மறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி

உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோது தாயாரின் இறப்பு 17 வயது ஷானியா சுனிலை கடும் துயரத்தில் ஆழ்த்தியது.  ஆனாலும் எதிர்நீச்சல் போட்டு கடந்த ஆண்டு சாதாரண நிலை தேர்வில் சிறப்பாக செய்தார் புரோட்ரிக் உயர்நிலைப் பள்ளி மாணவியான இவர்.

ஷானியா பிறந்து நான்கே மாதத்தில் இவரும் வர்த்தகர்களான இவரது பெற்றோரும் துபாய்க்கு குடிபெயர்ந்தனர்.  அங்கேயே ஷானியா வளர்ந்தார். 
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குமுன் ஷானியாவின் தாயாருக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்ட பிறகு அவரது சிகிச்சைக்காக மொத்த குடும்பமும் சிங்கப்பூருக்கு வர முடிவு செய்தது.

சிங்கப்பூரின் கல்வி, வாழ்க்கைமுறைக்கு ஷானியா மாற பழகிக்கொள்ள வேண்டியிருந்தது.

“சிங்கப்பூரின் கல்வி முறை மிகவும் போட்டித்தன்மைமிக்கதாக இருக்கும் எனக் கேள்விப்பட்ட எனக்கு முதலில் பயமாக இருந்தது. துபாயில் எனக்குப் பழக்கமான நண்பர்களைவிட்டுப் பிரிய மனமின்றி இங்கு வந்தேன்,” என்றார் ஷானியா.

தமது பெரியம்மாவுடன் பேசுகிறார் ஷானியா. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
தமது பெரியம்மாவுடன் பேசுகிறார் ஷானியா. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

“சிங்கப்பூரிலுள்ள ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் நலனுக்காக சிரத்தையுடன் உழைப்பவர்கள். என் பள்ளி ஆசிரியர்கள் அனைத்து விதங்களிலும் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர்,” என்று இவர் கூறினார்.

2018ஆம் ஆண்டு ஜனவரியில் தமது தாயார் இறந்தபோது ஷானியாவுக்கு உலகமே தலைக்கீழாகப் புரண்டது. ஆயினும், இன்னல்களை எதிர்த்துப் போராட ஷானியா முடிவெடுத்தார்.

கடும் துயரத்திலிருந்து தனது சிந்தனையைத் திசைதிருப்ப கல்வியில் கவனம் செலுத்த இவர் தொடங்கினார். “எனக்கு முன்னால் இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று தோல்வி, மற்றொன்று வெற்றி. நான் செல்ல விரும்பியது வெற்றிப் பாதையில்,” என்றார் ஷானியா.

“வீட்டில் இருந்தால் தாயாரின் நினைவு வரும் என்பதால் பள்ளி நூலகத்தில் ஷானியா படிப்பார். ஷானியாமீது அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் இது குறித்து என்னிடம் பேசுவர்,” என்று ஷானியாவின் பெரியம்மா ஃபர்ஹானா அப்துல்லா ஷாம்தசானி கூறினார்.

தாம் பயிலும் எல்லா பாடங்களையுமே விரும்பிப் படிப்பதாகக் கூறும் ஷானியா, வருங்காலத்தில் மருத்துவராகி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விரும்புவதாகச் சொன்னார்.

தாயாரின் மறைவு பின்னடைவு என்றால், சாதாரண நிலை தேர்வு எழுதுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் ஷானியாவின் கையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது அவருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. 

அப்போதுகூட, இவரது வைராக்கியம் சிறிதும் சிதையவில்லை என்றார் ஆங்கில ஆசிரியர் திருவாட்டி ரேமா ராஜ், 50.

“ஷானியா மிகவும் துடிப்பானவர். புதியவற்றைச் செய்து பார்ப்பதில் தயங்காதவர். ஆனாலும் இவர் தம்மீது அளவு கடந்த எதிர்பார்ப்புகளை வைத்து தம்மை வறுத்திக்கொண்டே உழைக்கும்போது நானும் சில நேரங்களில் கவலைப்படுவேன்,” என்றார் திருவாட்டி ரேமா.
ஷானியாவின் தாயார் இறந்த சில மாதங்களில் தமது தாயாரும் இறந்ததாக நினைவுகூர்ந்த திருவாட்டி ரேமா, தமக்கு ஆறுதல் கூறி அமைதி அடையச் செய்தது ஷானியாவே என்று தெரிவித்தார். 

ஷானியாவின் பக்குவத்தைக் கண்டு வியப்பதாக இவர் கூறினார். அது குறித்து கருத்துரைத்த ஷானியா, “ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எவ்வளவோ செய்கிறார்கள், இதில் நான் செய்தது ஒன்றுமே இல்லை,” என்று தன்னடக்கத்துடன் சொன்னார்.