லீ குவான் இயூ விருதை வென்ற மாணவர்

சமூக சேவையிலும் பள்ளிப் படிப்பிலும் சிறந்து விளங்கிய  19 வயது திரு அஜ்மல் சுல்தான்  அப்துல் காதர் இந்த ஆண்டின் லீ குவான் இயூ விருதைப் பெற்றிருக்கும் ஒரே இந்திய மாணவர்.

வகுப்பறையைத் தாண்டி கலைகள், விளையாட்டுகள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் சாதனை படைத்த 430 மாணவர்களை கௌரவிக்கும் விதத்தில், தொழில்நுட்பக் கல்விக் கழகம் மாணவர் சாதனையாளர் விருதுகளை வழங்கியது. 

அவர்களில், 48 மாணவர்கள் மதிப்புமிக்க லீ குவான் இயூ முன்மாதிரி மாணவர்/பயிற்சி விருது, லீ குவான் இயூ இணைப்பாட விருது, லீ குவான் இயூ தொழில்நுட்ப விருது ஆகிய விருதுகளைப் பெற்றனர். 

சிறந்த தலைமைத்துவம், நிறுவன திறன்களை வெளிப்படுத்தியதற்காகவும், தனது கல்லூரியின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காகவும் லீ குவான் யூ இணைப்பாட விருதைப் பெற்றார் திரு அஜ்மல். 

இந்திய, மலாய், சீன இனங்களைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் இந்த விருதை வென்றனர். 

கொவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில், வரவிருக்கும் நிகழ்வுகள், இணைப்பாட நடவடிக்கைகள் குறித்த புதிய மாற்றங்கள், பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் ஆகியவற்றை எளிதில் அணுகுவதற்காக மாணவர்களுக்கு ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதில் தனது குழுவை வழி நடத்தினார் திரு அஜ்மல். இது பலருடன் பழகவும் மேலும் பல திறன்களைக் கற்றுக்கொள்ளவும் உதவியதாக அவர் கூறினார்.

மாணவர் பேரவை மன்றக் குழுவின் தலைவரான திரு அஜ்மல், பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை ஒரு குழுவாக பணியாற்ற ஒன்றிணைத்து, பள்ளி முதல்வர் சவால் கோப்பை, உணவுத் தட்டுகளை திருப்பி வைக்கும் பிரசாரம், துடிப்புடன் மூப்படைதல்  விழா போன்ற பல முக்கிய திட்டங்களில் பங்கேற்றுள்ளார். 

கடந்த 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற, வியட்நாம் இளையர் பயணத் திட்டத்தின் மாணவர் தலைவராகப் பணிபுரிந்த திரு அஜ்மல், அங்குள்ள கே ட்ரே (Khe Tre) என்னும் உயர்நிலைப் பள்ளியின் மாணவர்களுக்காக ஒரு புதிய காற்பந்து மைதானத்தை உருவாக்க வழிவகுத்தார்.

முதியோர் இல்லத் திட்டங்களில் பங்கேற்று கம்போங் கிளாம் சமூக நிலையத்திற்கு அருகில் உள்ள முதியோர் குடியிருக்கும் வீவக வீடு களை சுத்தம் செய்வதிலும் வண்ணம் பூசுவதிலும் திரு அஜ்மல் ஈடுபட்டார்.

வாழ்க்கையில் சாதிப்பது குறித்து பேசிய திரு அஜ்மல், “எந்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாலும், கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. அது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

“மனதை  நிதானப்படுத்த மனதுக்குப் பிடித்த இணைப்பாட நடவடிக்கையில் சேர ஒரு வாய்ப்பைக் கண்டறிய வேண்டும். பள்ளிகள் வழங்கும் எந்த வாய்ப்பையும் ஒருபோதும் தவறவிடக்கூடாது. தொடர்புகளை விரிவுபடுத்தி, சுய
மதிப்பையும் திறன்களையும் பெருக்கிக்கொள்வது முக்கியது. பல வாய்ப்புகளை வழங்கி உதவும் பள்ளிகளுக்கு திரும்ப உதவி செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்பதும் முக்கியம்,” எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

விண்வெளி எந்திரவியல் தொழில்நுட்பத்தில் ‘நைடெக்’ படிப்பை மேற்கொள்ளும் திரு அஜ்மல் ஒரு தொழில்முனைவராக வர விரும்புகிறார். 

தமது பெற்றோரை முன்னுதாரணமாகக் கொள்ளும் போக்குவரத்து அல்லது தளவாடங்களைக் கையாளும் நிறுவனத்தை நிர்வகிப்பதில் தனது தந்தையைப் பின்பற்ற முடியும் என்று திடமாக நம்புகிறார் திரு அஜ்மல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!