புதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்

தந்தை இருந்தும் இல்லாத நிலை. தாயுடன் இருந்த உறவிலும் விரிசல். குடும்ப ஆதரவு இல்லாததால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளான 14 வயது மகனைச் சரியான பாதைக்குத் திருப்ப அவரது தாயார் மேற்கொண்ட முயற்சிக்கு சமூக ஊழியர் சிவசுப்பரமணியம் கைகொடுத்தார்.

மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த அந்த இளையரிடம் சொந்த சகோதரரைப்போல உரையாடி அவருக்கு வாழ்வில் ஒரு நோக்கத்தை ஏற்படுத்தித்தர, 33 வயது திரு சிவசுப்பரமணியம் பல்வேறு விதங்களில் உதவினார்.

அந்த இளையருக்கு பல விதங்களில் உதவியதுடன் ஒரு நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்த திரு சிவசுப்பரமணியத்தின் முயற்சியால் இன்றைக்கு அந்த இளையர் தமது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்வதுடன் கல்வியிலும் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்.

இப்படி பலரது வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வரும் திரு சுப்பரமணியம்கூட, தமது பதின்ம வயது பருவத்தில் காலம் போகும் போக்கிலேயே வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார்.

“ஆண்கள் விரும்பும் பொறியியல் துறையில் நானும் கால்பதிக்க விரும்பினேன்,” என கூறிய திரு சிவசுப்பரமணியம், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இயந்திர மின்னணுவியல் பாடத்தைப் பயின்றார்.

அதன்பின் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்பராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய இவர், மனநிறைவு தரும் வேறொரு துறையில் சேர எண்ணினார்.

இளம் வயதில் பல குடும்பப் பிரச்சினைகளையும் பண நெருக்கடியையும் சந்தித்த திரு சிவசுப்பரமணியம், இப்போது அதேநிலையில் இருப்போருக்கு ஆலோசகராக இருந்து உதவலாம் என்று முடிவெடுத்து, உளவியல் ரீதியாக சிகிச்சை அளித்தல் (psychotherapy) துறையில் ஈராண்டு கால பட்டயக்கல்வியை பகுதி நேரமாகப் பயின்றார்.

அதன் பிறகு சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் (சிண்டா) வேலைப் பயிற்சி பெற்று வந்தார். அதேசமயத்தில் அந்தத் துறையைப் பற்றிய நுணுக்கங்களை ஆழமாகக் கற்றுக்கொள்வதற்கு  சமூக ஊழியர்களுக்கான வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தின்கீழ் சமூகப் பணித் துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை சிம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.

தவறான பாதைக்குச் செல்லக்கூடிய இளையர்கள், முன்னாள் குற்றவாளிகள், குடும்பப் பிரச்சினை உடையோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கு உதவி வரும் திரு சிவசுப்பரமணியம், சமூகப் பணியைத் தாம் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் ‘மாற்றி அமைத்துக்கொண்டு வளர்ச்சியடைதல்’ எனும் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டம், இளையர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான நல்ல தளமாக உள்ளதை இவர் சுட்டினார்.

பட்டயக்கல்வியை முடித்தவுடன் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் தாம் திக்குமுக்காடியதைத் திரு சிவசுப்பரமணியம் நினைவுகூர்ந்தார்.  

தமது வீட்டிற்கு அருகில் உள்ள குடும்பச் சேவை நிலையத்திற்குச் சென்று சமூக ஊழியரின் பணிகளைப் பற்றிக் கேட்டு தெரிந்துகொண்ட பிறகு அது தொடர்பான  வேலைகளை இணையத்தில் இவர் தேடினார்.

சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் இணையத்தளத்தில் வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தைப் பற்றி தெரிந்துகொண்ட இவர், சமூகப் பணித் துறையில் சேர முடிவெடுத்தார்.

சிண்டாவில் சமூக ஊழியராகப் பணிபுரிவதன் மூலம் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவலாம் என்று குறிப்பிட்ட திரு சிவசுப்பரமணியம், இதுவே தமக்கு மனநிறைவு தருவதாகக் கூறினார்.

“என்னைப் போலவே மற்றவர்களும் சமூகத்தில் பல  பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.  இதனால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழக்கின்றனர்.

“அவர்களின் கதைகளைக் கேட்டு உதவும் சமூக ஊழியர்களில் நானும் ஒருவராக உள்ளது பெருமைக்குரியது என்றாலும் இப்பணியில் பல சவால்கள் உள்ளன,” என திரு சிவசுப்பரமணியம் கூறினார்.

உதவி தேவைப்படுவோரைச் சந்தித்து அவர்களுக்கு தகுந்த உதவியை வழங்குவதுடன் அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதும் சமூக ஊழியர்களின் கடமை என்றார் இவர்.

“உதவி தேவைப்படுவோரைச் சந்திப்பதுடன், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இதர அலுவலகப் பணிகளையும் முடிக்கவேண்டும்.

“வாழ்க்கையில் சிரமங்களைக் கொண்டிருப்போரைச் சந்திக்கும் தருணத்தில் நாங்களும் சில சமயங்களில்  அவர்களின் கதைகளைக் கேட்டு வேதனைப்படுவது உண்டு.

“எல்லா உணர்வுகளையும் ஏற்றுக்கொண்டு, எனது வாழ்க்கையின் குறை நிறைகளைப் புரிந்துகொண்டு அதன்படி அதை அமைத்துக்கொள்ள இந்தப் பணி என்னை பக்குவப்படுத்தியுள்ளது,” என்றார்  திரு சிவசுப்பரமணியம்.

 

பலனடைந்த சுபா‌ஷ் ராஜமாணிக்கம்

 வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தின் மூலம் பலனடைந்த மற்றொருவர் திரு சுபாஷ் ராஜமாணிக்கம், 35
வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தின் மூலம் பலனடைந்த மற்றொருவர் திரு சுபாஷ் ராஜமாணிக்கம், 35

திரு சிவசுப்பரமணியத்தைப் போலவே வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தின் மூலம் பலனடைந்த மற்றொருவர் திரு சுபாஷ் ராஜமாணிக்கம், 35 (படம்).
விற்பனை நிறுவனம் ஒன்றில் பல நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தி வந்த இவர், தற்போது ‘ஸீமார்ட்’ எனும் தனியார் நிறுவனத்தில் தொழில் பங்காளித்துவ மேலாளராக உள்ளார்.
‘தென்கிழக்காசிய திறனாளர்களுக்கான வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் உடனான  வர்த்தக உறவுகளை வளர்க்கும் உத்திகளைத் தாம் கற்றுக்கொண்டதாக இவர் குறிப்பட்டார்.
- avaid@sph.com.sg