செய்திக்கொத்து (பொதுத்தேர்தல் 2020) 30-6-2020

துணைப்பிரதமர் ஹெங் சுவி கியட்:  அலட்சியம் வேண்டாம்

பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் எச்சரித்து இருக்கிறார்.

93 தொகுதிகளிலும் எதிர்த்தரப்புகள் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் செயல் கட்சி அதிகாரத்தை இழக்கும் சாத்தியம் உண்டு என்று அவர் விளக்கினார்.

ஆகையால் மக்கள் தெள்ளத்தெளிவான ஆதரவை மக்கள் செயல் கட்சிக்கு அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் நம்மை எதிர்நோக்கி உள்ள பல பிரச்சினைகளையும் சமாளித்து மீண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார்.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், நாடாளுமன்றத்தில் சமநிலை தேவை என்று சனிக்கிழமை கருத்து தெரிவித்து இருந்தார்.

இது பற்றி கேட்டதற்கு அளித்த பதிலில், மக்கள் செயல் கட்சி திடீரென்று சில முழக்க வரிகளை அறிவிக்கும் கட்சி அல்ல என்றும் அது காலகாலமாக மக்களுக்காக அரும்பாடுபட்டு வரும் கட்சி என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.


 

தஞ்சோங் பகார் மசெக அணி

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் வரும் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி அணியில் நிறுவனத் தலைவர் ஆல்வின் டான், 39, என்பவரும் முன்னாள் அரசு ஊழியரான எரிக் சுவாவும் 41, புதிய முகங்களாகக் களம் காணுகின்றனர்.

அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மெல்வின் யோங், அருகில் உள்ள ராடின் மாஸ் தனித் தொகுதியில் போட்டியிடப்போகிறார். மற்றொரு உறுப்பின ரான டாக்டர் சியா ஷி-லு விலகுகிறார். இவர்களுக்குப் பதிலாக புதுமுகங்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் போட்டியிடும் மசெக அணியில் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, ஜோன் பெரேரா, திரு டான், திரு சுவா ஆகியோர் இடம்பெற்று இருப்பர். இந்த விவரங்கள் நேற்று மெய்நிகர் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டன.


 

ஜூரோங்கில் மூத்த அமைச்சர் தர்மன் அணியில் இரு புதுமுகங்கள்

ஜூரோங் குழுத்தொகுதியில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தலைமையில் அலெக்சாண்டிரா மருத்துவ மனையின் சுகாதாரப் பராமரிப்பு மறுவடிவமைப்புத் துறை தலைவராக இருக்கும் ஸி யாவ் சுவான், 35, (படம்) தேர்தலில் களமிறங்குவார்.

தெமாசெக் இன்டர் நேஷனல் அமைப்பின் நிறுவன மேம்பாட்டுத் துறை இயக்குநரான ஷான் ஹுவாங், 37, மேலும் ஒரு புதுமுகமாகக் களம் காணுகிறார்.

அங்கு கட்சியின் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஐவன் லிம் விலகிவிட்டதை அடுத்து அவருக்குப் பதிலாக ஸி யாவ் சுவான் களம் இறங்குவார் என்று நேற்று திரு தர்மன் அறிவித்தார். வர்த்தக தொழில், வெளியுறவு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டான் வூ மெங், திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம் ஆகியோரும் அணியில் இடம்பெற்று உள்ளனர்.


 

பிரதமர்: மலாய் வேட்பாளர்கள் முன்மாதிரியாகத் திகழ்பவர்கள்

மக்கள் செயல் கட்சி வரும் தேர்தலில் புதிதாக நிறுத்தும் மலாய் வேட்பாளர்கள் முன்மாதிரியாகத் திகழ்பவர்கள் என்றும் அவர்களைக் களம் இறக்குவதில் கட்சி மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

தேசிய பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த முன்னாள் மலாய் உறுப்பினர்களையும் பிரதமர் பாராட்டினார். புதிய மலாய் வேட்பாளர்கள், மேலும் தொண்டாற்ற விரும்பும் ஒரு சமூகத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று நேற்று நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.


 

மசெக எம்.பி. லீ பீ வா ஓய்வு

நீ சூன் சவுத் தொகுதியில் மூன்று தவணை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட லீ பீ வா, 59, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார்.

மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுப்பிப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக தான் விலகிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். நீ சூன் குழுத்தொகுதியில் திருவாட்டி லீக்குப் பதிலாக கேர்ரி டான், 38, என்பவர் புதுமுகமாகக் களம் இறங்குகிறார்.

இப்போது இளம் வயதுள்ள ஒருவர் வேட்பாளராக போட்டியிடப்போவது குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக திருவாட்டி லீ குறிப்பிட்டார்.


 

கெபுன் பாருவில் ஹென்றி குவெக்

கெபுன் பாரு தனித் தொகுதியில் போட்டியிடப்போவதாக மசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி குவெக், 44, ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அங்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி சார்பில் குமரன் பிள்ளை களம் காணுகிறார். நீ சூன் குழுத் தொகுதியின் அங்கமாக இருந்துவந்த கெபுன் பாரு இத்தேர்தலில் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.