கொவிட்-19 கிருமித்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவினர் வெளிநாட்டு ஊழியர்கள். கிருமிப் பரவல் சூழலில் அவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலையை ஆராய இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் இணையக் காணொளி கலந்துரையாடல் வாய்ப்பளித்தது.
நம் சமூக விவகாரங்களைப் பற்றி ஆராய ஊக்குவிக்கும் ‘இலுமினேட் எஸ்ஜி’ (Illuminate SG) அமைப்பு ஏற்பாடு செய்த இந்த மெய்நிகர் கலந்துரையாடலில் சமூக ஆர்வலர்கள் உட்பட சுமார் 160 பேர் கலந்துகொண்டு தங்களின் ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டனர். 16 இளையர்களை உறுப்பினராகக் கொண்ட இந்த அமைப்பு, கலந்துரையாடல் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் பேசும் வாய்ப்பை பங்கேற்றோருக்கு வழங்கியது.
கிருமித்தொற்று சூழலுக்கு முன்னரே சம்பளம் சரியாகக் கொடுக்கப்படாத ஊழியர்கள், நீண்ட கால மருத்துவ விடுப்பினால் வருமானமின்றித் தவித்த ‘ஸ்பெஷல் பாஸ்’ ஊழியர்கள் ஆகியோர் பிரச்சினைகளை எதிர்நோக்கினர். இவர்களின் சிக்கல்களை இந்தத் தொற்றுநோய் சூழல் பன்மடங்காக்கியுள்ளதாக ‘ஹோம்’ அமைப்பைச் சேர்ந்த டெசரி லியோங் கூறினார்.
“வெளிநாட்டு ஊழியர்கள் வேலை ஏதும் செய்யாமல் தங்கும் விடுதிகளில் மூன்று வேளை உணவு சாப்பிடுகிறார்கள் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உதவி வழங்கும் சேவைகள் வழக்கத்தைவிட தாமதமாகச் செயல்படுவதால் சம்பளப் பிரச்சினை உள்ளவர்கள் அல்லது நோயால் அவதியுறுவோர், தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பார்த்துக்கொள்ள இயலாமல் தவிக்கின்றனர்,” என்றார் அவர்.
ஆயிரக்கணக்கில் வெளிநாட்டு ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அனுப்பும் முடிவு மிகச் சிக்கலானது என்று ‘டிடபிள்யூசி2’ (TWC2) அமைப்பின் தலைவர் டெபி ஃபோர்டிஸ் தெரிவித்தார்.
பல ஊழியர்களை ஆதரிக்க நிறுவனங்கள் சிரமப்படலாம் என்பதையும் சம்பளப் பிரச்சினையால் வேலையை இழந்தவர்களுக்குப் புது வேலை கிடைப்பது மிகவும் கடினமாகியுள்ளது என்பதையும் அவர் சுட்டினார்.
இதனை ஆமோதித்த ஹெல்த்சர்வ் அமைப்பின் சூ வன், வெளிநாட்டு ஊழியர் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கான காரணங்களை அவர்களிடம் புரியும்படி விளக்கும் சவால் வேலையிடங்களுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் காத்திருப்பதாகக் கூறினார்.
சிங்கப்பூர் வருவதற்காக வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் தாயகத்தில் கடன் வாங்கி இங்கு வருவதும், இவர்களின் நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் முதலாளிகளில் சிலர் சம்பளத்தைச் கொடுக்காமல் இவர்களைத் துன்புறுத்தி வருவதும் கலந்துரையாடலில் பங்கேற்ற இளையர்களுக்கு விளக்கப்பட்டன.
கொவிட்-19 சூழலுக்கு முன்பு பல ஆண்டுகளாகவே வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு இளையர்களிடையே இல்லை என்று ‘இலுமினேட் எஸ்ஜி’ உறுப்பினர் கணினி அறிவியல் பட்டதாரி கே. முருகேஸ், 24, தெரிவித்தார்.
“இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ‘ஃபாயிஸ்’ என்ற பங்ளாதேஷ் ஊழியரிடம் பங்கேற்பாளர்கள் பேசியதுடன் அவரிடம் கேள்விகள் கேட்டனர்,” என்று அவர் சொன்னார்.
மெய்நிகர்க் கலந்துரையாடலாக இருந்தாலும் அனைவரும் தயக்கமின்றி பேசுவதற்கான சூழலை உருவாக்குவதற்காக நான்கு பேச்சாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்ததாக ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் பொதுச் சுகாதாரத் துறைக்கான முதுகலை மாணவர் எஸ். புவனேஸ்வரி, 29, தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க இரண்டு வெளிநாட்டு ஊழியர்களை நான் அழைத்திருந்தேன். இவர்களுடன் மேன்மேலும் பேசப் பேச இவர்களைப் பற்றிய தவறான கண்ணோட்டம் மறைந்துவிடுகிறது,” என்றார்.
கிருமித்தொற்று சூழலில் வெளிநாட்டு ஊழியர்களை உதாசீனப்படுத்துவது எப்படி தவறான ஒன்றோ அதேபோல அவர்களைப் பரிதாபமாகப் பார்ப்பதும் தவறு என்று அமைப்பில் கடந்தாண்டு சேர்ந்த என்யுஎஸ் அரசியல் விஞ்ஞானத் துறை மாணவி சமீஹா நிக்கத் சஃபீல், 21, தெரிவித்தார்.
“கலந்துரையாடல் வழி ஏற்படும் விழிப்புணர்வு, அத்துடன் நின்றுவிடாமல் அறச்செயல்களுக்கு வித்திடவேண்டும். செயலில் இறங்குவதற்கு முன் உண்மைச் சூழலை நன்கு ஆராயவேண்டும் என்று இளையர்களுக்குக் கூற விரும்புகிறோம்,” என்றார் அமைப்பின் தலைவர், என்யுஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவரான டேரல் லிம்.