வயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி

கடந்த ஆண்டு வழக்கநிலை தேர்வை எழுதிய பீட்டி உயர்நிலைப்பள்ளி மாணவி சீனிவாசன் அஸ்வினி, 16, இளம் வயதிலேயே ஒரு பண்பட்ட இளையராக திகழ்கிறார்.

வசதி குறைந்த சூழலில் வளர்ந்த அஸ்வினி, உயர்நிலை மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது இவரது தாயாரின் இதயப் பிரச்சினை மோசமடைந்தது.  

துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் இவரது தாயார், வேலைக்குச் செல்ல முயன்றபோதும் அவர் மருத்துமனையில் அடிக்கடி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அஸ்வினியின் குடும்பத்தினர் நிதி நெருக்கடிக்கு ஆளாகினர். இவரது தந்தை,  பிரதான பகுதிவாரிக் கடை ஒன்றில் விற்பனை உதவியாளராகப் பணிபுரிந்தார். 

கடன் தொல்லை, உறவினர்களின் ஆதரவின்மை ஆகியவற்றால் துவண்டுபோன தமது பெற்றோருக்குத் தைரியமூட்ட வேண்டிய நிலையில் இருந்தார் அஸ்வினி.

“உயர்நிலைப்பள்ளி எப்போது தொடங்கியதோ அப்போது சோதனைகளும் தொடங்கிவிட்டன. எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் குறைந்துவிட்டன.  ஆயினும், எனது தாயார் அனுபவித்த சிரமத்தைப் புரிந்துகொள்ள அந்தக் காலகட்டம் வாய்ப்பளித்தது,” என்றார் இவர்.

  கைச்செலவுக்காக வாரத்திற்கு $17 மட்டும் பெற்று வந்த அஸ்வினி, அதனைக் கவனமாக செலவழிக்க வேண்டியிருந்தது. பெரும்பாலான நாட்களில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழும் இவர், வீட்டு வேலை செய்வது, வெளியே சென்று சமையல் பொருட்களை வாங்குவது, தண்ணீர், மின்சார, எரிவாயுக் கட்டணங்களைச் செலுத்துவது போன்ற குடும்பப் பொறுப்புகளைத் தோளில் சுமக்கிறார்.

சிற்றுண்டி சாப்பிடுவதற்கும் பேருந்துப் பயணம் செய்வதற்கும் தேவைப்படும் கைக்காசை அஸ்வினிக்கு பீட்டி உயர்நிலைப்பள்ளி கொடுத்து உதவியது.

  “வழக்கநிலை தேர்வில் நான் தேர்ச்சி அடைந்ததற்கு எனது பள்ளிதான் காரணம். எனது சிரமங்களை ஆசிரியர்களிடம் நான் கூறுவேன். 

“பிரச்சினையை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருப்பது ஆபத்துதான். எனவே, அவர்களிடம் நிலைமையைக் கூறி நான் உதவி பெற்றேன்,” என்றார் இவர்.

இருந்தபோதும் சில சமயங்களில் தாயாரின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட, இவரது பெற்றோர் கடன் வாங்கினர். 

“கடனைத் திருப்பிச் செலுத்த சிரமப்பட்டபோதெல்லாம் கடன்காரர்கள் வீட்டு வாசலுக்கு வந்து எங்களிடம் கடுமையாக நடந்துகொள்வர். அவர்களிடம் நான் சமாதானமாக பேசி அனுப்பிவிடுவேன்,” என்று நினைவுகூர்ந்தார் அஸ்வினி.

பள்ளியிலும் பொறுப்புடன் நடந்துகொள்ளும் அஸ்வினி, வகுப்பு மாணவத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

தமது வாழ்க்கையைப் பற்றிய சில தனிப்பட்ட விவரங்கள் வகுப்பு மாணவர்களிடம் பரவியதையடுத்து, மனம் புண்படும்படி தம்மிடம் ஒரு சிலர் பேசியதை இவர் சுட்டினார். 

இவற்றை சகித்துக்கொண்ட இவர், “நான் எதையும் பொருட்படுத்துவதில்லை,” எனக் கூறினார். தமக்கு நெருங்கிய நண்பர்கள்  இருவர் உறுதுணையாக இருந்ததாகக் கூறினார்.

மனதைத் திடப்படுத்திக்கொண்டதால் அஸ்வினியால் சவால்களை எதிர்கொள்ள முடிந்தது.

“அளவுக்கு அதிகமான மனவுளைச்சல் ஏற்படுவது ஆபத்து. எனவே முடிந்தவரை நான் நிதானமாக இருப்பேன்,” எனக் கூறிய இவர், வானொலி கேட்பது, பூங்காவில் அமர்ந்து அங்குள்ள எழிலை ரசிப்பது உள்ளிட்ட மனதிற்கு இதம் தரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொன்னார். 

முக்கியமாக, தாயாருடன் அளவளாவி அவரது மனவலியைத் தாம் குறைக்க உதவுவதாக அஸ்வினி சொன்னார்.

ஆங்கிலம், கணக்கு போன்ற பாடங்களைவிட தமிழ்மொழியை அதிகம் விரும்புவதாகக் கூறிய இவர், தமிழ் முரசு நாளிதழை படிப்பதாகக் கூறினார். 

ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும் சிறுவர் கதைகளையும் வாசிப்பதில் விருப்பம் கொண்ட இவர், “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற பாரதியார் பாடல் வரிகள் தமக்கு மிகவும் பிடித்துள்ள இலக்கிய வாசகம் எனக் கூறினார். 

தொழில்நுட்பக் கல்விக் கழகம் கிழக்குக் கல்லூரியில் கணினிக் கட்டமைப்பு, தொடர்புத்துறை பயிற்சி வகுப்பில் சேரவிருக்கும்  அஸ்வினி, வருங்காலத்தில் ஆரம்பகால பாலர்பருவ கல்வியைக் கற்பிப்பதற்கான உயர் நைட்டெக் படிப்பைப் பயில விரும்புகிறார்.

அஸ்வினிக்கு இருக்கக்கூடிய முதிர்ச்சியை பாராட்டுகிறார் பீட்டி உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியரும்  தமிழ்ப் பாடப் பிரிவுத் தலைவருமான திருமதி முருகேஸ்வரி. 

“அஸ்வினி அமைதியான மாணவி. மற்ற மாணவர்களுக்கு இவர் ஒரு முன்மாதிரி. பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை அவர் உடனுக்குடனே ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார்,” என்றார் அவர்.  

“வாழ்வின் முக்கிய பொறுப்புகள் அஸ்வினியின் கையில்தான் உள்ளன. இது நாள்வரை நான் வாழ்வது அவளுக்காகத்தான்,” என்று கூறினார் இவரது தாயார் தேவானை தேவி, 37.