மின்னிலக்கத் திறனும் இணையப் பாதுகாப்பும்

மாணவர்களிடம் மின்னிலக்கப் பயன்பாட்டை முழுமூச்சுடன் ஊக்குவிக்கும் அதே வேளையில் இணைய உலகில் செயல்படுவதற்குத் தேவையான திறன்களையும் பண்புநலன்களையும் பள்ளிகள் கற்றுத்தர உள்ளன.

மின்னிலக்கக் கல்வி, இணையப் பாதுகாப்பு, மனநலக் கல்வி ஆகியவற்றை மேம்படுத்த தமது அமைச்சு கொண்டுள்ள திட்டங்களை கல்வியமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் விளக்கினார்.

சாதாரண வகுப்புகளுக்கு எப்படி காகிதம், பேனா ஆகியவை அவசியமோ அதுபோல மின்னிலக்கக் கருவிகள், மின் கற்றலுக்குத் தேவை என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்கள், இணையக் கற்றல் தளத்திற்குச் சென்று காணொளிகள், பயிற்சித்தாட்கள் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

அதேநேரத்தில், இணையத்தின் தாக்கம் நுட்பமானது என்பதால் கல்வியமைச்சு, இணையப் பாதுகாப்பு, மனநலக் கல்வி தொடர்பான கற்பித்தலை அதிகப்படுத்தும்.

சமூக ஊடகம், இணையத்தில் தொல்லை கொடுத்தல் போன்ற விவகாரங்களைப் பற்றி கலந்துரையாட புதிய பண்பியல்பு மற்றும் குடியுரிமைப் பாடத்திட்டம் அதிக நேரத்தையும் வளத்தையும் ஒதுக்கும்.

இணையத்தைக் கூடுதல் கவனத்துடனும் பாதுகாப்புடனும் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதற்கான முன்னோட்ட வகுப்பில் பங்கேற்ற மாணவர்களில் நியூ டவுன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை இரண்டில் பயிலும் ஹர்நிஷா சிவசங்கரும் ஒருவர்.

இந்த வகுப்பில் இணையம் வழி ஒருவர் தொல்லைக்கு ஆளாகும்போது என்ன செய்வது என்பதை காணொளிகள் மூலமாக மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

மாணவர்கள் தங்களது கருத்து களையும் பகிர்ந்தனர். தொழில்நுட்ப வளங்களால் வகுப்புகள் மேலும் சுவாரஸ்யமாக இருப்பதாக 13 வயது ஹர்நிஷா கூறினார்.

“இந்த இணையப் பாதுகாப்பு தொடர்பான பாடங்களின் மூலம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய பிரச்சினைகளை வெவ்வேறு கண்ணோட்டங்களில் ஆராய நான் கற்றுக்கொண்டேன்.

“இணையம் வழி பிறருக்குத் தொல்லை ஏற்படுவதைக் காணும்போது என்ன செய்வது என்பது குறித்த உத்திகளைத் தெரிந்துகொண்டேன்,” என்றார் அந்த மாணவி.


மின்னிலக்கமாகும் கல்வி

கடந்த 2018ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு தொடங்கிய ‘சிங்கப்பூர் மாணவர் கற்றல் வலைத்தளம்’ என்ற இணையக் கற்றல் தளத்தை பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆசிரியர்கள் உடனுக்குடன் மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணித்து, எந்த அம்சங்களில் மாணவர்களுக்கு மேலும் உதவவேண்டும் என்பதை எளிதில் அறிய இத்தளம் உதவுகிறது.

வகுப்பில் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் உட்பட ஆசிரியர்கள் தயாரித்த ‘யுடியூப்’ காணொளிகள், வீட்டுப் பாடங்கள், புதிர் பயிற்சிகள் போன்றவற்றை அத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மாணவர்கள் எழுதும் பயிற்சிகளுக்கு ஆசிரியர்களால் அத்தளத்தில் கருத்துகளும் தெரிவிக்க முடியும்.

மாணவர்களுக்கும் கருத்துகளைப் பகிரும் வாய்ப்புகள் இருக்கும். கூச்சமுள்ள மாணவர்கள் தங்கள் பெயரைத் தெரிவிக்காமல் கருத்துக் கூற முடியும்.

மாணவர்களின் மாறுபட்ட திறன்களையும் தர நிலைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற உதவியை ஆசிரியர்கள் வழங்கலாம்.

பல்வேறு கேள்விகளுக்கு மாணவர்கள் வழங்கிய பதில்களைக் கொண்ட ஒரு தரவுத்தளத்தை ஆசிரியர்கள் உருவாக்கி, மூன்று நிறங்கள் வைத்து அந்தப் பதில்களைத் தொகுக்கலாம்.

‘மாணவர் கற்றல் தளத்தின் சமூக காட்சியகம்’ என்ற வலைத்தளத்தின் மூலம் மற்ற ஆசிரியர்களுக்கு தமது வகுப்புத் திட்டத்தை ஆசிரியர்கள் பகிரலாம்.


உயர்நிலை மாணவருக்கு மின்னிலக்கச் சாதனம்
உயர்நிலை 1ல் படிக்கும் எல்லா மாணவர்களும் 2024ஆம் ஆண் டில் மடிக்கணினி, ‘டேப்லட்’ போன்ற மின்னிலக்கச் சாதனங்களை சொந்தமாகப் பெற்றிருப்பர். வசதி குறைந்த மாணவர்கள் உதவித் தொகை மூலம் இவற்றை இலவசமாகப் பெறலாம். மின்னிலக்கச் சாதனம் வாங்க அனைத்து மாணவர்களின் எடுசேவ் கணக்கிலும் ஒருமுறை வழங்கப்படும் நிதியாக $200 நிரப்பப்படும். ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு $290, தொடக்கப் பள்ளி மாணவருக்கு $230 என்று எடுசேவ் கணக்கில் கல்வி அமைச்சு நிரப்புகிறது. இது தவிர கூடுதலாக இந்த $200 தொகை இடம்பெறுகிறது.


இணையப் பாதுகாப்பு
மாணவர்கள் இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்த உதவும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் இணையப் பாதுகாப்பு தொடர் பான கல்வியை அறிமுகப்படுத்தும். அடுத்த ஆண்டு அறிமுகம் காணவுள்ள பண்பியல்பு மற்றும் குடியுரிமைக் கல்வி தொடர்பான புதிய பாடத்திட்டம் இணையப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். இணையப் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களுடன் கலந்தாலோசிக்க கூடுதலாக 50% நேரத்தைப் பள்ளிகள் செலவிடும்.


மனநலன்
மாணவர்களின் மனநலனிலும் மாணவர் ஆதரவுக் கட்டமைப்பிலும் அதிக கவனம் செலுத்தப்படும். உயர்நிலைப் பள்ளிகளில் பண்பியல்பு மற்றும் குடியுரிமைக் கல்வியின் ஓர் அங்கமாக மனநலன் இடம்பெறும். மனநலன் தொடர்பான விவகாரங்களைப் பற்றி புரிந்துகொள்ளவும் எப்படி உதவி பெறுவது என்பது பற்றியும் மாணவர்களில் இப்பாடத்தில் தெரிந்துகொள்வார்கள். மாணவர் ஆதரவுக் கட்டமைப்புகள் 2022ஆம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும்.


இந்தியா, சீனாவுக்கு கல்விப் பயணங்கள்
அடுத்த ஆண்டு முதல் 2023 வரை சமுதாய கல்வி, வரலாறு, புவியியல், பொருளியல் ஆகிய பாடங்களில் ஆசியான் தொடர்பான விவரங்கள் முக்கிய இடம்பெறும். இதன்தொடர்பில் உள்ளூர் உயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களில் 70 விழுக்காட்டினருக்கு வெளிநாட்டு அனுபவம் கிடைக்கும். ஆசியான் நாடுகள், இந்தியா, சீனாவுக்கு கல்விப் பயணம் செல்லும் வாய்ப்புகள் மாணவர்களுக்கு கிடைக்கும்.


மனநலப் பிரச்சினையுள்ள இளையருக்கு உதவி
மனநலப் பிரச்சினையுள்ள இளையர்களுக்கு உதவ ‘ஒருங்கிணைக்கப்பட்ட இளையர் சேவை’ அமைகிறது. உட்லண்ட்ஸ் வட்டாரத்திலுள்ள ‘கேர் கார்னர்’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பின் சமூக இடத்தில் இது செயல்படும். பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய இளையர்கள் இந்தத் திட்டத்தின் வழி ஒருங்கிணைக்கப்பட்ட மனநல, சமூக ஆதரவுச் சேவைகளைப் பெறலாம்.
மாணவர்களுக்கான நிதி உதவிகளை இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் அதிகரித்துள்ளார். வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த புகுமுக வகுப்பு மாணவர்கள் கல்வி அமைச்சின் நிதி உதவித் திட்டத்தின்கீழ் கூடுதலாக $100 பெறுவர். அவர்களுக்கான உதவித் தொகை $900லிருந்து $1,000 ஆக உயர்த்தப்படுகிறது.
அனைத்து மாணவர்களும் கூடுதல் போக்குவரத்து கட்டணச் சலுகையைப் பெறுவர். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கூடுதலான பள்ளி உணவுக் கட்டணச் சலுகையைப் பெறுவர். தன்னாட்சி பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழில்கல்லூரிகளில் பயிலும் வசதி குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூடுதலான கல்வி உதவி நிதியைப் பெறுவர். தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயிலும் முழு நேர மாணவர்களுக்கான உதவித் தொகையும் கூடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!