ஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்

கி. ஜனார்த்தனன்

தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவியான நந்தினி சந்திராவுக்குத் தொடக்கத்தில் தேர்ந்தெடுத்த வகுப்பு பிடிக்கவில்லை. ஆனால் கல்வியில் வேறொரு வாய்ப்பு வரும்வரை மனந்தளராமல் தம்மால் முடிந்தவரை இவர் சிறப்பாக செய்து வந்தார்.

உயர்நிலை நான்கிற்குப் பிறகு தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (மத்திய கல்லூரி) சேர்ந்த நந்தினி, முதலில் தமது நைட்டெக்’ படிப்புக்காகத் தேர்ந்தெடுத்தது கண் மருத்துவத் துறை. 

பொது கல்விச் சான்றிதழ் வழக்கநிலை தேர்வுகளை முடித்த பின்னர், கல்விப் பயணத்தில் அடுத்தகட்டமாக எந்தத் துறையில் சேர்வது என்று தெரியாததால் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார் நந்தினி. 

“மாணவியர் பலர் கண் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்ததைப் பார்த்த நானும் அதேபோல செய்தேன்,” என்கிறார் இவர்.

உயர்நிலைப் பள்ளியில் திடல், தட விளையாட்டு என்றாலே நந்தினிக்கு அலாதி பிரியம். விளையாட்டில் அதிக கவனம் செலுத்திய தால் நந்தினி அப்போது படிப்பைச் சரியாக கவனிக்கவில்லை. 

நைட்டெக் படிப்பின்மீது ஆர்வமில்லாத நிலை அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் வருங்காலத்தில் வேறொரு துறைக்கு மாறும் சந்தர்ப்பம் வரும்வரை தொடர்ந்து படித்து வந்தார் நந்தினி. அப்போது தமது தந்தையின் ஆலோசனையைக் கேட்டு தெளிவுபெற்றதாக இவர் கூறுகிறார். 

“சிறு வயதிலிருந்தே எனக்கு கப்பல்கள், இயந்திரங்கள் மீது அதிக ஆர்வம் இருந்ததை அவர் நினைவுபடுத்தினார்.  அவை தொடர்பான துறைகளை ஆராய்ந்தபோது கடல்துறை பொறியியலைப் பற்றித் தெரிந்துகொண்டேன்,” என்றார் நந்தினி.

தமக்கு விருப்பமே இல்லாமல் சேர்ந்த துறையைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக அதில் சிறப்பாக செய்ததால் பொறியியல் துறையில் உயர் நைட்டெக் கல்வியை மேற்கொள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகம் அனுமதித்ததை இவர் சுட்டினார். 

“இருந்தபோதும், நான் எடுத்த இந்த முடிவைப் பற்றி எனது விரிவுரையாளர்கள் கேட்டிருந்தனர். இந்த மாற்றம் பெரியது என்றும் இதற்காகக் கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். 

“ஆயினும், எனது நம்பிக்கையை அவர்கள் சிதைக்கவில்லை. விருப்பமே இல்லாத துறையில் சிறந்த மதிப்பெண்களை நான் பெற்றதால்  விருப்பம் உள்ள துறையில் என்னால் நன்றாக படிக்க முடியும் என எனக்கு ஊக்கமூட்டினர்,” என்று இவர் கூறுகிறார். 

உயர் நைட்டெக் வகுப்பில் சேர்ந்த தருணத்தில், வாழ்வில் பெரிதும் உறுதுணையாக இருந்த நந்தினியின் தந்தை காலமானார். 

இது நந்தினிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஆனால், வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி அடையவேண்டும் என்ற மன உறுதியுடன் இவர் தொடர்ந்து போராடினார்.

மாணவர்கள் நைட்டெக் சான்றிதழைப் பெற்ற பிறகு அடுத்தகட்டமாக பட்டயக் கல்வியை மேற்கொள்ள அதிக வாய்ப்புகளை வழங்குவது பற்றி தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆராய்ந்து வருகிறது.

வேலை பார்த்துக்கொண்டே பட்டயப் படிப்பை முடிக்கும் ஓர் ஏற்பாட்டைத் தொழில்நுட்ப கல்விக் கழகம் 2018ல் தொடங்கியது. 

2025ஆம் ஆண்டுவாக்கில் இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 40 பட்டயப் படிப்புகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அவற்றில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1,000 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோ கா ஜெக் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்த வாய்ப்பு தமக்குக் கிடைத்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்கவிருப்பதாக நந்தினி கூறினார். 

விருப்பமில்லாத படிப்பைத் தற்போது படிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்போருக்கு நந்தினி கூறும் அறிவுரை, “தன்னம்பிக்கையை இழந்துவிட்டால் வெற்றியடைய முடியாது. 

“என்றென்றும் முயற்சியைக் கைவிடக்கூடாது. உங்களுக்கு விருப்பமான படிப்பை இப்போது தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து படியுங்கள்.  ஒரு கட்டத்தில் புதிய வாய்ப்புகள் பிறக்கும்.”

- janark@sph.com.sg