தொழில் நிறுவனங்களுக்கு இலவச ஆலோசனை சேவை வழங்கும் குழுவினர் கொவிட்-19 தாக்கத்தால் தத்தளிக்கும் நிறுவனங்களுக்கு உதவி

வர்த்தகங்களை வளப்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆர்வம் கொண்டுள்ள தம்மைப் போன்ற சில நண்பர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள மார்க் தாஸ், கொவிட்-19 கிருமித்தொற்று தாக்கத்தால் தத்தளிக்கும் நிறுவனங்களுக்கு தம்முடைய திறனும் அனுபவமும் கைகொடுக்கும் என எண்ணியிருந்தார்.

எவரும் எதிர்பாராமல் திடுதிப்பென இந்நோய் பரவி வருவதால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளும் செயல்பாடுகளும் பெரிதும் மாறிவிட்டன.

இதனைப் பல நிறுவனங்கள் சமாளிக்க முடிந்தாலும் ஒரு சில தொழில்துறைகளில் இயங்கும் நிறுவனங்கள் செய்வதறியாது திணறுகின்றன.

ரொக்கப் புழக்கம், வருவாய் இழப்பு, வாடகை செலவைச் சமாளிப்பது, வர்த்தகக் கட்டமைப்பை மாற்றியமைப்பது குறித்து முடிவெடுத்தல் ஆகிய குறுகியகாலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதற்கான திட்டங்களை மார்க்கும் அவரது குழுவினரும் உதவி தேவைப்படும் வர்த்தகங்களுக்கு இலவசமாக வகுத்து தருகின்றனர்.

இதுவரை சுமார் 105 நிறுவனங்கள் இவர்களிடம் ஆலோசனை பெற விண்ணப்பித்துள்ளன.

அவற்றில் தற்போது 60 நிறுவனங்கள் தங்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக திரு மார்க் கூறினார்.

“மின்னிலக்கத் தீர்வுகளைப் பொறுத்தவரை, எல்லா நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை வழங்குவது பொருத்தமாக இருக்காது. எனவே எங்களது சேவையை நாடும் நிறுவனங்களை நன்றாக பகுப்பாய்வு செய்வோம்,” என்று 32 வயதில் ‘இன் த லூப்’ என்ற சந்தைப்படுத்துதல் நிறுவனத்தை ஆரம்பித்த திரு மார்க் தெரிவித்தார்.

“வாடிக்கையாளரின் குறிக்கோள்களைக் கேட்டறிதல், விளம்பர உத்தி, நிறுவனத்தின் செயலாக்க முறை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அந்நிறுவனத்திற்கு ஏற்ற தீர்வை வழங்க முற்படுவோம்.

“அத்துடன், அவர்களுக்குத் தேவைப்படும் வளங்களைப் பெற நாங்கள் எங்களது வர்த்தகத் தொடர்புகளைப் பயன்படுத்தி கைகொடுத்து வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரையும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரையும் சேர்ந்த சந்தைப்படுத்துதல் நிபுணர்களாகவும் உள்ள திரு மார்க்கின் குழுவினர், நிதித் துறை, கல்வி, உடற்கட்டு, உடல்நலம், ஊடகத் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளை நன்கு அறிந்திருப்பதாக மார்க் தெரிவித்தார்.

பல திறன்களைக் கொண்டுள்ள இளையர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிறுவன உத்திகளை ஆராய்வதற்கும் அவற்றுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் தமது குழுவிற்கு வசதியாக இருப்பதாகவும் கூறினார் திரு மார்க், 38.

கொவிட்-19 கிருமித்தொற்று தாக்கத்தால் இழப்பைச் சந்தித்துள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி எதிர்பாரா முன்னேற்றங்களைக் காணும் நிறுவனங்களும் தமது குழுவினரின் உதவியை நாடுவதாக திரு மார்க் தெரிவித்தார்.

“ஒரே நேரத்தில் பல தொழில்களைச் செய்யும் ஒருவர் எங்களை நாடி வந்தார். அவரது நிறுவனத்தில் வேலைக்கு ஆள்சேர்ப்பது குறித்தும் $500,000 வருவாய் இலக்கை எப்படி அடைவது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினோம்,” என்று அவர் கூறினார்.

தற்போதைய சூழலில் வீட்டு உபயோக பொருட்கள், செல்லப் பிராணிகளுக்கான பொருட்கள், சுகாதாரம், மின்னிலக்கப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் வர்த்தகங்களே அதிக லாபகரமாக செயல்படுவதாக திரு மார்க்கின் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிறருக்கு இலவசமாக ஆலோசனை வழங்குவதால் இழப்பதற்கு ஒன்றுமில்லை.

மாறாக அதன்மூலம் பெறக்கூடிய அனுகூலங்களே அதிகம் என்றார் அரசியல் அறிவியல் துறை பட்டதாரியான திரு மார்க்.

“எந்தவொரு நெருக்கடியான சூழலிலும் வாய்ப்புகள் உள்ளன. இச்சூழலில் வர்த்தகர்கள் பதற்றம் அடையாமல் நிதானம் காத்து, இருப்பில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி திட்டமிடவேண்டும்.

“மற்றவர்களுக்கு உதவவும் அவர்களுடன் தொடர்புகொண்டு இணையவும் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்,” என்று அவர் கூறினார்.

தொழில் சார்ந்த ஆலோசனைகளைப் பெற ஆர்வமுள்ளவர்கள் www.intheloop.asia என்ற இணையப்பக்கத்தில் மேல் விவரங்களைப் பெறலாம்.

- janark@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!