தந்தையின் மரணம் உயர்நிலை மூன்றில் படித்துக்கொண்டிருந்த சிந்தியாவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. அக்கா, மூளை வளர்ச்சி குன்றிய அண்ணன் இருவருடன் சிந்தியாவையும் கவனித்துக்கொள்ளும் முழுப் பொறுப்பும் தாயாரின் தலையில் விழுந்தது.
“அந்தச் சமயத்தில் என் குடும்பம் அடைந்த வேதனையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. படிப்பில் கவனம் செலுத்துவது சவால்மிக்கதாக இருந்தது,” என்றார் 21 வயது சிந்தியா சிவகுரு.
தந்தையின் இறப்பினால் மனமுடைந்து போன அம்மா மார்க்ரெட் மேரிக்காக கல்வியில் சிறக்க உறுதிபூண்டார் சிந்தியா. “என் வெற்றியே அம்மாவுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். நான் என் வாழ்க்கையை வீணடிப்பதை என் தந்தையும் விரும்பியிருக்கமாட்டார். எனவே, உயர்நிலை மூன்றில் இறுதித்தேர்வுக்கு கடுமையாக உழைத்தேன்,” என்றார் அவர்.
பாயா லேபார் மெத்தடிஸ்ட் உயர்நிலை பள்ளியில் ‘என்‘ நிலை தேர்வில் பத்து புள்ளிகளுடன் சிறந்த தேர்ச்சி பெற்ற சிந்தியா, ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியில் அடிப்படைக் கல்வித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் படிப்பை முடித்து, அவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொள்ளவுள்ளார்.
“குடும்பச் செலவுகளைச் சமாளித்து, எங்களைப் பொறுமையுடன் நன்கு கவனித்து வரும் என் அம்மா எனக்கு ஒரு முன்னுதாரணம். என் அக்கா சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார். முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது எனக்கு சரியான ஆலோசனை வழங்குவார்,” என்றார் சிந்தியா.
அறுபது வயதாகும் சிந்தியாவின் அம்மா ஒரு தொழிற்சாலை துப்புரவாளராகப் பணிபுரிகிறார். மனநல குறைபாடுடைய 39 வயது மகனையும் உடல்நலமற்ற தாயாரையும் அவர் கவனித்துவருகிறார். சிந்தியாவின் 28 வயது அக்கா தற்போது துணை போலிஸ் படையில் பணிபுரிகிறார்.
குடும்ப பாரத்தைக் குறைக்க, பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும்போது பல இடங்களில் பகுதி நேர வேலைகளையும் பார்த்து வந்தார் சிந்தியா.
அவரது கல்விக்கு அரசாங்கம், தேவாலயங்கள், பள்ளி ஆகியவை நிதி உதவிகளையும் நன்கொடைகளையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார் சிந்தியா.
“எதிர்காலத்தில் நான் நல்ல நிலையில் இருக்கும்போது என்னை போன்ற வசதிகுறைந்த பிள்ளைகளுக்கு உதவ விரும்புகிறேன். சீருடை, புத்தகங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குக்கூட சிரமப்பட்ட எனக்கு, வசதிகுறைந்த பிள்ளைகளின் சிரமம் புரியும்,” என்று கூறினார்.
மக்கள் தொடர்பு அதிகாரியாக வேண்டும் என்ற தன் விருப்பத்திற்கு எப்போதுமே கலகலப்பாக இருக்கும் தனது இயல்பு பெரிதும் உதவும் என்று நம்புகிறார் சிந்தியா.
தைரியமாக பேசும் தன்மையுடைய இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார். 2017ஆம் ஆண்டில் ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியின் மாணவர் மன்றத்தின் தலைமை குழுவில் இடம்பெற்ற சிந்தியா, அறிமுக முகாம் போன்ற பெரிய அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
சிந்தியா சிறந்த ஊடக உள்ளடக்க தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார். ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியின் செய்தித்தாளில் துணை மின்னிலக்கச் செய்தி ஆசிரியராக, பல்வேறு சமூக ஊடகங்களை நிர்வகிப்பதற்கும் புகைப்படங்களைத் தொகுத்து வெளியிடுவதற்கும் உதவினார்.
“எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் சிறந்து விளங்க வேண்டும் என்று என் அப்பா கூறுவார்,” என்ற சிந்தியா, சமூகத்திற்கு உதவி புரிந்து, தன் பெற்றோரைப் பெருமையடையச் செய்யவேண்டும் என்ற இலக்குடன் பல்கலைக்கழக பயணத்தை துவங்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.