இளம் கவிஞர்களுக்கான புது திட்டம்

இளையர்களுக்காக ஓராண்டு காலம் நீடிக்கும் கவிதை பயிற்சித் திட்டம் ஒன்றை கவிமாலை அமைப்பு தொடங்கியுள்ளது.  

இதன் தொடக்க நிகழ்ச்சி இம்மாதம் 10ஆம் தேதி கேலாங் பொது நூலகத்தில் நடைபெற்றது.  

இந்தத் திட்டத்தில்  60க்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். 

நீர், நிலம், காற்று, பூமி, ஆகாயம் ஆகிய பெயர்களில்  ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த மாணவர்களுக்கு கவிமாலை அமைப்பைச் சேர்ந்த ஐந்து கவிஞர்கள் வழிகாட்டிகளாகச் செயல்படுவர். 

இம்மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் வரை இந்த வழிகாட்டிகள்  மாணவர்களைக் கலந்துரையாடல்களிலும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபடுத்துவர். 

சுபாஷினி கலைக்கண்ணன். ராஜு ரமேஷ், தாயுமானவர் மதிக்குமார், கோ.இளங்கோவன், கி.கோவிந்தராஜன் ஆகியோர் இந்தத் திட்டத்தின் வழிகாட்டிகளாக செயல்படுவர். 

இந்த வழிகாட்டிகளுடன்  ஒருங்கிணைப்பாளர், ஆலோசனைக் குழுவினர், மூத்த வழிகாட்டி குழுவினர் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவர்.

தமது தமிழாசிரியரின் ஊக்குவிப்பால் இதுவரை  தமிழ் சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக சுவேதா முத்து, 19, கூறினார். தமிழில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையினால்தான் இந்தத் திட்டத்தில் தாம்  கலந்துகொண்டதாகத் தெரிவித்தார். 

“கவிதையை எப்படி எழுத வேண்டும், அடிப்படை இலக்கணப் பிழையின்றி எப்படி அதை எழுதுவது என்பதைக் கற்றுத் தரும் பயிற்சி வகுப்புகளில் நான் சேர விரும்பினேன். 

“எனது தனித்துவமான உணர்ச்சிகளையும் புதிய தலைமுறையினரின் சிந்தனைகளையும் இணைத்து புதிய கவிதைகளை உருவாக்குவதே எனது  விருப்பம்,” என்றார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவியான சுவேதா. 

மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியாக கவிதைகள் இருக்கவேண்டும் என்பதற்காக முகுந்த் நாகராஜன், யூமா வாசுகி போன்ற பல கவிஞர்களின் படைப்புகளை இளையர்களுக்குப் பரிந்துரைப்பதாகக் கூறினார் பயிற்சித் திட்டத்தில் பங்கெடுக்கும் வழிகாட்டிகளில் ஒருவரான  திரு ராஜு ரமேஷ், 49.

“மாணவர்களை ஈடுபடுத்துவது சவாலான ஒன்று. ஏனெனில் மாணவர்களின் மொழி நடை, அவர்களைச் சார்ந்த கருப்பொருள் ஆகியவை பெரியவர்களிடமிருந்து வேறுபடுகின்றன. 

“எழுத்துத் தமிழில் அதிக கவனம் செலுத்துவதற்குப் பதிலாக பேச்சு மொழி, ஆங்கில வார்த்தைகள் ஆகியவற்றைத் தேவைக்கேற்ப பயன்படுத்தும் சுதந்திரத்தை வழங்கினால் இளையர்கள் மேலும் கவிதையில் ஈடுபடுவர் என நம்புகிறேன்,” என்றார் அவர்.

மற்றொரு வழிகாட்டியான தாயுமானவர் மதிக்குமார், 36, மாணவர்களுடன் நண்பரைப்போல பழகி அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டதால் இந்நிகழ்ச்சியில் நல்ல கருத்து பரிமாற்றமும் கற்றல் அனுபவமும் ஏற்பட்டதாக கூறினார். 

“தங்களது அன்றாட வாழ்க்கை,  உள்ளுணர்வுகள் ஆகியவற்றைச் சார்ந்த கவிதைகளை மாணவர்கள் விரும்புகின்றனர். 

“வீட்டுப்பாடம், சிற்றுண்டி, இரு பெற்றோரும் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் தனிமை உணர்வு, நண்பர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு போன்றவற்றைப் பற்றிய கவிதைகளின் மீது அவர்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது,” என்று கவிமாலை அமைப்பின் துணைப் பொருளாளரான திரு மதிக்குமார் கூறினார்.

கவிதை எழுதுவது பற்றிக் கற்றுக்கொள்ள வந்திருக்கும் மாணவர்கள், ஒரு நாள் மட்டும் பயிலரங்கிற்கு வந்து போவதற்குப் பதிலாக அவர்களைத் தொடர்ச்சியாக கவிதைத் துறையில் ஈடுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று பயிற்சித் திட்டத்தின் ஏற்பாட்டாளரும் கவிமாலை அமைப்பின் தலைவருமான திருமதி இன்பா தெரிவித்தார்.

“இந்தத் தொடர்ச்சியின் மூலம் கவிதை மீதான மாணவர்களது ஆர்வமும் புரிதலும் மேலும் ஆழமாகும்.   தமிழ் மொழித் தொடர்பு விட்டுப்போன மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் கவிதையோடு பயணிக்க  வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.” என்றார் திருமதி இன்பா. 

இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இசை, மேடை உரை அங்கங்களுடன் “கவி விதை கவிதை” என்ற நாடகமும் படைக்கப்பட்டது. 

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன்  இந்நிகழ்ச்சியில் உரையாற்றினார்.