பிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி

பரமேஸ்வரன் நடராஜன், 32, தாம் தேர்ந்தெடுத்த துறையில் வளர்ச்சி அடைந்துள்ள சேவைத்துறை  மேலாளர்.  பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தோல்வியைச் சந்தித்து, பின்னர்  மீண்டும் அங்கு படித்து தமக்குப் பிடித்த துறையில் இவர் சேர்ந்தார்.

சாதாரண நிலைத் தேர்வுக்குப் பிறகு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னியல், கணினிப் பொறியியல் துறையில் திரு பரமேஸ்வரன் சேர்ந்தார்.

ஆனால், மக்கள் தொடர்பியல் துறையில் சேருவதே இவரது விருப்பமாக இருந்தது. ஆங்கிலப் பாடத்தில் ‘பி4’ பெற்றதால் அத்துறைக்கு இவர் தகுதிபெறவில்லை. கணக்கில் இவருக்கு ‘சி5’ கிடைத்தது.

“கணக்குப் பாடத்தில்  நான் சிறந்த மதிப்பெண்களைப் பெறாவிட்டாலும் மின்னியல், கணினிப் பொறியியல் துறையில் பயின்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எனது நண்பர்களும் குடும்பத்தினரும் கூறியதால் அதில் சேர்ந்தேன். 

“மற்றவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும் எனது குடும்பத்தினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற உணர்வால் இந்த முடிவை எடுத்தேன்” என்றார் திரு பரமேஸ்வரன்.

தொடக்கத்திலிருந்தே அத்துறையில் படிப்பில் சிரமப்பட்ட இவர், எவ்வளவோ முயன்றபோதும் முன்னேற்றம் அடைய முடியவில்லை. “தொழில்நுட்ப நுணுக்கங்கள் நிறைந்த பொறியியல் படிப்பை என்னால்  உள்வாங்க முடியவில்லை. தேர்வுகளில் தோல்வி மேல் தோல்வி. 

“இரண்டாவது ஆண்டில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியிலிருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன். அந்தத் தருணத்தில் செய்வதறியாது தவித்தேன்,” என்று திரு பரமேஸ்வரன் நினைவுகூர்ந்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு தேசிய சேவையில் இவர் சேர்ந்தார். தேசிய சேவையில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை அறிந்த இவருக்கு மீண்டும் படிக்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. 

பலதுறைத் தொழில்கல்லூரிகளின் பொது அறிமுக நிகழ்ச்சிகளுக்குச் சென்று இறுதியில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் விருந்தோம்பல் நிர்வாகத்துறையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்.

“மீண்டும் படிக்க விரும்பிய எனக்கு என் தாயார் ஊக்கம் அளித்தார். ஆனால் வேறு சிலரோ, ஏற்கெனவே பலதுறைக் கல்லூரியில் தோல்வியடைந்த நான் மீண்டும் படிப்பது எதற்காக எனப் புண்படும்படி பேசினர். ஆனால் ஆக்கபூர்வமான மனப்போக்கைக் கடைப்பிடிக்க நான் உறுதி கொண்டதால் எனது முடிவிலிருந்து நான் பின்வாங்கவில்லை,” என்று திரு பரமேஸ்வரன் கூறினார்.

அதன்பிறகு இவர் திட்டமிட்டபடியே காரியங்கள் நிறைவேறின. மரினா பே சேண்ட்ஸ் கல்வி உபகாரச் சம்பளத்திற்காக தாம் சமர்ப்பித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தாம் எடுத்த முடிவு சரியே என உணர்ந்ததாக திரு பரமேஸ்வரன் கூறினார். 

பட்டயப் படிப்புக்குப் பிறகு மரினா பே சேண்ட்ஸில் ஹோட்டல் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கவனிக்கும் முகவராக (concierge agent) தமது வாழ்க்கைத் தொழிலை இவர் தொடங்கினார். படிப்படியாக முன்னேறிய இவர், மேலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இத்துறையில் இவர் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர், இதே துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்புகிறார்.