இலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்

உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலிருந்து பேச்சு, விவாதப் போட்டிகளில் செ.சுஜாதாவுக்கு அதிக நாட்டம் இருந்தது.

“சட்டம் தொடர்பாக ஏதாவது பிரச்சினையை எதிர்நோக்கினால் வழக்கறிஞர் ஒருவரைப் பாருங்கள்,” என்று பிறர் கூற கேட்டிருக்க, அப்பணியைப் பற்றி மேலும் அறியும் ஆர்வத்தை இவருக்கு தூண்டியது.

எதிர்காலத்தில் ஒரு வழக்கறிஞராகி பிறரைச் சிக்கல்களிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற கனவுடன் இவர் செயல்பட்டார்.

ஆனால், இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிங்கப்பூர் திரும்பிய சுஜாதாவுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

சட்டத் துறையில் பட்டப்படிப்பை முடித்து சிங்கப்பூர் திரும்பும் பட்டதாரிகள் குறைந்தது இரண்டாம் ‘அப்பர் கிளாஸ்’ இளநிலை பட்டக்கல்விச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று வழக்கறிஞராக செயல்படுவதற்கான விதிமுறை

களைச் சட்ட அமைச்சு செயல்படுத்தியது சுஜாதாவுக்கு பின்னடைவாக அமைந்தது. ஏனெனில், இவர் பெற்றிருந்த மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை.

அன்றிலிருந்து எப்படியாவது நினைத்ததை நிறைவேற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் சுஜாதா செயல்படத் தொடங்கினார். அதே பல்கலைக்கழகத்தில் மேற்

படிப்பைத் தொடர்ந்த இவர், முதுநிலைப் பட்டக்கல்வியை முடித்து 2007ஆம் ஆண்டு சிங்கப்பூர் திரும்பினார். பின்னர் சட்ட அதிகாரியாக ஈராண்டுகள் பணியாற்றினார்.

ஈராண்டுகளுக்கு பிறகு வழக்கறிஞர்கள் சங்கத்தில் சேர இவர் விண்ணப்பித்தபோது வெற்றி கிடைத்தது. இவரது நீண்ட நாள் கனவும் கைகூடியது.

‘‘கனவை நோக்கிச் செயல்படும்போது பல தடங்கல்கள் வரும். அப்படி வரும்போது, கனவை ஒட்டு மொத்தமாக கைவிட்டுவிடாமல் அதனை நோக்கிச் செயல்பட வேண்டும் என்பதை அந்த அனுபவம் எனக்கு கற்றுக்கொடுத்தது,’’ என்று கூறினார் சுஜாதா, 34. 

மற்ற இளையர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிண்டாவின் இளையர் மன்றத்தில் தொண்டூழியராக சேர்ந்த சுஜாதா, அவர்களுடன் இணைந்து செயல்

படுவதில் ஒருவித திருப்தி கிடைக்கிறது என்கிறார். தற்போது அம்மன்றத்தின் தலைவராக இவர் பொறுப்பு வகிக்கிறார்.  

வழக்கறிஞர் பணிக்கு அப்பால், பலதரப்பட்ட தொண்டூழிய சேவைகளில் இவர் ஈடுபடுகிறார்.

அடித்தள அமைப்பு, வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் போன்றவற்றில் தொண்டூழியம் புரிய ஆரம்பித்த சுஜாதா, 2016ல் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளராக செயல்பட்டார்.

குற்றவியல் இலவச சட்ட சேவை திட்டத்தில் சேர்ந்து, சமூக நீதித் துறை மையத்தில் உள்ள சட்ட சேவை நிலையங்களில் ஆலோசனை வழங்கி, பாதிப்படைந்தவர்

களுக்கு இவர் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.      

கடந்த சில ஆண்டுகளாகவே இவர் இதற்கென 4,000 மணி நேரம் இலவச சட்ட சேவை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஓர் அனுபவத்தை இவர் பகிர்ந்துகொண்டார். ஒருமுறை, வாக்குவாதத்தின்போது பாதுகாவல் அதிகாரியான மலேசிய ஆடவர் ஒருவர், சக பெண் ஊழியரை அடித்துவிட்டதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தொடர்பில் சுஜாதாவின் உதவியை நாடினார். அந்தப் பெண்ணைத் தாம் அடிக்கவில்லை என்று சுஜாதாவிடம் அந்த ஆடவர் கூறினார்.       

வழக்கு முடியும் வரை அந்த ஆடவரால் வேலையைத் தொடர முடியவில்லை. தமது சொந்த நாட்டுக்கும் அவரால் திரும்ப முடியாத சூழ்நிலை. தாயாரும் அவரது நான்கு உடன்பிறப்புகளும் அந்த ஆடவரின் வருமானத்தைத்தான் நம்பியிருந்தனர். 

ஆறுமாத காலமாக அந்த ஆடவருக்கு உதவ சுஜாதாவும் அவரது குழுவினரும் முன்வந்தனர். இறுதியில், அந்தப் பெண் முன்னுக்கு பின் முரணாக சாட்சியமளித்து வாக்குமூலத்தை ஜோடித்துள்ளார் என்பது நிரூபணமானதையடுத்து அந்த ஆடவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மீட்டுக்கொள்ளப்பட்டது.

‘‘இங்கு வேலை செய்ய முடியாத பட்சத்தில் நண்பரின் வீட்டில் தங்கி, நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டும் உணவருந்தி, சுமார் 20 கிலோ எடை குறைந்து உடல் மெலிந்துபோனார் அந்த ஆடவர். அவருக்கு பண உதவியையும் அவ்வப்போது வழங்கினோம்,’’ என அந்த வழக்கை நினைவுகூர்ந்தார் சுஜாதா.

இப்படி பாதிப்புக்குள்ளாகும் வெளிநாட்டு ஊழியர்கள், வன்

முறையால் பாதிக்கப்படும் பெண்கள், இணைய அச்சுறுத்தலால் அவதிப்படும் இளையர்களுக்கு தன்னலமற்ற சட்ட ஆலோசனை வழங்கும் சுஜாதாவுக்கு இவ்வாண்டின் சிங்கப்பூர் இளையர் விருது வழங்கப்பட்டது.

பிரசித்திபெற்ற தேசிய அளவிலான இந்த விருது, 1975ல் அறிமுகம் கண்டது. சமுதாய மேம்பாட்டுக்கு சிறப்பாக பங்களித்து வரும் முன்மாதிரி இளையர்களை இந்த விருது கெளரவித்து வருகிறது.

“கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக வெவ்வேறு தொண்டூழிய பணிகளில் ஈடுபட்டதற்கான அங்கீகாரம் இந்த விருது மூலம் கிடைத்துள்ளது. 

“தொடர்ந்து திறம்பட சேவையாற்ற வேண்டும் என்ற உந்துதலை இவ்விருது அளிக்கிறது,’’ என்று தெரிவித்தார் சமூகத்திற்கு உதவ கடப்பாடு கொண்டுள்ள இந்த இளையர்.