மனம் கனக்கிறதா? கொவிட்-19 கவலையாக இருக்கலாம்

கொரோனா கிருமியால் நம் வாழ்க்கையின் பல அம்சங்களிலும் மாற்றங்கள். வழக்கமான வாழ்க்கை முறையை இழந்துவிட்டோம், சமூகத் தொடர்புகளை வெகுவாகக் குறைத்து விட்டோம், இறப்புக்கும் நிச்சயமற்ற பொருளியல் நிலைக்கும் அஞ்சுகிறோம். இவையெல்லாம் மனதளவில் நம்மைப் பாதிக்கக்கூடும்.

கொவிட்-19 நெருக்கடி இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலையில் நமது மனநலனைப் பாதுகாக்க நாம் சில உத்திகளைக் கையாளலாம்.

 முதலில் கொவிட்-19 சூழலால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அதுவே மீண்டு வருவதற்கான முதல் படி.

 ஒவ்வொரு நாளும் ஈடுபடக்கூடிய நடவடிக்கை களைப் பட்டியல் இடுங்கள். திட்டமிட்டதைச் செய்து முடிக்கும்போது உங்களுக்கு மனநிறைவு ஏற்படும்.

 அடிக்கடி நண்பர்களைச் சந்திக்கும் பழக்கமுடைய வராக நீங்கள் இருந்தால், சந்திப்புகளை இணையம் அல்லது திறன்பேசி மூலம் நடத்துங்கள்.

 வீட்டில் அதிக நேரம் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள், குடும்பத்தாரிடம் பேசிப் புரிய வையுங்கள். வீட்டில் தனியே உங்களுக்கென ஓர் இடத்தை ஒதுக்குமாறு கேளுங்கள்.

 அன்றாட நடவடிக்கை களில் ஈடுபட முடியாமல் பொழுதை எவ்வாறு கழிப்பது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். புதிய இசைக்கருவி ஒன்றை வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், புதுவகை சமையலைச் செய்து பாருங்கள், ஓவியம் தீட்டவும் முயற்சி செய்யலாமே!

 உடலைக் கட்டுடன்  வைத்துக்கொள்வதற்காக எங்கும் செல்லத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே உடற்பயிற்சியில் ஈடுபடலாம். 

யோகாசனம், மூச்சுப் பயிற்சி போன்றவையும் மனதிற்கு அமைதியைக் கொடுக்கும்.

கொவிட்-19 நெருக்கடி யால் பல சிரமங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளே மிக முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.