மலேசியாவில் ஒரு பொற்காலப் பயணம்

2 mins read
a4340411-dbc2-475f-bb5f-f50b5412647e
‘லவண்டர் கார்டன்’ என்ற பூந்தோட்டத்தில் படம் எடுத்துக்கொண்ட மோகன கலையரசன் ரக்ஷணாஸ்ரீ. - படம்: சூர்யா
multi-img1 of 3

பள்ளி விடுமுறைக் காலம் என்பது மாணவர்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் இடைவெளி. இந்த விடுமுறையை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில், மோகன கலையரசன் ரக்ஷணாஸ்ரீயின் பெற்றோர் இவரை மலேசியாவின் கேமரூன் ஹைலேண்ட்ஸ் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். ரக்ஷணாஸ்ரீயின் மறக்க முடியாத பயண அனுபவம் இங்கே பகிரப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை இரவு, நாங்கள் கேமரூன் ஹைலேண்ட்ஸ் நோக்கிப் பயணத்தைத் தொடங்கினோம். வழியெங்கும் கூடிய பனிமூட்டமும் கண்ணாடிகளில் படிந்த மழையும் அந்தப் பயணத்தை ஒரு மந்திர உலகத்துக்குள் அழைத்துச் செல்வதுபோல இருந்தது.

பேருந்துகள், வாடகை உந்து வண்டிகள் என பல வாகனங்களில் மாறி மாறிப் பயணம் செய்ததில் சோர்வு ஏற்பட்டாலும் அந்தக் குளிர்ந்த சூழல் எங்களை உற்சாகமாக இருக்க வைத்தது.

இயற்கை அழகில் திளைத்த நாங்கள் திங்கட்கிழமை ஓய்வுக்குப் பின், செவ்வாய்க்கிழமை காலை ‘லவண்டர் கார்டன்’ என்ற பூந்தோட்டத்திற்குச் சென்றோம்.

அங்கு அடி எடுத்து வைத்த ஒவ்வோர் இடத்திலும் சிவப்பு, மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு என வண்ணப் பூக்கள் கொட்டிக்கிடந்தன. ஒவ்வொரு பூவும் ஓர் ஓவியம்போல கண்ணைக் கவர்ந்தது.

அடுத்து, நாங்கள் தேனீப் பண்ணைக்குச் சென்றோம். மழை காரணமாகத் தேனீக்களை அருகில் பார்க்க முடியவில்லை என்றாலும் இயற்கையாகச் சேகரிக்கப்பட்ட இனிப்புத் தேனின் சுவையும் மணமும் எங்களை மகிழ்வித்தன. தேனீக்கள் தேன் சேகரிப்பதைப் பார்க்க முடியாதது சிறு வருத்தத்தை அளித்தது.

விலங்குகளுடன் ஒரு சந்திப்பு

பிறகு, ‘சூமானியா’ எனும் விலங்கியல் உலகிற்குள் நுழைந்தோம். அங்கு நட்பாக நெருங்கி வந்த லாமாக்கள், பாசத்துடன் கால்களைத் தடவிய ஆட்டுக்குட்டிகள், குதித்த முயல்கள் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தோம்.

அவற்றுக்கு உணவு கொடுத்து, அவற்றின் எதிர்வினைகளைப் பார்த்தது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. மேலும், அரிய ஊர்வன, வித்தியாசமான பூச்சிகளையும் அங்கு பார்த்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மதிய உணவுக்குப் பின் சென்ற பண்ணையில், உயரமாக நிமிர்ந்து நின்ற செடிகளில் தொங்கிய பொன்னிறச் சோளக் கதிர்களுடன் கூடிய சோளத் தோட்டத்தை முதன்முறையாகப் பார்த்தது எனக்குக் கனவில் காண்பது போலிருந்தது. பல வண்ண ரோஜாக்களும் அந்த இடத்தின் அழகை அதிகரித்தன.

தேயிலைத் தோட்டத்தின் பசுமைப் போர்வையில்

புதன்கிழமை காலை, நாங்கள் ‘கேமரூன் வேலி டீ’ என்ற தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றோம்.

கண்ணுக்குத் தெரியாத தூரம் வரை பரந்திருந்த அந்தப் பச்சை இலைகளின் பசுமைப் போர்வை மனதை மெய்மறக்கச் செய்தது. பின்னர், ‘BOH’ தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று, தேயிலை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பார்த்தது சுவாரசியமான அனுபவமாக இருந்தது.

அனைத்தையும் அனுபவித்துவிட்டு வீடு திரும்பும்போது எங்களின் மனம், மகிழ்ச்சியாலும் புதுமையாலும் இனிய நினைவுகளாலும் நிறைந்திருந்தது.

இத்தனை புதிய அனுபவங்களை வழங்கிய இந்தப் பயணம், என்னுடைய வாழ்க்கையின் பொற்கால நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மோகன கலையரசன் ரக்ஷணாஸ்ரீ, தொடக்கநிலை 5, பூச்சூன் தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்