சிங்கப்பூரின் ஆகப்பெரிய உள்ளரங்கு விளையாட்டுத் திடலான ‘கியூரியாசிட்டி கோவ்’, மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் கிழக்குப் பகுதியில் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் நிறைந்த ஏறத்தாழ 4,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது இந்த விளையாட்டுத் திடல்.
குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் நான்கு அம்சங்களை இந்தத் திடல் கொண்டுள்ளது.
சதுப்புநிலங்களைப் பற்றிய பூங்காப் பகுதியில், தாவரங்களையும் விலங்குகளையும் இத்தகைய நிலங்களில் நீர் எவ்வாறு ஆதரிக்கிறது என்பது பற்றி வருகையாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.
காற்றுப்பகுதி பற்றிய பிரிவில், தென்கிழக்காசிய மழைக்காடுகளையும் காட்டு விலங்குகளையும் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.
புல்வெளி வட்டாரங்களைப் பற்றிய பிரிவில் விலங்குகள் தங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ற தோற்றத்தை மாற்றி உருமறைப்பு செய்கின்றன என்பதையும் வருகையாளர்கள் கற்கலாம்.
வறண்ட, பாலைவன நிலங்களில்கூட விலங்குகளும் தாவரங்களும் செழிப்புடன் வாழ்கின்றன என்பதையும் அதற்கான பிரிவு எடுத்துக்காட்டுகிறது.
கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 4 மண்டலங்களில் பிள்ளைகள் ஏற, தவழ, தொட்டுணர, ஆராய 30க்கு மேற்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. அத்துடன் மின்னிலக்கம் வழியான கற்றலும் இங்கு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“இயற்கை சார்ந்த அழகையும் அறிவையும் பிள்ளைகள் உணர இந்தப் பூங்கா வழிவகுக்கும் என நம்புகிறோம். அதனால் தாவர விலங்குகளின்மீது கருணைமிக்கவர்களாகப் பிள்ளைகள் வளரவேண்டும் என விரும்புகிறோம்,” என்று மண்டாய் வனவிலங்கு குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெனட் நியோ கூறினார்.
காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும் ‘கியூரியோசிட்டி கோவ்’ விளையாட்டுத் திடல் இரண்டு மணி நேரத் தொகுதிகளாக குழந்தைகளை வரவேற்கும்.
48 வெள்ளிக் கட்டணத்தில் (மூன்று வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட) ஒரு பிள்ளையும் (21 வயதுக்கும் மேற்பட்ட) பெரியவர் ஒருவரும் நுழைய அனுமதியுண்டு.
மேல் விவரங்களுக்கு https://www.mandai.com/en/curiosity-cove.html என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

