ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவுக்கான பண நிதி (Straits Times Pocket Money Fund), 900 தொடக்கப்பள்ளிப் பயனாளிகளுக்காக அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஃபோர்ட் கேனிங் பூங்காவில் சிறுவர் தினக் கேளிக்கைவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிறுவர்கள் எஸ்ஜி60க்கான தமது வாழ்த்துகளை எழுதி நாடாக்களில் தொங்கவிட்டு மகிழ்ந்தனர்; கைவினை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
பொது இடங்களில் குப்பைப் போடுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் நாடகம், சிறுவர்களைக் கவர்ந்த அதே நேரம், முக்கிய வாழ்க்கைப் பாடத்தையும் புகட்டியது.
கோல் போடும் ரோபாட், ரோபாட்டுகளுக்கிடையே சண்டை, பந்தை வட்டத்துக்குள் வீசுவது, போன்ற பல கேளிக்கை விளையாட்டுகளும் இடம்பெற்றன. ‘பவுன்சி காசில்’லிலும் ஏறிக் குதித்து சிறுவர்கள் மகிழ்ந்தனர்.
கேளிக்கை விழாவில் தன் தம்பியுடன் பங்கேற்றார் ஸ்ரீலட்சுமி நாச்சியார், 11.
“கேளிக்கை விழாவில் ரோபாடிக்ஸ் அங்கமும் உணவும் எனக்குப் பிடித்திருந்தன.
“எதிர்காலத்தில் நான் குடிநுழைவு அதிகாரியாக விரும்புகிறேன். ஏனெனில் அதன்வழி என்னால் நாட்டுக்குச் சேவையாற்ற முடியும். அதற்காக, நான் என்பிசிசி இணைப்பாட நடவடிக்கையில் உயர்நிலைப் பள்ளியில் சேர விரும்புகிறேன்,” என்றார் ஸ்ரீலட்சுமி. தாயார் மலேசியர் என்பதால் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே வந்து செல்லும்போது குடிநுழைவு அதிகாரிகளைக் கண்டது அத்துறையில் அவரிடத்தில் நாட்டத்தை விதைத்தது.
அவருடைய தம்பி, 7 வயது சக்திவேல் சரவணா கணேஷுக்கு இலட்சியம், காவல்துறையில் சேர்வதே.
“இந்நிதி மூலம் மாதாமாதம் கிடைக்கும் $65, கல்வித் தேவைகளை வாங்க உதவுகின்றது. வாரயிறுதிகளில் வெளியே செல்லும்போது பிள்ளைகளுக்குப் பிடித்தவாறு மெக்டோனல்ட்ஸ், கேஎஃப்சி செல்லமுடிகிறது,” என்றார் அவர்களின் தாயார் தனம் புருஷோத்தமன்.
தன் இரு மகன்களுடன் வந்திருந்தார் திரு கான் ஆசிஃப் இஜாஸ். “எனக்குப் பவுன்சி காசிலும் ரோபாடிக்ஸும் பிடித்திருந்தது,” என்றார் மூத்த மகன் முகமது ஹசான், 9. அவருடைய தம்பி முகமது ரியான், 7, “எனக்கு ரயிலில் செல்வது பிடித்திருந்தது,” என்றார்.
“விளையாட்டுகளும் அறுசுவை உணவும் என்னைக் கவர்ந்தன,” என்றார் ரூலாங் தொடக்கப்பள்ளி மாணவி அனுஷா, 10.