சுடச் சுடச் செய்திகள்

வாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்

கணினித் தொழில்நுட்பம் பற்றி எதுவும் தெரியாத நிலையில் அறிவியல் பாடத்தில் மேல்நிலைத் தேர்வு எழுதிய கீர்த்தனா ஜண்முகம், சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் (எஸ்யுடிடி) பொறியியல் கட்டமைப்பு, வடிவமைப்புத் துறையில் சேர்ந்தார்.

ஆயினும், மூன்றரை ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் தாம் முன்னெடுத்த சொந்த முயற்சியால் திறன்களை மேம்படுத்திக்கொண்டதுடன் தற்போதைய கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் பிறருக்குப் பயன்படக்கூடிய செயலி ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார்.

வருங்கால வாழ்க்கைத் தொழில் குறித்து முடிவெடுக்க விரும்பும் மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற ‘பிளேன் அஹெட்’ என்ற செயலியின் சோதனை வடிவத்தை தமது இறுதியாண்டு பணித்திட்டத்திற்காக சக மாணவர்கள் சிலருடன் சேர்ந்து கீர்த்தனா உருவாக்கி இருக்கிறார்.

ஒருவரது குணாம்சங்களை நன்கு ஆராயும் ‘எம்பிடிஐ’, ‘ரெய்செக்’ போன்ற தேர்வுகளின் அடிப்படையில் பொருத்தமான வாழ்க்கைத் தொழிலைத் தேர்ந்தெடுக்கவும் கல்வித் தெரிவுகளை ஒப்பிடவும் இந்தச் செயலி உதவும்.

“தொடக்கக் கல்லூரி மாணவர்களைக் கருத்தில்கொண்டு இந்தச் செயலியை நாங்கள் வடிவமைத்தோம்,” என்றார் ஈசூன் தொடக்கக் கல்லூரி முன்னாள் மாணவியான கீர்த்தனா, 22.

உயர்நிலை கல்வியைக் காட்டிலும் அதிகளவில் மாறுபடாத தொடக்கக் கல்லூரி கல்வி முறையில் மாணவர்கள் எந்தத் துறையில் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுப்பது, சரியான முடிவை எப்படி எடுப்பது போன்றவற்றில் சிரமத்தை எதிர்நோக்கலாம் என்று இவர் கருதுகிறார்.

“உயர் கல்விக்கான செலவு, வேலைவாய்ப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு கிடைக்கும் மாதச் சம்பளம் போன்றவற்றை இந்தச் செயலி மூலம் ஒப்பிடலாம்,” என்று கீர்த்தனா கூறினார்.

ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பின் தகவல்களைக் கொண்டு இந்தச் செயலியை இவர் உருவாக்கினார்.

இந்தச் செயலி பதிவிறக்கம் செய்வதற்கு இன்னமும் தயார்நிநிலையில் இல்லை என்றாலும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (GovTech) மாணவர்களின் பயன்பாட்டிற்கு அதை அறிமுகப்படுத்தக்கூடும்.

ஒவ்வொரு தொடக்கக் கல்லூரிக்கும் கல்வி ஆலோசகர் ஒருவரும் வாழ்க்கைத் தொழில் ஆலோசகர் ஒருவரும் நியமிக்கப்படுவர் என்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான இத்தகைய ஆலோசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனைத் தாம் வரவேற்பதாகக் கூறிய கீர்த்தனா, தொடக்கத்தில் இருந்தே சரியாக திட்டமிட்டு, திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த இந்தச் செயலி உதவும் என்றார்.

ஆயினும், கீர்த்தனாவின் கல்விப் பயணம் வேறுபட்டது. தொடக்கத்தில் உயிர் மருத்துவத்துறை மீது ஆர்வமாக இருந்த இவர், இறுதியில் அடிப்படை வகுப்புகளை முடித்த பிறகு வர்த்தக தரவாய்வு (Business Analytics) துறையில் சேர முடிவெடுத்தார்.

“இந்தத் துறையில் கல்வி முடித்தோருக்கு வேலைச் சந்தையில் அதிகம் தேவை இருப்பதை நான் அறிந்தேன். தொழில்நுட்ப ரீதியான மற்ற தெரிவுகளை ஆராய்ந்து அவற்றில் எதில் எனக்கு ஆர்வம் உள்ளது என்பதைப் பற்றி யோசித்தேன்,” என்றார் இவர்.

நிரலிடுதலைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாவிட்டாலும் ‘பைத்தன்’ நிரலிடுதலை ‘ஹேக்வேகன்’ என்ற தனியார் பள்ளி வாயிலாக தாம் அதைக் கற்றுக்கொண்டதாக கீர்த்தனா சொன்னார். தேசிய சேவையின்போதே மாணவர்கள் இதுபோன்ற திறன்களைக் கற்றால் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியும் என்றார் இவர். தொழில்நுட்ப அம்சங்களைச் சுயமாக கற்ற இவர், இளநிலை பட்டதாரிகளுக்கான அரசாங்கம் வழங்கிய மானியத்தைப் பயன்படுத்தி பலனடைந்தார்.

சிறந்த பொறியியல் வடிவமைப்புக்கான ‘ஜேம்ஸ் டைசன்’ விருதை கீர்த்தனாவின் குழு கடந்தாண்டு வென்றது.

“கற்பனையில் தோன்றிய ஒரு பொருளை உருவாக்கும் ஒருமித்த நோக்கம் கொண்ட நண்பர்களுடன் இணைந்து செயல்பட்டது அருமையான அனுபவமாக இருந்தது,” என்று கீர்த்தனாவின் குழுவில் இடம்பெற்ற ஆங் வெய் ஜியே, 24, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“கீர்த்தனா போன்ற தன்முனைப்பு மிகுந்த மாணவர்களுடன் புத்தாக்கப் படைப்புகளை உருவாக்கும் அனுபவம் மிகுந்த மன நிறைவை அளிக்கிறது,” என்று சேரா ஓங், 23, கூறினார்.

தமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவாய்வாளராக சேர்ந்தார்.

நல்ல வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வதுடன் சமூகத்திற்குத் திருப்பித் தர, இளம் தலைவர்களுக்கான ‘யங் விமன் லீடர்ஷிப் கனெக்‌ஷன்’ என்ற சங்கத்தில் இணைந்துள்ளார்.

இந்த ஆண்டில் பல்கலைக்கழக பட்டதாரிகள் உணர்ந்த அதே தாக்கத்தை தாமும் உணர்ந்ததாக கீர்த்தனா கூறினார்.

“இந்தக் காலகட்டத்தில் வேலை கிடைப்பது மிகவும் சிரமம். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே வேலைக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினேன். தொடர்பு வட்டத்தை விரிவுபடுத்தினேன். மனம் தளராமல் இருப்பது மிகவும் முக்கியம்,” என்றார் கீர்த்தனா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon