எங்கள் பள்ளியில் சென்ற வாரம், தீபாவளிப் பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம்.
இந்த ஆண்டு, பண்டிகையின் ஓர் அங்கமாக, பள்ளி இடைவேளை நேரத்தில் பல பாரம்பரிய, வேடிக்கையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பள்ளி வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் அழகிய மலர்களாலும் வண்ணமயமான கோலத்தினாலும் ஜொலித்தது.
பள்ளி இடைவேளை நடவடிக்கைகளை மாணவர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றுச் செய்தனர். அவை பார்ப்பதற்குக் கோலாகலமாக இருந்தன.
நடவடிக்யின் சிறப்பு அம்சங்கள்: முறுக்குப் பிழிதல், முறுக்குக்குத் தேவையான பொருள்களை அறிதல். முறுக்கு அச்சியைக்கொண்டு பிழிந்து மகிழ்தல். மற்ற இன மாணவர்களின் கற்றலும் இதில் காண முடிந்தது.
கோலம் போடுதல்: அரிசி மாவும் கோல அச்சும் கொண்டு பூக்கள் போன்ற வடிவங்களில் கோலம் இட்டனர். கோலமிடுவது அழகுக்காக மட்டுமல்ல, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டும் பண்பை வெளிப்படுத்துவது என்பதை உயர்தமிழ் மாணவர்கள் பாலர்பள்ளி மாணவர்களுக்கு விளக்கினர்.
வாழையிலையில் சாப்பிடும் முறை: இலையில் முதலில் வைக்க வேண்டிய பொருள் முதல் இறுதி உணவு வரை அழகாக எடுத்து வைத்துச் சரிபார்த்தனர். வாழை இலையின் நன்மைகள் பற்றி அறிந்துகொள்ள முயன்றனர்.
கணினி விளையாட்டு: தீபாவளியன்று நண்பர்கள் வீட்டிற்குச் சென்றால் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை மெய்நிகர் வழியான கற்றலில் ஈடுபட்டு அறிந்தனர். மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட்டு முறையில் பாடம் அமைக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நிழற்படம் எடுத்தல்: தீபாவளியை நினைவுபடுத்தும் விளக்கு, பட்டாசு, பலகாரங்கள் கொண்ட படங்களைப் பிடித்துக்கொண்டு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படம் எடுத்துக்கொண்டனர்.
வெற்றியின் பின்னணி: இந்நடவடிக்கைகளை நடத்துவதில், பெற்றோரும் தொடக்கநிலை 3 முதல் 5 வரை பயிலும் உயர்தமிழ் மாணவர்களும் இணைந்து வெற்றிகரமாகப் பங்காற்றினர். குறிப்பாக, உயர்தமிழ் மாணவர்களின் பண்பாட்டு விளக்கங்கள் சிறப்பாக அமைந்தன.
பாலர்பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து மாணவர்களும் அனைத்து நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். சூச்சின் தொடக்கப்பள்ளியில் நடந்த இந்தத் தீபாவளிக் கொண்டாட்டம், பண்பாட்டுக் கற்றலையும் சமூகப் பிணைப்பையும் வளர்த்த ஓர் இனிமையான நிகழ்வாக அமைந்தது.

