கொவிட்-19 கிருமி முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்து வந்த காலத்தில் இளையர்களுக்குப் பல சோதனைகள். வழக்கமாக ஈடுபடும் துடிப்பான நடவடிக்கைகளைச் செய்ய முடியாத நெருக்கடி. இரண்டாம் கட்டத் தளர்வு நிலையை அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு இவர்களின் பதில்கள்...
கடந்த இரு மாதங்களாக உடற்பயிற்சிக் கூடங்கள் மூடி இருந்தன. வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை. உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல, மன அமைதிக்கும் அவசியம். இரண்டாம் கட்டத் தளர்வுக்குப் பிறகு மீண்டும் என் நண்பர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திட பயிற்சி செய்யப் போகிறேன்.
கிஷோர் ரவிசந்திரன், 23, உடற்பயிற்சி ஆர்வலர்
கொவிட்-19 முறியடிப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பது பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டுவதைப் பார்க்கும்போது, ஒரு சமூகமாக நாம் முன்னேறியுள்ளோம் என்பதை உணர்கிறேன். நான் பெரிதும் விரும்பிச் செல்லும் கடற்கரைக்கு என் குடும்பத்தாருடன் செல்ல விரும்புகிறேன்.

பொன்னி சிவகுமார், 24, தேசிய கல்விக்கழக மாணவி
நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதில் ஒரு தனி இன்பம். இந்த இரண்டு மாதங்களில், நட்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். என் நண்பர்களைச் சந்தித்து, பல இடங்களுக்குச் சென்று உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க காத்திருக்கிறேன்.

ஷேக் யாசின், 32, உற்பத்திப் பொறியாளர்
கொவிட்-19 நெருக்கடியால் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. உணவக வருமானத்தில் சுமார் 95% சரிவு. மனம் தளராமல் சூழலுக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ளத்தான் வேண்டும். கிருமி முறியடிப்புத் திட்ட நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ள இந்த இரண்டாம் கட்டத்தில் உணவகத்தில் மீண்டும் வாடிக்கையாளர்கள் நிறைந்திருக்கும் காட்சியைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அ. மனோஜ் குமார், 26,
‘கிச்சன் குமார்ஸ்’ உணவகத்தின் உரிமையாளர்
மறுபடியும் நடனப் பயிற்சிகள், ஒத்திகைகள் ஆகியவற்றை வெளியிடங்களில் செய்யலாம் என்பது ஆறுதலை அளிக்கிறது. வீட்டில் நடனப் பயிற்சி செய்வது கடினமான ஒன்று. அதிலும் மெய்நிகர் பாணியில் நடனம் கற்றுக்கொள்வது சவாலான ஒன்று. மேடையில் நடனமாடுவது ஒரு தனி உணர்வு. பொருத்தமான சூழலில் பயிற்சி செய்தால்தான் நடன படைப்பும் சிறப்பாக அமையும். பல நாட்கள் கழித்து அந்த சூழலுக்குத் திரும்புவது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.

லோகேஸ்வரன் சின்னப்பன், 24,
நடனக் கலைஞர்
மீண்டும் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒப்பனை செய்யப் போவது ஆவலாக இருக்கிறது. என் தோற்றத்தைப் பராமரிப்பதால் தன்னம்பிக்கை கூடும் என்று நம்பும் நான், இனி அழகு நிலையங்களுக்குச் செல்லவும் அழகான ஆடைகளை அணிந்து நண்பர்களைச் சந்திக்கவும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

நிவேதா ராஜு, 26, முக ஒப்பனையாளர்
நாங்கள் குடும்பமாக மாதம் இரு முறையாவது உறவினர்களைச் சந்தித்து ஒன்றாக உணவகத்தில் சாப்பிடுவோம். கிருமிச் சூழலால் நோன்புப் பெருநாளின்போது உறவினர்களைச் சந்திக்க முடியவில்லை. இப்போது அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நிஷா சிக்கந்தர், 24, தேசிய கல்விக்கழக மாணவி