு ஜீவன் சமைக்கும் ‘ஃபிஷ்பால் நூடல்ஸை’ ருசிப்பதற்காக தினந்தோறும் ஏறத்தாழ 200 வாடிக்கையாளர்கள்  கடைக்கு வருகிறார்கள்.

கடையைத் தொடங்குவதற்கு முன் ஜீவன்-மே இணையின் வருமானத்தைச் சேர்த்தால் $10,000ஐ எட்டியது.

தற்போது அதைவிட சற்று கூடுதல் வருமானம் ஈட்டும் இவர்கள், முன்னேற்றத்திற்கு எல்லையில்லை என்று நம்புகின்றனர்.

ஒவ்வொரு நாளும் தமது சமையல் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கு முற்படும் திரு ஜீவனுக்கு இவரது பெற்றோர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.

“நான் எந்த வேலையைச் செய்தாலும் அதற்கு எனது பெற்றோர் ஆதரவளிப்பர்.  இக்கடையைத் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளேன் என்று கூறியபோது எனக்கு  அவர்கள் நம்பிக்கையூட்டினர்.

“அவர்களைப்போல் மேயுடைய பெற்றோரும் எங்களை ஊக்குவித்து வருகின்றனர். மே இதைப் பற்றி அவருடைய பெற்றோரிடம் கூறியபோது சற்று ஆச்சரியப்பட்டாலும் எங்களது முயற்சிக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை,” என்றார் திரு ஜீவன்.

சீன உணவை விற்றாலும் தமிழ்மொழி இவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. தினந்தோறும் தமிழ்ப் பாடல்களைக் கைபேசியில் ஒலிக்கசெய்து வியாபாரம் செய்யும்போது வேலை வேகமாக நடக்கும் என்கிறார் திரு ஜீவன்.

குறிப்பாக, ‘சின்ன சின்ன  ஆசை,’ என்ற பாடல் வரிகளுக்கு இசைத்துக்கொண்டே வியாபாரம் செய்வதில் இன்புறுகிறார் குமாரி மே.

இந்தியர் ஒருவர் நூடல்ஸ் சமைப்பதைப் பார்த்து வியந்துபோன திருமதி லியோங் பேய் டேங், 31, அடிக்கடி தமது கணவருடன் இக்கடைக்கு வருவாராம். தமது சுவைக்கேற்ப திரு ஜீவன் சமைப்பதால் தொடர்ந்து இக்கடையில் சாப்பிட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

“பாக் சோர் மீயில் அவர் சேர்க்கும் காளான் வகையும் சுவைச்சாறும் ருசியைத் தரும். இந்திய இளையர் ஒருவர், சீன உணவைச் சமைத்து பிரபலம் அடைந்துள்ளதை முதன்முறையாக பார்க்கிறேன். என்னுடன் வேலை செய்பவர்களுக்கும் இந்த  நூடல்ஸை வாங்கிக் கொடுப்பேன்,” என்று கூறினார் திருமதி லியோங்.  

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தோ பாயோவில் வசித்து வரும் திரு யோ, 60, வாரத்தில் நான்கு முறை இவர்களது கடையில் நூடல்ஸ் வாங்குகிறார். 

“ஜீவன் செய்யும் நூடல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குறிப்பாக, இவரது ‘பாக் சோர் மீ, இவ்வட் டாரத்தில் உள்ள மற்ற கடைகளைவிட சுவையாக இருக்கும். எனது நண்பர்களிடமும் இவரது கைப்பக்குவத்தைப் பற்றி கூறியுள்ளேன். அவர்களும் அடிக்கடி இங்கு வந்து நூடல்ஸ் வாங்குவர்,” என்றார் திரு யோ.

‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற கூற்றை நம்புகிற திரு ஜீவனும் குமாரி மேயும், இந்த வியாபாரத்தில் சவால்களைச் சந்திக்கும்போதெல்லாம் மனந்தளராமல் தொடர்ந்து தங்களது இலக்கை அடைய முயற்சி செய்வோம் என்று குறிப்பிட்டனர்.

தற்போது உள்ள இந்த சிறிய கடையைப் பல இடங்களுக்கு விரிவுபடுத்தி உணவின் ருசியை நாடு முழுவதும் பரவச் செய்வதே இவர்களின் நீண்டகாலத் திட்டமாகும்.