You are here

முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதி வைத்த கடிதம்

  • மனைவி, மகன், மகளுடன் கவிஞர் முத்துக்குமார்.

மறைந்த பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் தனது மகனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த் துள்ளது. இது 2011ஆம் ஆண்டு பிரபல பத்திரிகை ஒன்றில் அவர் எழுதிய ‘அணிலாடும் மூன்றில்’ என்ற தொடரில் இடம்பெற்றுள்ளது.

“அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். “இதைப் படித்துப் புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். பின் நாட்களில் இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் தகப்பன் உனக்குச் சேர்த்த ஆகப் பெரிய சொத்து இதுதான் என உணர்வாய்.

“என் பிரியத்துக்குரிய பூக் குட்டியே! உன் மெத்தென்ற பூம் பாதம் என் மார்பில் உதைக்க... மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை; குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை; கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தேன். “உலகிலேயே மிகப் பெரிய இன்பம் எது? தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை. ‘தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்’ என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், மெய்யா கவே நான் தூள்தூளாக உடைந்து போனேன். உன் பொக்கை வாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டிருந்தாய்.

“என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்துகொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இது தான், கற்றுப் பார்.

“எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக்கொண்டே இரு. உழைக்கத் தயங்காதே. உழைக் கும் வரை உயர்ந்துகொண்டு இருப்பாய். நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்து வைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அக்காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

“கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. “உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்,” என்று அக்கடிதத்தில் பல விஷயங்களைக் கூறியுள்ளார் முத்துக்குமார்.

மனைவி, மகன், மகளுடன் கவிஞர் முத்துக்குமார்.