நம் உள்ளூர் தமிழ் குறும்படம் ஒன்று அனைத்துலக அரங்கில் கொடிகட்டி பறக்கின்றது. மனதை வருடும் காட்சிகள், செவிக்கு விருந்தூட்டும் பின்னணி இசை, இயல்பான நடிப்பு என பாராட்டுக்குரிய இந்த உள்ளூர் தமிழ்/ஆங்கில குறும்படத்தின் தலைப்பு ‘வெயிட் ஃபார் மி’.
காது கேளாத குறைபாடுடைய சரண்யா கதாபாத்திரம், பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறாள். வாழ்க்கையில் தான் பெற விரும்பும் அன்பும் காதலும் எவ்வாறு தன்னை வந்தடைகின்றன என்பதுதான் கதைக் கரு.
இந்த 30 நிமிட குறும்படத்தை ‘காமி மீடியா’ (Gami Media), ‘மூவிங் இமேஜஸ் புரோடக்ஷன்ஸ்’ (Moving Images Productions) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தக் குறும்படம் சென்ற ஆண்டு லண்டனில் நடைபெற்ற அனைத்துலக திரைப்பட தயாரிப்பாளர் விழாவில் (International Filmmakers Festival 2020) சிறந்த நடிகை விருது, சிறந்த இயக்குனர் விருது, சிறந்த துணை நடிகை விருது மற்றும் சிறந்த குரும்படத்திற்கான விருது என்று நான்கு விருதுகளுக்கு நியமிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வாண்டின் ‘தோக்கியோ லிஃப்ட் ஆப்’ எனும் திரைப்பட விழாவில் (Tokyo Lift-Off Festival 2020) கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்திரைப்பட விழாவில் ‘ட்ரென்ட்செட்டர்ஸ்’ (trendsetters) பிரிவின் இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்ற ஒரே சிங்கப்பூர் குறும்படம் இது.
குறும்படத்தை இயக்கிய திருமதி லெஷா சோனம், 31, சிறு வயதிலிருந்தே திரைப்படத் தயாரிப்பிலும் நடிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
2008ஆம் ஆண்டிலிருந்தே பல உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி களுக்குத் தயாரிப்பாளர், கதாசிரியர் என பணியாற்றியதுடன் நடிகராகவும் உள்ளூர் நாடகங்களில் வலம் வந்துள்ளார்.
இவர் இயக்கத்தில் உருவான முதல் குறும்படம் இது. “இந்த குறும்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற யோசனை எனக்கு 2017ல் தோன்றியது. கடந்தாண்டு என் கணவர் சுரேந்திரனின் ஆதரவோடு, எனது நண்பர் பவித்ரன் நாதனுடன் இணைந்து இப்படத்தை உருவாக்க தொடங்கினேன்.
“இக்குறும்படம் இதுபோன்ற நியமனங்களைப் பெறுமென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகஸ்ட் 2019 முதல் சில அனைத்துலக விழாக்களுக்காக இக்குறும்படத்தைச் சமர்ப்பித்தோம். குறும்படத்தை இம்மாதத்திற்குப் பிறகு பொதுமக்களுக்காக திரையிட முடிவெடுத்துள்ளோம்,” என்று தெரிவித்தார் திருமதி லெஷா.
இசைப்பிரியரான திருமதி லெஷா, குறும்படத்தின் பின்னணி இசைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
“படத்திற்கான சரியான பின்னணி இசையமைப்பாளரைக் கண்டுபிடிக்க நாங்கள் சிரமப்பட்டோம். நடிகை வித்யா பாலனின் ‘தும்ஹாரி சுலு’ என்ற ஹிந்தி திரைப்படத்திற்காக பின்னணி இசை கொடுத்த கரண் குல்கர்னியை கூட நாங்கள் தொடர்புகொண்டோம். நிதிப் பற்றாக்குறையால் அவரின் சேவையைப் பெற முடியாமல் போனது.
4 மாதங்கள் கடுமையான தேடலுக்குப் பிறகு, இக்குறும்படத்திற்கு அழகான இசையை வழங்கிய பிரபல மலேசிய தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் வர்மன் இளங்கோவனைத் தேர்வு செய்தோம்,” என்று கூறினார்.
இக்குறும்படத்தைச் சொந்த செலவில் தயாரித்த திருமதி லெஷாவிற்கு நிதி பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக இருந்தது. குறும்பட தயாரிப்பிற்கான நிதி உதவிகளும் மானியங்களும் அதிகம் பெற முடியாத கட்டத்தில் தம்முடைய தங்கை துணை தயாரிப்பாளரானது தமக்கு ஆதரவாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்க விரும்பும் அவர், “என்னை போன்று வளர்ந்து வரும் உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெற ஊக்குவிக்கும் வகையில் சற்று அதிகமான நிதி உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
இதோடு, திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் குழுக்களிடையே ஒத்துழைப்பும் இணைந்து செயலாற்றும் விருப்பமும் இருந்தால் பல சிறந்த படங்களைத் தயாரிக்க முடியும் என்று கூறினார்.
‘தோக்கியோ லிஃப்ட் ஆப்’ திரைப்பட விழாவின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் பட்சத்தில், ‘நியூயார்க் லிஃப்ட் ஆஃப்’ திரைப்பட விழாவில் (New York Lift-Off Festival) குறும்படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது என்ற நற்செய்தியையும் பெற்றனர் படக்குழுவினர். இந்தத் திரைப்பட விழா இம்மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும். பார்வையாளர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ள படங்களைப் பார்த்து பிடித்த படத்திற்கு வாக்களிக்கலாம்.