நிச்சயமற்ற சூழலில் நம்பிக்கை ஒளி தரும் இளையர்கள்

அன்­பர் தினத்தன்று எங்கு செல்­ல­லாம் என்று சில இளை­யர்­கள் திட்­ட­மிட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது, இளைஞர் சுவாதி ஒரு நூதன முயற்­சி­யில் இறங்கினார். கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடி பல தியாகங்கள் செய்து வரும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களையும் அன்பளிப்புப் பைகளையும் 23 வயது அ.சுவாதி ல‌ஷ்மி அன்றைய தினத்தில் வழங்கினார்.

கொவிட்-19 கிரு­மித் தொற்று சிங்­கப்­பூரை பாதித்து வர, சுகா­தார ஊழி­யர்­கள் அதனைக் கட்­டுப்­ப­டுத்த தீவி­ரம் காட்டி வரு­வதை உணர்ந்து இச்செய­லில் இறங்கினார் சுவாதி. சுகாதார ஊழியர்களின் தன்னலமற்ற பணியை அங்­கீ­க­ரித்து அவர்­க­ளுக்கு உற்­சா­கம் ஊட்ட சிங்­கப்­பூர் இளை­யர் படை­யி­ன­ரு­டன் (Youth Corps Singapore) ஊட்­ரம் பெரு­வி­ரைவு ரயில் நிலை­யத்­தில் சுவாதி இவ்வாறு அன்பளிப்புகளையும் நன்றி தெரிவிக்கும் குறிப்புகளையும் அளித்தார்.

இதன்வழி நேர­டி­யாக சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை சுகா­தார ஊழியர்களி­டம் நன்றி தெரி­வித்­தது சுவா­திக்கு மிகுந்த திருப்­தியைத் தந்­தது.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்தில் சிங்­கப்­பூர் இளை­யர் படை­யில் வேலைப்­ப­யிற்சிக்காக சேர்ந்த சுவாதி, கடந்த பல வாரங்­க­ளாக முழு­மூச்சுடன் கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்­பான தொண்­டூ­ழிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று முதி­ய­வர்­க­ளை­யும் அதி­கம் பாதித்து வரும் நிலை­யில் அவர்­க­ளி­டையே அதன் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும் இவர் மும்முரம் காட்டி வருகிறார்.

வார­நாட்­களில் தோ பாயோ வட்­டா­ரத்­தில் உள்ள பொது இடங்­களில் முதி­ய­வர்­களைச் சந்­தித்து முறை­யாக எப்­படி கைகளைக் கழு­வு­வது, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து எப்­படி தங்­களைத் தற்காத்துக்கொள்வது என்­ப­தை­யும் தனிப்­பட்ட முறை­யில் விளக்கினார் சுவாதி.

அது மட்டுமல்லா­மல், ஜூரோங் ஈஸ்ட் பேட்­டை­யில் இருக்­கும் வீவக வீடு­க­ளுக்­குச் சென்று வீட்டை விட்டு வெளியே செல்­லத் தயங்­கும் முதி­ய­வர்­களை நேரில் சந்­தித்து அவர்­க­ளது அச்சங்களையும் ஐயங்­களையும் போக்கினார்.

உதா­ர­ணத்­திற்கு அவர்­க­ளுக்கு உடல் நலமில்லை என்­றால் எப்­படி தனி­யார் மருந்­த­கத்துடன் தொடர்பு கொள்­வது போன்ற உத்­தி­களை சுவாதி பகிர்ந்­து­கொண்­டார்.

வீட்­டில் அவ்­வப்­போது தாயா­ருக்குச் சமை­ய­லில் உத­வும் சுவாதி, நிறைய பேருக்கு சமைப்­பது ஒரு வித்­தி­யாச அனு­ப­வ­மென்­றார். ‘வில்­லிங் ஹேன்ட்ஸ், வில்­லிங் ஹார்ட்ஸ்’ (Willing Hands, Willing Hearts) எனும் அமைப்­பில் இவர் சமை­ய­ல் செய்­ய­வும் உதவினார்.

தின­மும் குறைந்த வரு­மா­னம் ஈட்டும் சுமார் 6,500 நபர்­க­ளுக்கு இந்த அற­நி­று­வ­னம், சமைத்த உணவை வழங்கி வருகிறது. சுவாதி போன்ற தொண்­டூ­ழி­யர்­கள், சமை­ய­லுக்­கான காய்­க­றி­களை நறுக்­கு­வது, உணவைப் பொட்டலம் கட்டுவது, பொட்டலங்களைத் தீவின் வெவ்­வேறு பகு­தி­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­வது போன்­ற­வற்­றில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

சுவா­தி­யைப் போலவே சமு­தா­யத்திற்கு இந்­நி­லை­யில் உதவி தேவை என்­பதை சிங்­கப்­பூர் இளை­யர் படை­யி­ன­ரின் மற்றொரு தொண்­டூ­ழி­ய­ரான முகம்­மது ஹபிப் பின் அப்­துல் காதர் நன்கு உணர்ந்துள்ளார். 

சிறு­வர் பரு­வத்­தில் தாமும் குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்ப பின்­ன­ணி­யி­லி­ருந்து வந்ததாக தெரி­வித்த அவர், எத்­த­கைய பிரச்­சி­னை­களை அவர்­கள் தின­மும் எதிர்­கொள்­கின்­ற­னர் என்­பதை தம்­மால் உணர முடி­கி­றது என்­றார்.

அத­னால்­தான், தொண்­டூ­ழி­யர்­கள் தேவை என ‘ஃப்வூட் ஃபிரம் த ஹார்ட்’ (Food from the Heart) அற­நி­று­வ­னம் உதவி கேட்­ட­போது, உட­ன­டி­யாக தன் பங்கை ஆற்ற முன்வந்தார்.

இந்த அற­நி­று­வ­னம் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு மளி­கைப் பொருட்­களை இல­வ­ச­மாக விநி­யோ­கித்து வரு­கிறது.

“வழக்­க­மாக சேவை­யாற்றி வந்த சில தொண்­டூ­ழி­யர்­கள் தற்­போ­தைய கொவிட்-19 நில­வ­ரத்­தால் வர முடி­யாத பட்­சத்­தில் உதவ முன்­வந்­தேன். 

குடும்ப வரு­மா­னம் பாதிப்­ப­டைந்த நிலை­யில் இத்­த­கைய மளிகை பொருட்­கள் தாம­த­மில்­லா­மல் குடும்­பங்­களைப் போய் சேர்­வது முக்­கி­யம்,” என வலி­யு­றுத்­தி­னார் 26 வயதுடைய முகம்­மது ஹபிப்.

கிடங்கு ஒன்­றுக்குச் சென்று அரிசி, சூரை மீன் ‘டின்’கள், ‘பிஸ்­கெட்­டு­கள்’ போன்ற பொருட்­களைப் பெட்­டி­யில் அழ­காக அடுக்கி விநி­யோ­கத்­திற்­காக தயார் செய்­வ­தில் முகம்­மது ஹபிப்­பின் பங்கு அடங்­கி­யுள்­ளது.

ஒவ்­வொரு முறை­யும் சுமார் 17 சக தொண்­டூ­ழி­யர்­க­ளு­டன் இக்­கா­ரி­யத்­தில் ஈடு­ப­டும்­போது, கிட்­டத்­தட்ட 200 குடும்­பங்­க­ளுக்குத் தேவை­யான பொருட்­களை விநி­யோ­கிப்பதற்காக தயார் செய்ய முடி­கிறது என்­றார்.

தற்போதைய நிச்­ச­ய­மற்ற சூழ­லில் நம்­பிக்கை தருவதற்காக இளை­யர்­கள் தங்­க­ளது பங்கை ஆற்ற முன்­வ­ர­லாம் என்று குறிப்­பிட்ட ஹபிப், தொண்­டூ­ழி­யம் செய்­வ­தற்கு ஏர­ளா­மான வாய்ப்­பு­கள் சிங்­கப்­பூ­ரில் உள்­ளன என்று சுட்டி­னார்.

சுவாதி தற்­போது ‘ஏசிசிஏ’ (ACCA) படிப்­பை­யும் முகம்­மது ஹபிப் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சமூ­க­வி­யல் தொடர்­பான பட்­டப்­ப­டிப்­பை­யும் மேற்­கொள்­கின்­ற­னர்.

மாணவர்களாக இருந்து கொண்டே சமூகத் தொண்­டுக்கு நேரம் ஒதுக்க முடிவதாக குறிப்பிட்ட இருவரும், ஒரு சிலர் தங்­க­ளது வேலை­யி­லி­ருந்து விடுப்பு எடுத்து இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படுவது தங்களுக்கு உற்­சா­கம் அளிப்பதாக கூறினர். 

“வழி­யில் சந்­திக்­கும் சுகா­தார ஊழி­ய­ருக்கு நன்றி தெரி­விப்­பது போன்ற சிறு சிறு வி‌‌ஷ­யங்­கள் கூட, இனிமையான சூழலை உருவாக்க வழி­வ­குக்­க­லாம். இப்­படி அனை­வ­ரும் தங்­க­ளது பங்கை ஆற்­று­கை­யில் இதி­லி­ருந்து நம்­மால் மீண்­டு­வர முடி­யும்,” என்­றார் சுவாதி.