சுடச் சுடச் செய்திகள்

பின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்

எதிர்கால லட்சியம் ஏதுமில்லை, தனக்காக மட்டுமே வாழ்ந்து வந்தார், அத்துடன் கூடா நட்பு வேறு. ஒரு கட்டத்தில் கல்வி என்பது பதின்ம வயது சுரேஷ் ராஜசேகரம் வாழ்க்கையில் எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இப்போதோ 32 வயதில் இவர் தாதிமைத் துறையில் இளநிலைப் பட்டதாரியாக, முனைவர் ஆவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். 

“நான் உயர்நிலை இரண்டில் இருந்தபோது ஒழுங்காக படிக்கவில்லை. விரைவுநிலையிலிருந்து வழக்கநிலை ஏட்டுக்கல்விக்குத் தள்ளப்பட்டேன். கல்வி மீது இருந்த கவனம் போனது. ஜிசிஇ வழக்கநிலைத் தேர்வில் தேறாததால் உயர்நிலை ஐந்துக்குச் சென்று சாதாரண நிலைத் தேர்வை எழுத முடியவில்லை,” என்று கூறினார் சுரேஷ். தொழில்நுட்பக் கல்விக் கழகத்திற்குச் செல்ல தகுதிபெற்ற சுரேஷ், அங்கும் செல்ல விரும்பாமல் ஒன்றரை ஆண்டுகளாக கிடைத்த சிற்சில வேலைகளைச் செய்துகொண்டு மிச்ச நேரத்தில் நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிந்ததாகக் கூறினார்.

“ஐடிஇயில் படிப்பதை அவமானமாகக் கருதும் காலகட்டம் அது. விரக்தியில் நான் குடிப்பழக்கத்தில் இறங்கினேன். கேளிக்கைக்கூடங்களுக்கும் அதிகம் செல்லத் தொடங்கினேன்,” என்றார் சுரேஷ். 

குடும்பத்தில் வன்முறை, பொருளாதாரப் பிரச்சினை என பதற்றமான சூழலும் இருந்தது. சுரேஷுக்கு ஓர் அக்கா, ஒரு தங்கை. சுரேஷ் 13 வயதாக இருந்தபோது பெற்றோர் விவாகரத்துப் பெற்றனர். படிப்பில் கவனம் இழந்ததற்கு இது காரணமா எனக் கேட்டதற்கு சுரேஷ், “இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. இதே சூழலில் இருந்தும் என் அக்கா, படிப்பில் கவனம் செலுத்தி தேர்வில் சிறப்பாகச் செய்திருந்தார். எனவே நான் அப்போது பின்தங்கியதற்கு என் சிந்தனைப் போக்கே காரணம் என்பேன்,” என்றார். 
அக்காவின் அரவணைப்பு

சிரமங்களுடைய வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபடக் கைகொடுப்பது கல்வி ஒன்றுதான் என அக்கா திலகவதி 
அடிக்கடி கூறியதாக சுரேஷ் தெரிவித்தார். 

“என் அக்கா சொன்னது சரி என்று உணர்ந்தேன். ஆனால் அந்த உணர்வை செயலுக்குக் கொண்டுவர ஆரம்பத்தில் என்னால் முடியவில்லை,” என்று அவர் கூறினார். அக்கா இடைவிடாது கொடுத்த ஊக்குவிப்பால் சுரேஷின் சிந்தனை மாறியது. தொழிற்கல்விக் கழகத்தில் சேர இறுதியில் ஒப்புக்கொண்டார். அப்போது எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்ற முக்கிய முடிவை எடுக்க துணையாக இருந்ததும் அக்காதான் என்று சுரேஷ் கூறினார்.  

“ஐடிஇயில் வழங்கப்பட்ட அனைத்து துறைகளுக்கான விவரங்களை என் அக்கா என்னிடம் காண்பித்தார். எந்தப் பாடங்களில் விருப்பவில்லை என்ற அடிப்படையில் அவர் கொடுத்த தெரிவுகளை நான் ஒவ்வொன்றாக நீக்கினேன். இறுதியில் விளையாட்டு அறிவியல் நிர்வாகத் துறையும் தாதிமைத் துறையும் எஞ்சின,” என்று அவர் தெரிவித்தார். இறுதியில் அவர் தாதிமைத் துறையைத் தேர்ந்தெடுத்தார்.

“சீருடை உடுத்தி ஓர் அமைப்பில் பணியாற்றுவது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் ஓராண்டுக்கு பிறகு திருப்தி ஏற்படவில்லை என்றால் அந்தப் படிப்பிலிருந்து விலகிவிடுவேன் என்று அக்காவிடம் என் நிபந்தனையைக் கூறினேன்,” என்கிறார் சுரேஷ்.  
மகனின் வாழ்க்கைமுறையைக் கண்டு துவண்டுபோயிருந்த சுரேஷின் தாயாரது அவநம்பிக்கை, அக்கா திலகவதியின் அன்பு வார்த்தைகளால் மெல்ல மாறியது.  

ஆசானின் நம்பிக்கை

காதில் வளையம், சாயம் பூசிய முடி மற்றும் எகத்தாளமான நடை. இதே தோற்றத்துடன் சுரேஷ் தன் தாயாருடன் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். ஆனால் நேர்முகத் தேர்வை நடத்திய கல்விக் கழகத்தின் சுகாதார அறிவியல் பள்ளி இயக்குநர் திரு டே வெய் சர்ன், சுரேஷை சேர்த்துக்கொள்ள முடிவு செய்தார்.

“சுரேஷை நேர்முகத் தெரிவில் சந்தித்தபோது, அவரிடம் ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் மகனின் எதிர்காலம் என்னவாகப் போகிறது என்ற அந்த தாயாரின் முகத்தில் தெரிந்த வாட்டமும் பயமும் என்னை மீண்டும் யோசிக்க வைத்தது. தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கும்படி சுரேஷ் என்னிடம் கேட்டபோது எங்கள் இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன. இந்த வாய்ப்பை அவருக்குக் கொடுத்துப் பார்க்கலாம் என நினைத்தேன். அப்போது நான் எடுத்த அந்த முடிவு சரியானது என்று இப்போது அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்,” என்று திரு டே தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

தன் வாழ்க்கையில் இத்தகைய திருப்புமுனையை ஏற்படுத்திய திரு டேயை தன் ஆசானாக கருதுவதாக சுரேஷ் கூறினார். 
“வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துவேன் என உறுதி கூறிய பிறகு நான் பின்வாங்க விரும்பவில்லை,” என்கிறார் சுரேஷ். 2006ஆம் ஆண்டில் ஐடிஇ மத்திய கல்லூரியில் தன் படிப்பைத் தொடங்கிய முதல் பள்ளித் தவணையிலேயே ‘பி’ தகுதிநிலையைப் பெற்றார்.  
“வாழ்க்கையில் ஒருவருக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம். நினைத்த நேரத்திற்கு தூங்கி எழுந்திருக்க முடியாது. போகப் போக அனைத்து வேலைகளையும் முறையாக செய்யப் பழகிக்கொண்டேன். எனக்கு தாதிமைத் துறையில் ஆர்வம் இருந்ததை உணர்ந்தேன்,” என்று சுரேஷ் கூறுகிறார்.

வெள்ளி விருதுடன் பட்டயம்

ஐடிஇயில் 3.76 ஜிபிஏ புள்ளிகளைப் பெற்ற சுரேஷ், 2008 முதல் 2011 வரை நீ ஆன் பலதுறை தொழிற்கல்லூரியின் தாதிமைத் துறையில் சேர்ந்து படித்தார். இறுதியில் அவர் 3.98 புள்ளிகள் பெற்று வெள்ளி விருதுடன் கூடிய பட்டயத்தையும் பெற்றார். நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேலைப் பயிற்சிகளின்போது வழங்கப்பட்ட படித்தொகை அவருக்குப் பேருதவியாக இருந்தது. வேலைப் பயிற்சி வழியாக 2013ஆம் ஆண்டு முதல் 2016 வரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் படித்தார். 

இப்போது தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றுகிறார். கொவிட்-19க்கு எதிரான போரில் முன்களப் பணியாளரான இவரது வேலைப்பளு கணிசமாகக் கூடியுள்ளது, முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது. 
“பல்கலைக்கழகத்திலுள்ள மற்ற மாணவர்கள் என்னைவிட ஏட்டுக் கல்வியில் வல்லவர்கள். ஆயினும், பயிற்சி சார்ந்த திறனுக்கு அடித்தளமாக அமைந்தது என் தொழில்நுட்பக் கல்விக் கழகப் படிப்பே,” என்று கூறினார்.

சுரேஷுக்கு திருமணமாகி ஈராண்டுகள் ஆகின்றன. மனைவியும் தாதி. தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளைக் கடந்து வந்து வெற்றி கண்ட போதிலும் தன் தாதிமைப் பணியில் தொடர்ந்து தியாகங்கள் செய்ய வேண்டிய தேவை இருப்பதை இவர் சுட்டுகிறார். ஆயினும் ஆர்வமே மேலோங்கி இருப்பதாக தெரிவித்த சுரேஷ், இளையர்கள் தங்களது ஆர்வம் எதில் உள்ளது என்பதை நன்கு ஆராயவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 
“எனது ஆர்வம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு சில காலம் எடுத்தது. ஆயினும், ஒருவர் மனம் தளராமல் எதில் விருப்பம் என்று தேடினால் அதை நிச்சயம் ஒருநாள் அறிவார்,” என்கிறார் சுரேஷ். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon