உலக அரசியல், பொருளியல், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தொடர்பில் பல்வேறு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்தன.
சிங்கப்பூருக்கு இது மறக்க முடியாத ஆண்டு. இருநூற்றாண்டு நிறைவு, 700 ஆண்டு வரலாறு, 1000 ஆண்டு தமிழர் தடம் என்று வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்த்தோம். இந்த பலத்தோடு, தொழில்நுட்பம், மின்னிலக்கம், புதிய தலைவர்கள், சட்டங்கள் என்று முன்னோக்கிச் செல்கிறோம்.
நான்காம் தலைமுறைத் தலைவர்கள் ஆக உயரிய அரசாங்கப் பொறுப்புகளை ஏற்றனர். தரம் பிரித்தல் நீக்கப்பட்டது கல்வித்துறையில் பெரிய மாற்றம். விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) என்று இனி இல்லாமல் பாட அடிப்படையிலான தரம்பிரித்தலை கல்வி அமைச்சு அறிவித்தது.
புகைபிடித்தலைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் அறிமுகம், இணையத்தில் போலிச் செய்திகள் பரவுவது தொடர்பில் புதிய சட்டத் திருத்தங்கள், நடைபாதையில் தனிநபர் நடமாட்ட சாதனங்களின் பயன்பாட்டுக்குத் தடை என்று சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
உயர்கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை பற்றிய விவாதம் சூடுபிடித்து, இந்த ஆண்டின் முக்கிய விவாதப் பொருள் ஆனது.
உலகத்திலும் எதிர்பாராத மாற்றங்கள், சிக்கல்கள். அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப்போரில் இறங்கியதால் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியாவில் காலடி வைத்த முதல் அமெரிக்க அதிபரானார். ஆனாலும் இருநாடுகளும் ஒன்றை ஒன்று மிரட்டி, உலகைப் பயமுறுத்திக்கொண்டிருக்கின்றன.
சீனாவின் நாடுகடத்தும் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் கிளர்ந்த போராட்டத்துக்கு இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை.
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் ஏற்பட்ட தாக்குதலும் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளும் இவ்வாண்டின் ஆகக் கடுமையான பயங்கரவாதத் தாக்குதல்களாக நடந்தன.
தமிழ் மொழி, தமிழர்களின் தொன்மைச் சிறப்பை நிரூபிக்கும் கீழடி ஆய்வுகள் இந்த ஆண்டும் உலகின் கவனத்தை ஈர்த்து நமக்குப் பெருமை சேர்த்தது.
அவென்ட்சர்ஸ், கேம் ஆஃப் துரோன்ஸ் முடிவுக்கு வந்ததும் சூப்பர் ஹீரோக்களின் முடிவும் பலருக்கும் வருத்தம் அளித்த ஒன்று.
ஃபேஸ்புக், டுவிட்டரிலிருந்து இன்ஸ்ட்கிராமுக்கு மாறி டெலிகிராம், ஸ்நாப்சாட் மேலும் புதிய சமூக ஊடகங்கள் பிரபலமாகியுள்ளன. புதிய ஆண்டில் உங்கள் சிந்தனைகளை நீங்கள் இளையர் முரசுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சல்: tmyouth@sph.com.sg
