நம்பிக்கையையே உரமாகக் கொண்டு சாதிக்கும் கிரண்

பத்து வயதில் கோமாவால் பாதிக்கப்பட்ட கிரண், இனி உயிர் இருந்தும் உணர்வில்லாமல் இருக்கப்போவதாக மருத்துவர்கள் அவரது தாயாரிடம் கூறி கைவிரித்துவிட்டனர்.

ஆனால் இப்போது கிரண் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வாங்கும் அளவுக்குத் திறன் பெற்று சமுதாயத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வரும் வீரராகத் திகழ்கிறார்.

தற்போது 25 வயது நிரம்பிய கிரண் ராஜ் வேணு, ‘ஜிடிடி’ எனப்படும் உலகளாவிய வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.

இரண்டு வயது வரை மற்ற குழந்தைகளைப் போலவே இருந்த கிரண், ஒருசமயம் கடும் காய்ச்சலுக்கு ஆளானதை அடுத்து அவருக்குத் தொடர்ந்து வலிப்பு ஏற்பட்டு வந்தது.

குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கும் பாலர் பள்ளிக்கும் மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. 10 வயது வரை அவர் வீட்டிலேயே வளர்ந்ததாக அவரின் தாயார் நாகஜோதி மாரிமுத்து தெரிவித்தார்.

தொடர்ந்து ஏற்பட்ட வலிப்புப் பிரச்சினையால் கிரணின் மூளை பெரிதும் பாதிப்படைந்திருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், இனிமேல் கிரண் பேச்சும் அசைவும் இன்றி இருப்பார் என்று தம்மிடம் கூறப்பட்டதாக திருமதி ஜோதி நினைவுகூர்ந்தார். மருத்துவர்கள் சொன்ன அந்த வார்த்தைகள் இப்போதும் தம் மனத்தைத் தைப்பதாக அந்தத் தாயார் கூறினார்.

ஆனால் எப்படியேனும் தம் மகனைக் கரையேற்ற உறுதியெடுத்துக்கொண்டார் திருமதி ஜோதி. தமது மகனை 10 வயதிலேயே அறிவுத்திறன் குறைபாடு கொண்டுள்ளோருக்கான ‘மைண்ட்ஸ் லீ கொங் சியான் கார்டன்ஸ்’ பள்ளியில் சேர்த்தார்.

மனிதர்களின் சராசரி நுண்ணறிவுத் திறன் புள்ளிகள் 90 என்ற நிலையில் கிரணுக்கு 50 புள்ளிகள் மட்டுமே கொண்டிருந்ததாக அவர் மீது செய்யப்பட்ட சோதனை குறிப்பிட்டது. ‘மைண்ட்ஸ்’ பள்ளியில் கிரண் தனது 18 வயது வரை வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொண்டு வந்தார். அதன் பிறகு, ‘எஸ்ஐஏ-மைண்ட்ஸ்’ நிலையத்தில் செவிக்கருவிகளைத் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றத் தொடங்கினார்.

வேலை முடிந்த பிறகு மாலையில் ஓய்வாக இருந்த கிரணை விளையாட்டில் ஈடுபடுத்த முடிவு செய்தார் திருமதி ஜோதி. ‘மைண்ட்ஸ்’ அமைப்பிலுள்ள பிள்ளைகளின் பெற்றோருக்கான ஆதரவுக் குழுவிலுள்ள தமது நண்பர்கள் இந்த யோசனையை அளித்ததாக அவர் கூறினார்.

உருட்டுப் பந்து தொடர்பான ‘போலிங்’, ‘போச்சே’ விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கிய கிரண், இவ்விரண்டுக்கான பயிற்சியில் வாரந்தோறும் ஈடுபட்டு வந்தார்.

பேச சற்றே சிரமப்படும் கிரண், “எனக்கு விளையாட்டுகள் பிடிக்கும். என் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவேன்,” என்று கூறினார்.

2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் ‘போச்சே’ விளையாட்டுப் பிரிவில் அவர் தங்க விருது வென்றார். இப்போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். முதன்முறையாக அவர் பங்கேற்ற அதே போட்டியின் ‘போலிங்’ இரட்டையர் பிரிவில் பங்கேற்றார். அதில் அவர் வெற்றி பெறவில்லை.

வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் விளையாட்டு என்றாலே இவருக்கு முகமலர்ச்சிதான்.

அதுமட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கான ‘பர்பல் பரேட்’ நிகழ்ச்சியின் பிரதான முகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் என்ற பெருமை கிரணைச் சேரும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற அந்நிகழ்ச்சியின் சுவரொட்டிகளில் கிரணின் படத்துடன் அவர் புரிந்துள்ள சாதனைகளும் குறிப்பிடப்பட்டன.

கிரண் சிறு வயதாக இருந்தபோது அவரது உறவினர்கள் பலர் புண்படும்படி பேசி குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்க மறுத்ததாக பகிர்ந்துகொண்டார் திருமதி ஜோதி. ஆனால் கிரணின் இப்போதைய நிலையைக் கண்டு மனமுவந்து தங்களை அழைப்பதாகத் தெரிவித்தார்.

அண்மையில் மலேசியாவில் தமது உறவினர்களைக் கண்டதைப் பற்றி கிரண் புன்சிரிப்புடன் பேசினார். இருந்தபோதும் கிரணைப் பற்றி தமது உறவினர்கள் முன்பு பேசியது அவரது தாயார் மனதில் இன்னும் வடுவாக இருப்பது அவரது முகபாவத்திலிருந்து தெரிந்தது.

ஒரு மகளுக்கும் தாயான இவர், ‘மைண்ட்ஸ்’ அமைப்பில் தொண்டூழியம் செய்து மீளாத் துயரத்தை எதிர்கொண்டதாகக் கூறினார்.

தம் மகனை மட்டுமின்றி அவரைப் போல ஏனையோரைப் பல ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார். இப்போது அவர் ‘மைண்ட்ஸ்’ அமைப்பில் முழு நேரமாகப் பணிபுரிகிறார்.

பொதுநலனைக் கருதும் வாழ்க்கைமுறைக்கு மாறியது தன் மகனால்தான் என்று திருமதி ஜோதி மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

கிரணின் தாயார் மட்டுமின்றி அவரது தங்கை 23 வயது யோகினிதாவும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

திருமணம் குறித்துப் பேசியபோது, தம் மகனுக்கு அதற்கான சாத்தியம் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் திருமதி ஜோதி. இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை வளமாக்கும் பல்வேறு வழிகள் அண்மையில்தான் உதித்து வருவதாக அவர் சுட்டினார்.

“அறிவுத்திறன் குறைபாடு இருந்தாலும் சாதாரண இளையர்களைப் போல தனக்கென சில விருப்பங்களும் கனவுகளும் அவனுக்கு இருக்கின்றன,” என்று திருமதி ஜோதி கூறினார்.

“கிரண் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெறுவான் என்பது நான் இதற்குமுன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவனுக்குள்ள தன்னம்பிக்கை என்னையே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது,” என்றார் அவர்.

எந்த வகை குறை இருந்தாலும் தான் விரும்பியதைத் தைரியத்துடன் செய்து சாதித்துள்ள கிரண், பூரண புலன்களைக் கொண்டுள்ள சாதாரண இளையர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!