ஏடிஎம் வாசலில் கிடந்த குப்பைகளை எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டார் தாத்தா. அடுக்குமாடிக் குடியிருப்பின் உள்ளே இருந்தது அந்த ஏடிஎம் இயந்திரம். அங்கே காவலுக்கு இருப்பவர்தான் தாத்தா. அவர் பெயர்கூட யாருக்கும் தெரியாது. ‘ஏடிஎம் தாத்தா’ என்றால்தான் தெரியும்.
தாத்தா மிகவும் நேர்மையானவர். அருகில் ஓர் அடுக்குமாடித் தளத்தில் இருக்கும் அவருடைய நண்பரின் வீட்டில் ஓரறையில் வாடகைக்கு குடியிருந்தார் அவர். அவரே சமைத்துச் சாப்பிடுவார்.
அவரின் குடும்பத்தினர் இந்தியாவில் இருந்தனர்.
சிறுவர்கள் எப்போதும் தாத்தா காவல் இருக்கும் ஏடிஎம் இருக்கும் இடத்தில் ஒன்று கூடுவார்கள். சிறுவர்கள் உந்துவண்டி ஓட்டி, ஓடிப்பிடித்து விளையாடுவதைப் பார்த்து மகிழ்வார்.
தாத்தாவும் வேலை நேரம் முடிந்ததும் குழந்தைகளோடு விளையாடி விட்டுத்தான் அவர் இருக்கும் இடத்திற்குச் செல்வார்.
ஒருநாள் அவருடன் விளையாடும் சிறுவன் ஆகாஷுக்கு உடல்நிலை சரியில்லை. பழங்கள் வாங்கிக்கொண்டு தாத்தா, அவன் வீட்டுக்குச் சென்றார்.
ஆகாஷின் அம்மாவும் அப்பாவும் தாத்தாவை அன்போடு வரவேற்றனர்.
தாத்தா, தான் வாங்கி வந்திருந்த பழங்களை ஆகாஷிடம் கொடுத்து விட்டு, சிறிதுநேரம் பேசிவிட்டு சென்றார் தாத்தா. மறுநாளே ஆகாஷின் உடல்நிலை சரியாகிவிட்டது. அதற்கு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுவிட்டான் ஆகாஷ்.
அன்று சனிக்கிழமை. மாலை நேரம். ஏடிஎம் வாசலில் தாத்தாவைக் காணச் சிறார் கூட்டம் கூடியது. ஆனால், தாத்தாவின் முகம் சோர்ந்து இருந்ததைப் பார்த்த சிறுவர்கள், “என்னாச்சு தாத்தா?” என்று விசாரித்தனர்.
“ஊரில் இருக்கும் என் பேத்திக்கு இன்று பிறந்தநாள். அவளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என்றால் என்னிடம் கைத்தொலைபேசி இல்லை,” என்று வருத்தமாகச் சொன்னார் தாத்தா.
“தாத்தா! கவலைப்படாதீர்கள். நான் என் அப்பாவின் கைத்தொலைபேசியை எடுத்து வருகிறேன். அதில் நீங்கள் பேசலாம்,” என்றான் ஆகாஷ். ஆனால், ஆகாஷின் உதவியை அவர் மறுத்துவிட்டார்.
இரவு உணவு எடுத்து வந்திருந்தார். ஆனால், அவருக்கு சாப்பிட விருப்பம் இல்லை.
பேத்திக்கு எப்படியாவது வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார் தாத்தா. யாரிடமும் உதவி கேட்க அவர் மனம் இடம்கொடுக்கவில்லை. பேத்தியின் படத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
இரவு மணி 12.02. திடீரென்று அடுக்குமாடிக் குடியிருப்பின் குழந்தைகள் ஓடிவந்தனர்.
ஆகாஷின் கையில் இருந்த கைத்தொலைபேசியில், “தாத்தா, உங்க பேத்தியைப் பாருங்கள்,” என்று காட்ட, அதில் பேத்தி கேக் வெட்டக் காத்திருந்தாள். தாத்தா பார்க்க, கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினாள் பேத்தி.
சிறுவர்களும் அவர்களின் பெற்றோரும் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடினர். தாத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நீங்கள் சோகமாக இருந்தது எங்களுக்கு வருத்தமாக இருந்தது தாத்தா. அதனால்தான் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இந்த ஏற்பாட்டைச் செய்தோம்,” என்றான் ஆகாஷ்.
தாத்தா, கண்களில் கண்ணீர் ததும்ப அனைவரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு நன்றி கூறினார்.
தாத்தாவும் பேத்தியுடன் பேசிய நினைவில் மகிழ்ச்சியுடன் காவல் காக்கத் தொடங்கினார்.
குறிப்பு: ஏடிஎம் என்றால் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (Automated Teller Machine).

