புதிய கல்வி முறையால் சிறந்த கற்றல் அனுபவம்

சிங்கப்பூரின் உயர்நிலைக் கல்வித் திட்டத்தில் இடம்பெறவிருக்கும் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டு திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு சோதித்துப் பார்க்கத் தொடங்கியுள்ள பள்ளிகளில் பிங் யி உயர்நிலைப் பள்ளியும் ஒன்று.

இந்தப் புதிய திட்டத்தால் தாம் அடையவுள்ள பயன்களைப் பகிர்ந்துகொண்ட அப்பள்ளியின் வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) பிரிவின் உயர்நிலை இரண்டாம் ஆண்டு மாணவியான ஹாஜா மைதீன் அசிமதுல் ஜாஃப்ரியா தற்போது புவியியல், கணிதம், அறிவியல், தமிழ்மொழி ஆகிய பாடங்களை விரைவுநிலை வகுப்புகளில் படித்து வருகிறார்.

தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தில் ‘ஏ’ மதிப்பெண்ணைப் பெற்றதன் காரணமாக உயர்நிலை ஒன்றிலேயே தமிழ்மொழிப் பாடத்தை விரைவுநிலைப் பிரிவில் எடுக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.

அத்துடன், உயர்நிலை ஒன்றில் புவியியல், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றதால் அவர் அந்தப் பாடங்களையும் தற்போது விரைவுநிலைப் பிரிவில் படித்து வருகிறார்.

“விரைவுநிலைப் பாடங்களை படிப்பதில் எனக்கு சிரமம் இருக்காது என்று நம்புகிறேன். நான் மிகவும் விரும்புகின்ற தமிழ்மொழியில் சிறந்த தேர்ச்சி பெற்றதால், அதை விரைவுநிலைப் பிரிவில் பயில்வதில் எந்தவித சிரமத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை. 

“மேலும், விரைவுநிலைப் பிரிவில் பயில்வதால் தமிழ்மொழி கற்றலில் எனக்கிருந்த ஆர்வம் அதிகரித்ததுடன் சக மாணவர்களின் உதவியும் என்னை சிரமமான கட்டங்களில் பாடங்களைச் செவ்வனே செய்யத் தூண்டின,’’ என்ற 14 வயது ஜாஃப்ரியா, மற்ற மூன்று பாடங்களை விரைவுநிலைப் பிரிவில் பயில்வதன் மூலம் அவற்றை ஆழமாகப் பயின்று தமது திறன்களை வளர்த்துக்கொள்ள முடிவதாகக் கூறினார். 

அதே பள்ளியைச் சேர்ந்த மகி பாலன், உயர்நிலை ஒன்றில் தமிழ்மொழிப் பாடத்தை விரைவுநிலைப் பிரிவில் பயிலத் தொடங்கியபோது சிறிது சிரமத்தை எதிர்நோக்கினாலும்,  இதன் மூலம் தாம் அடைந்த நன்மைகளைப் பட்டியலிட்டார்.

“என்னுடன் பயிலும் சக மாணவர்கள் எனக்குப் பல நல்ல தமிழ் நூல்களை அறிமுகப்படுத்தி தமிழ் மொழிப் பாடத்தில் நான் முன்னேற ஊக்குவித்தனர்.

“நான் தமிழ்மொழிப் பாடத்தில் ஆழமான அறிவைப் பெற முடிகிறது. அத்துடன், தமிழ்மொழி சார்ந்த போட்டிகளில் என்னால் முழு நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் கலந்துகொள்ள முடிகிறது,’’ என்று கூறிய உயர்நிலை மூன்று மாணவனான மகிபாலன், எதிர்காலத்தில் தாம் ஒரு தமிழ் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புவதால் இந்தத் திட்டம் தமக்குப் பேரு தவியாக உள்ளதென கூறினார்.

சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறை, உயர்நிலைப் பள்ளி மாண வர்களின் முழுமையான திறன்களை வெளிக்கொணறும் முக்கியமான, மிகவும் உத்திபூர்வமான திட்டம் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தைச் சோதித்துப் பார்க்கும் பள்ளிகளில் இந்த ஆண்டு உயர்நிலை ஒன்றில் பல் வேறு தர நிலைகளில் உள்ள மாண வர்கள் ஒரே வகுப்பில் பயில்வார் கள். 

இந்த மாணவர்கள், கலை, நற் குணமும் குடியியல் கல்வியும், வடிவமைப்பும் தொழில்நுட்பமும், உடலியல் கல்வி என பொதுவான பாடங்களைக் கற்பார்கள். அதற்கு அவர்கள் மொத்த பள்ளி நேரத் தில் மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்வார்கள்.

பிங் யி உயர்நிலைப் பள்ளியில் நான்கு உயர்நிலை ஒன்று வகுப்பு கள் உள்ளன. அவை ஒவ்வொன்றி லும் வெவ்வேறு தரநிலைகளில் இருந்து 30 முதல் 35 மாணவர்கள் பயில்வார்கள். 

 

முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாடு

முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டத்தை இவ்வாண்டு 28 பள்ளிகள் அமல்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு தரநிலைகளில் உள்ள மாணவர்கள் ஒரே வகுப்பில் இருப்பதுடன் உயர்நிலை 2 முதல் மாணவர்கள் மானுடவியல் பாடங்களை உயர்நிலையில் பயிலலாம்.
விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) என்ற தரநிலைகளிலிருந்து மாறுபட்ட இந்த புதிய முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டம் 2024ஆம் ஆண்டில் எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்தப்படவுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் உயர்நிலை 1 மாணவர்கள், ‘ஜி1’, ‘ஜி2,’ ‘ஜி3’, ஆகிய நிலைகளில் பாடங்களைக் கற்பர். 
‘ஜி1’ தற்போதுள்ள வழக்கநிலை (தொழில்நுட்பம்) பாடத்திற்கு ஏறக்குறைய இணையானது. 
‘ஜி2’, ‘ஜி3’ முறைகள் வழக்கநிலை (ஏட்டுக்கல்வி)க்கும் விரைவுநிலைக்கும் நிகரானவை.
அவர்களது திறன்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு நிலைகளில் பாடங்களை மாணவர்கள் எடுத்து பயிலலாம்.
2027ஆம் ஆண்டில்  உயர்நிலை நான்காம் வகுப்பில் மாணவர்கள் பொது தேசிய தேர்வை எடுப்பர் (Common national examination replacing N and O level examinations). 
அது ‘என்’ மற்றும் ‘ஓ’ நிலை தேர்வுகளுக்குப் பதிலாக இருக்கும்.
உயர்நிலைப் பள்ளிகளில் சேரும்போது விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) என தொடக்கப்பள்ளி ஆண்டிறுதித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் தரம் பிரிக்கப்படும் முறை 2024ஆம் ஆண்டிலிருந்து முழுதாக நிறுத்தப்பட்டுவிடும்.