விளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது

போட்டி என வந்துவிட்டால் துணிச்சலுடன் பொருதும்  விக்டோரியா பள்ளியைச் சேர்ந்த சித.மணி லக்‌ஷ்மணன், 16, மூன்று விளையாட்டுகளில் ஈடுபட்டு தமது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். 

தொடக்கப்பள்ளி முதல் காற்பந்து விளையாடிய இவர், பின்னர்  ஹாக்கி விளையாட்டிலும் திடல், தடப் போட்டிகளிலும் ஈடுபட்டார். உயர்நிலைப் பள்ளியில் ஹாக்கி அணியில்  சேர ஆசிரியர் ஒருவர் மணியை அணுகினார்.  

“விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்க ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தபோதும் அதில் சாதித்துக்காட்ட வேண்டும் எனும் மனப்போக்கைக் கடைப்பிடித்தேன். ஒருசில மாதங்களில் விளையாட்டில் என் ஆர்வம் அதிகரித்தது,” என்று இவர் கூறினார். 

ஒரே ஒரு விளையாட்டில் ஈடுபடும்போதே மாணவர்கள் பலருக்குச் சோர்வு ஏற்படுகிறது. ஆனால், இணைப்பாட நடவடிக்கையாக குறைந்தது இரு விளையாட்டுகளில் சேர வேண்டும்  என்பதில் மணி உறுதியாக இருந்தார். 

விளையாட்டுகள் பலவிதம். இவரது தேவைகளை அவை பூர்த்தி செய்வதும் பலவிதம். 

“பலருடன் பழக வேண்டும் என நினைக்கும்போது காற்பந்து, ஹாக்கி போன்ற குழு விளையாட்டுகள் அதற்கான தளத்தை ஏற்படுத்தித் தருகின்றன. தனிமையை விரும்பும்போது  ஓடுதளத்தில் ஓடுவேன்,” என்றார் மணி. 

ஆயினும், பல நேரங்களில் படிப்பையும் விளையாட்டுகளையும் ஒன்றாகச் சரிவர சமாளிப்பது கடினம் என்பதை இவர் ஒப்புக்கொண்டார். 

(படம்: திமத்தி டேவிட்)
(படம்: திமத்தி டேவிட்)

விளையாட்டில் ஈடுபடும்போது சோர்வு ஏற்படுவதால் போதிய அளவு ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த மணி, நேரம் விரயமாவதைத் தவிர்ப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார். வீட்டுப்பாடங்களை முடிந்தவரை பள்ளியிலேயே முடித்துவிட்டு பின்னர் வீட்டில் சற்று நேரம் ஓய்வு எடுத்து இவர் மறுபடியும் படிப்பாராம். 

கடந்த ஆண்டு சாதாரண நிலைத் தேர்வில், 14 மதிப்பெண் புள்ளிகளைப் பெற்ற மணிக்கு அதிகம் பிடித்தது கணிதப் பாடம்.  கணிதப் பாடத்தில் (Elementary Maths) ‘ஏ2’ தகுதி பெற்ற இவர், கணிதப் பாடங்களில் அடிக்கடி பயிற்சி செய்வதாகக் கூறினார். 

மணி, ‘ஏ2’ தகுதி எடுத்த மற்றொரு பாடம் இணை மானுடவியல் (புவியியல்/ சமூகவியல்). கடந்த ஆண்டின் அரையாண்டுத் தேர்வில் அப்பாடத்தில் ‘இ8’ தகுதி பெற்ற இவர், ஆரம்பத்தில் துவண்டு போனதாகக் கூறினார். 

ஆனால் அப்பாடம் குறித்த சந்தேகங்களைத் தீர்க்க ஆசிரியர் தேவையான அனைத்து உதவிகளையும் தமக்கு வழங்கியதால் தாம் இதில் தேறியதாக இவர் கூறினார். மணி எடுத்த முடிவுகளை இவரது பெற்றோர் ஆதரித்தனர்.

“விளையாட்டுகளில் என்னைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை. வீட்டில்  நேரத்தை வீணடிப்பதைக் கண்டால்தான் அவர்களுக்குப் பிடிக்காது,” என்றார் மணி. 

மணியைப் படிக்க வற்புறுத்தும் தேவை தமக்கு ஏற்பட்டதில்லை என்றார் இவரது தந்தை திரு கரு. சிதம்பரம்.

“மணி தனது இலக்கை அடைய கடுமையாகப் போராடும் குணம் உடையவன். நேரத்தை நிர்வகிப்பதில் கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்துவேன்,” என்றார் அவர்.

பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்ற மணியின் ஆசையை இவரது வகுப்பாசிரியர் வலுவாக ஆதரித்ததாக திரு சிதம்பரம் கூறினார்.

“மணியின் ஆசிரியர் எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருப்பர். மணியின் செயல்பாடு குறித்து எங்களுடன் அவர் பகிர்ந்துகொள்வார்,” என்றார் திரு சிதம்பரம்.

இலக்குகளைத் தாம் அடைய தமது அண்ணன் சித. அரசு ஊக்கப்படுத்தியதை மணி சுட்டினார். நேரடி பள்ளி சேர்க்கைத் திட்டத்தின்வழி விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் சேரவிருக்கும் மணி, வருங்காலத்தில் தமது அண்ணனைப்போல ஆசிரியராக விரும்புகிறார்.

- janark@sph.com.sg