வலைப்பந்தில் ஈடுபாடு, கற்றல் அனுபவத்தில் இன்பம்

சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்த வெகு சில தமிழ் மாணவர்களில் ஒருவரான ரிஷிகா, அனைத்துலக பெக்கலோரியட்  (ஐபி) படிப்பை முடித்த அப்பள்ளியின் முதல் தமிழ் மாணவராகத் திகழ்கிறார். வலைப்பந்து விளையாடும் இந்த வீராங்கனை, அன்புக்குரியவர்களின் ஊக்கமே தம் உயர்வுக்குக் காரணம் எனக் கூறினார்.

செயிண்ட் மார்கரெட்ஸ் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை இரண்டில் படித்துக்கொண்டிருந்தபோது வலைப்பந்து விளையாடத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார். “வகுப்பில் நெட்டையான சிறுமிகளில் ஒருவராக இருந்த என்னை ‘கிட்ஸ்நெட்ஸ்’ என்ற திட்டத்தில் சேர என் உடற்பயிற்சி ஆசிரியர் பரிந்துரைத்தார்,” என்று கூறுகிறார் தற்போது 18 வயதாகும் ரிஷிகா ஞானமூர்த்தி.

“போட்டிகளில் விளையாடும்போது எனக்குள் உற்சாகம் பெருக்கெடுக்கும். ஓர் இலக்கை அடைய பாடுபட்டு அடையும் வெற்றியால் ஏற்படும் மகிழ்ச்சி ஈடு இணையில்லாதது. எனவே நான் வலைப்பந்தில் தொடர்ந்து ஈடுபட்டேன்,” என்று அவர் கூறினார்.

தமது தாயாரும் பாட்டியும் வலைப்பந்து விளையாடியதாகக் கூறிய ரிஷிகா, தொடக்கநிலை ஐந்தில் தம் பள்ளியைப் பிரதிநிதித்து விளையாடத் தொடங்கினார். உயர்நிலைப் பள்ளி பற்றி யோசிக்கவேண்டிய நேரம் தொடக்கநிலை ஆறில் வந்தபோது, அவர் நேரடிப் பள்ளிச் சேர்க்கை வழியாக உயர்நிலைப் பள்ளியில் சேர எண்ணினார். ஆனால், சிங்கப்பூர் விளையாட்டுப்பள்ளியின் முன்னாள் மாணவராக இருந்த தமது வலைப்பந்து பயிற்றுவிப்பாளர், அப்பள்ளியைப் பரிந்துரைத்தாராம். 

“இதன் மீது எனக்கு ஏற்பட்டு உள்ள ஆர்வம் அதிகரிக்கவே நான் இதற்கான தெரிவுச் சுற்றுகளில் கலந்துகொண்டதுடன் நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். இவற்றைக்  கடந்த பின்னர் நான் வெற்றிகரமாகத் தகுதிபெற்றேன்,” என்றார் அவர். எஞ்சியிருந்த தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வை நிறைவுசெய்து அவர் விளையாட்டுப் பள்ளியின் அனைத்துலக பெக்கலோரியட் பாடத்திட்டத்தில் சேரத் தகுதி பெற்றார். இந்தப் பள்ளியில் சேர தம் பெற்றோர் முதலில் முழுமையாக ஆதரிக்கவில்லை என ரிஷிகா தெரிவித்தார். “பள்ளியிலேயே தங்கி பயிலும் முறையால் எனக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என என் தந்தை முதலில் கவலைப்பட்டார். ஆனால் நான் என் விருப்பத்தைத் தெளிவாக எடுத்துரைத்த பிறகு இறுதியில் அவர் என் வேண்டுகோளுக்கு இணங்கினார்,” என்று ரிஷிகா கூறினார். 

தமது தொடக்கப்பள்ளியில் தமிழ் மாணவர்கள் பலர் இருந்தபோதும் உயர்நிலை ஒன்றில் தம்முடன் ஒரே ஒரு தமிழ் மாணவி இருந்ததாகவும் பின் அவரும் பள்ளியைவிட்டு வெளியேறியதாகவும் ரிஷிகா தெரிவித்தார். 

படிப்பிலும்  தாம் மிகவும் நேசிக்கும்  வலைப்பந்து விளையாட்டிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டு திறமையால் மிளிர்ந்தார் ரிஷிகா. உயர்நிலை நான்கில் தம் பள்ளியின் குழுவிற்கும் சிங்கப்பூர் வலைப்பந்து பயிலகக் குழுவிற்கும் தலைவராக ரிஷிகா நியமிக்கப்பட்டார். அத்துடன் அவர் தம் பள்ளியின் ஊக்கமூட்டும் அணியின் செயற்குழுவிலும் பணியாற்றி மாணவர் ஒருங்கிணைப்புக்கு முக்கிய பங்கினை ஆற்றினார்.

ஐபி பாடத்திட்டத்தில் சேர்ந்து அதற்கான தேர்ச்சிச் சான்றிதழைக் கடந்தாண்டு பெற்ற ரிஷிகா, “இதனை எடுத்துப் படித்தது நல்ல முடிவு என்றார்.

“தொடக்கக்கல்லூரியின் மேல்நிலைத் தேர்வு முறையிலுள்ள ஏட்டுக்கல்வி அம்சமும் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பட்டயப் படிப்பிலும் உள்ள நடைமுறை கல்வி அம்சமும் ஐபி திட்டத்தில் உள்ளது,” என்றார். தேர்வுகளுக்குப் படிப்பு மட்டுமின்றி ஆய்வுக் கட்டுரைகள், வாய்மொழி படைப்புகள் ஆகியவற்றையும் செய்யவேண்டி இருந்ததாகக் கூறிய ரிஷிகா, இவற்றால் தம் கற்றல் அனுபவத்தின் சுவாரசியம் கூடியதாகக் கூறினார்.

“அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து வந்த சக ஐபி மாணவர்களை நான் சந்தித்தேன். எங்களுக்கிடையே ஒரு குழு உணர்வு இருந்தது,” என்ற ரிஷிகா, தமக்கு ஒரு முழுமையான கல்வி அனுபவம் கிடைத்துள்ளதாக சொன்னார். ஐபி திட்டத்தில் தமிழ்ப் பாடமும் பயின்ற ரிஷிகா, அதற்கு தம் தமிழ் ஆசிரியர் உறுதுணையாக இருந்ததாகக் கூறினார்.

“இந்தப் பாடத்தை வெகு சிலரே எடுத்துப் படிக்கின்றனர். இதற்கான பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் என் ஆசிரியர் எனக்காகவே பயிற்சித்தாட்களைத் தயாரிப்பார்.” என்று தெரிவித்தார்.

சட்டம், கலை மற்றும் மானுடவியல் துறைகளில் ஆர்வம் கொண்டுள்ள ரிஷிகா தேசியப் பல்கலைக்கழகத்திற்கும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பித்திருக்கிறார். அதிகமான தமிழ் இளையர்கள் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் சேரவேண்டும் என்பதே தமது விருப்பம் என்று கூறினார் ரிஷிகா.

“விளையாட்டால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடக்கூடும் என பெற்றோர் அஞ்சவேண்டியதே இல்லை. விளையாட்டுப் பள்ளியில் மாணவர்களின் நேர நிர்வாகத்தை இங்குள்ள ஆசிரியர்களும் நிபுணர்களும் சரியான முறையில் கவனிக்கின்றனர். படிப்புக்கும் விளையாட்டுக்கும் இடையே ஒரு சமநிலையை அடைவதற்கான சிறந்த இடம் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி,” என்றார் ரிஷிகா.

செய்தி: கி. ஜனார்த்தனன்