‘சுமூதி’ பானத்தில் வர்ணஜாலம்; வழக்கறிஞரின் ஓவிய ஈடுபாடு

பானத்தைக் குடிக்க மட்டும்தான் ‘சுமூதி’யைக் கையில் எடுப்பர் பலர். இவர்களைக் காட்டிலும் இளையர் நிரஞ்சனா ராம் சற்று மாறுபட்டு இருக்கிறார். எளிதில் கலைந்துவிடக்கூடிய குளிர்பானத்தின் மேல்மட்டத்தில் பல வண்ணப் படங்களை வரைந்து வரும் இந்த 23 வயது இளையரின் திறமையை இணையவாசிகள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். 

சட்டத்துறையில் பட்டம் பெற்ற இவர், ஓவியம் வரைவதற்கென  பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார். “எண்ணெய் ஓவியம், நீர்வண்ண ஓவியம், கரி ஓவியம் எனப் பல்வேறு உத்திகளில் என் தாயார் கைதேர்ந்தவர். நானோ என் விருப்பத்திற்காக படங்கள் வரைவேன். என் ஓவியங்களை எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றி என் தாயார் அறிவுரை கூறுவார்,” என்றார் நிரஞ்சனா.  

‘சுமூதி’ ஓவியத்தை வரையும்  யோசனை

இரவுக் காட்சி, பிரபல ‘ஜோக்கர்’ கதாபாத்திரம், ‘கோலா’ கரடி ஆகிய படங்களைக் கொண்ட சுமூதி பானங்கள். படம்: நிரஞ்சனா ராம்
இரவுக் காட்சி, பிரபல ‘ஜோக்கர்’ கதாபாத்திரம், ‘கோலா’ கரடி ஆகிய படங்களைக் கொண்ட சுமூதி பானங்கள். படம்: நிரஞ்சனா ராம்

சட்டத்துறையில் பட்டம்பெற்ற நிரஞ்சனாவுக்கு கடந்தாண்டு வழக்கறிஞர் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது ‘சுமூதி’ ஓவியத்தை வரையும்  யோசனை தோன்றியதாம்.  

“பிரபல ‘சுமூதி’ ஓவியர் ஹேசல் ஸக்காரியாவின் படங்களைக் கண்டேன். நானும் இதில் இறங்க ஆசைப்பட்டேன்,” என்றார். 

“தத்ரூபமான படங்களைக் காட்டிலும் கேலிச்சித்திர உரு வங்களைத்தான் நான் அதிகம் விரும்புகிறேன். சிறு வயதில் சிறுவர் தொலைக்காட்சி ஒளிவழியில்  கேலிச்சித்திர கதாபாத்திரங்களை அதிகம் விரும்புவேன். அத்துடன் நான் ‘ஹேரி பாட்டர்’ ரசிகை. என் ‘சுமூதி’ ஓவியங்கள் இவற்றை ஒட்டியே இருக்கும்,” என்று நிரஞ்சனா கூறினார். காகிதம் மீது வரைவதைக் காட்டிலும் உணவுப்பொருள் மீது ஓவியம் வரைவது சவாலானது என்றார் நிரஞ்சனா. 

“சுமூதியில் வரையத் தொடங்கும்போது எந்த இடைவெளியுமின்றி முடிக்க வேண்டும். ஒவ்வொரு சுமூதியின் தன்மை அதில் உள்ள பொருட்களைச் சார்ந்திருப்பதால் அதற்கு ஏற்றவாறு வரையவேண்டும்,” என்கிறார் இவர்.

வருங்காலத்தில் மேலும் சவாலான படங்களை வரைந்து தமது திறனை மெருகேற்றிக் கொள்ள ஆசைப்படுவதாகக் கூறுகிறார் புதுமையை விரும்பும் நிரஞ்சனா.