கொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்

வரைகலை, வடிவமைப்புத் துறையில் பயில சுஜே அமரேஷ் ஜெயக்குமார் முடிவு செய்தபோது, பிற்காலத்தில் அத்துறைக்கான தேவை அதிகம் இருக்காது என்றும் அத்துறையில் வாழ்க்கைத்தொழில் நிச்சயமற்றதாக இருக்கும் என்றும் இவரிடம் இவரது குடும்பத்தினரும் இவருக்குத் தெரிந்தவர்களும் கூறினர்.

ஆனால், கொவிட்-19 குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு சுஜேயின் திறன்கள் கைகொடுத்துள்ளன.

கிருமி பரவும் சூழலில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘பர்ஸ்ட்டிங் தி பபிள்’ என்ற இயக்கத்திற்கு இவரும் அவரது நண்பர்களும் பங்களித்தனர்.

வரைகலை ஓவியங்களையும் காணொளிகளையும் தயாரித்து, சிறார்களுக்கு உதவும் ‘பிளேயம்’ அமைப்பிற்கு $3,000க்கு மேல் நிதி அவர்கள் திரட்டினர்.

“எங்களது வகுப்பின் பணித்திட்டத்திற்காக இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ‘பிளேயம்’ அமைப்புடன் பணியாற்றத் தொடங்கினோம். பாதுகாப்பான சூழலில் மாணவர்கள் தங்களது உணர்ச்சிகளை ஓவியம் வழி வெளிப்படுத்த வகைசெய்வதே இந்த அமைப்பின் நோக்கம்,” என்று சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி இறுதி ஆண்டு மாணவரான சுஜே, 19, தெரிவித்தார்.

கொவிட்-19 சூழலில் ஆட்குறைப்பு, பொருளியல் மந்த நிலை உள்ளிட்டவற்றால் பெற்றோர் மனஉளைச்சலுக்கு ஆளாகும்போது பிள்ளைகளும் பாதிப்படைகின்றனர்.

எனவே பெற்றோர், பிள்ளைகளை ஓவியக் கலையில் ஈடுபடுத்தி கற்பனைத்திறனை வளர்க்க இந்த ஏற்பாடு உதவுவதாக சுஜே கூறினார்.

‘பர்ஸ்ட்டிங் தி பபிள்’ இயக்கத்திற்குப் பெயர் வைக்கப்பட்டதற்கான காரணத்தையும் சுஜே விளக்கினார்.

ஒருவரை நீர்க்குமிழிபோல் கவலை சூழ்கிறது, அதனை உடைப்பதே இயக்கத்தின் நோக்கம் என்றார் இவர்.

முதியோருக்கு மருத்துவ உதவி வழங்கும் ‘ஹோமேஜ்’ உள்ளிட்ட தொண்டூழிய அமைப்புகளுக்குப் பங்களிக்க பலதுறைத் தொழிற்கல்லூரியில் இவர் கற்ற திறன்கள் உதவின.

இயூ டீ தொடக்கப் பள்ளியிலும் கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்ற இவருக்கு சிறு வயதில் ஓவியக்கலையில் அதிக ஈடுபாடு இல்லை என்றாலும், உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது கைவினைப் பொருட்களை உருவாக்க மாணவர்களுக்கு கற்றுத்தர இவர் விரும்பினார்.

எந்த துறையில் பட்டயக் கல்வியை மேற்கொள்வது என்பது குறித்து தீவிரமாக யோசித்த சுஜய்க்கு, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்ற பொது வரவேற்பு தினம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வரைகலை, வடிவமைப்புத் துறையில் பயில தாம் முடிவு செய்ததாக இவர் தெரிவித்தார்.

இவரது பெற்றோர் பணிபுரியும் அதே கடல்துறையில் சேர சுஜய்க்கு அறிவுறுத்தப்பட்டது. இறுதியில் தனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்க இவர் முடிவு எடுத்தார்.

பிடித்த துறையில் படிப்பது மனநிறைவு தருவதாக சுஜே தெரிவித்தார்.

கொவிட்-19 காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள் தங்களது விளம்பர இயக்கங்களுக்கு திறன்மிக்க இளையர்களை நாடுவதாகக் குறிப்பிட்ட சுஜே, ஓவியக்கலைஞர்களுக்கான தேவை குறைவு என்ற தவறான கருத்தை கலைக்க விரும்புகிறார்.

கலைஞர்களின் பங்களிப்பின்றி கொவிட்-19 தொடர்பான செய்திகளை மக்களிடம் இந்த அளவிற்கு கொண்டுசேர்த்து இருக்க முடியாது,” என்றார் இவர்.

பட்டயக் கல்விக்குப் பிறகு தொடர்புத்துறையில் பட்டக்கல்வியை மேற்கொள்ள சுஜே விரும்புகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!