தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்ஸ்டகிராம் பிரபலம் சாய் சரண்

2 mins read
ab319d21-c1ab-4099-80d4-378c785de629
சாய் சரண். - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னையைச் சேர்ந்த சாய் சரண், இன்ஸ்டகிராம் பிரபலமாக இருக்கிறார். சாய் சரணும் அவரின் நண்பன் பார்த்தாவும் சேர்ந்து பதிவிடும் காணொளிகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சாதாரணமாக வீடுகளில் செய்யக்கூடிய சமையல், வீட்டைச் சுத்தம் செய்தல், துணிகளை மடித்து வைத்தல், செடி வளர்த்தல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற வேலைகளைத்தான் சாய் தன் நண்பன் பார்த்தாவுடன் இணைந்து செய்கிறார். ஆனால், அதை சுவாரசியமாகப் பேசிக்கொண்டே, செய்வதுதான் சாய் சரணின் சிறப்பு.

சாய் சரணனின் நண்பன் பார்த்தா யார் தெரியுமா? அது ஒரு கோழிக்குஞ்சு.

பெரும்பாலும் பூனை, நாய் போன்றவற்றைத்தான் செல்லப் பிராணியாக வளர்ப்பார்கள். நீங்கள் ஏன் கோழிக்குஞ்சைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டதற்கு, “ஒரு நாள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் கோழிக் குஞ்சுகள் விற்பதைப் பார்த்தேன். உடனே எனக்கும் கோழிக்குஞ்சு வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

“வீட்டில் என் தந்தையிடம் கேட்டேன். உடனே என் தந்தை வாங்கிக்கொடுத்தார். நான் சொல்வதைப் புரிந்துகொள்ளும் வகையில் பார்த்தாவைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறேன்.

“நான் சமைக்கும்போது, வேலை செய்யும்போது என் தோளில், தலையில் ஏறிக்கொள்வான். அவனுடன் பேசிக்கொண்டே வேலைகளைச் செய்வதுதான் எனக்கும் பிடித்திருக்கிறது. பார்ப்பவர்களுக்கும் சுவாரசியமாக இருக்கிறது.

“நான் பேசுவது எல்லாமே என் அண்ணன் பிரவீன் குமார்தான். ஆனால், அதை எனக்கு ஏற்ற மாதிரி இயல்பாகவும் அதற்கேற்ற உடல்மொழியுடன் பேசிவிடுவேன்.

“நான் ஒன்றும் யாரும் செய்யாததைச் செய்யவில்லை. இயல்பாகவும் நகைச்சுவையுடனும் பேசுவது பலருக்கும் பிடித்திருக்கிறது.

“காணொளி எடுப்பது, அதைச் சரிசெய்வது, இன்ஸ்டகிராமில் போடுவது எல்லாம் அண்ணன்தான். விழிப்புணர்வு, விளம்பரக் காணொளிகளையும் பதிவிடுகிறோம்.

“என் காணொளிகள் பலராலும் பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணமே என் கோழிக்குஞ்சு செய்யும் சேட்டைகள்தான். அவனுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் சொல்வதையும் குச்சியால் ஒலி எழுப்புவதையும் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடந்துகொள்வதில் அதற்கு இணை யாரும் இல்லை.

“ஓய்வு நேரத்தில் காணொளி எடுப்பது மட்டுமின்றி குங்ஃபூ, பேட்மிண்டன், கேரம், காற்பந்து போன்ற விளையாட்டுகளின் மீதும் எனக்கு ஆர்வம் உண்டு.

“எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டும். ஆண் வேலை, பெண் வேலை என்று எதுவும் கிடையாது. எல்லாரும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“பெண்களின் கஷ்டத்தைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை என் காணொளிகளைப் பார்த்து உணர்ந்துகொள்ள முடியும்.

“என்னைப்போல் சிறுவர்கள் இப்படி வீட்டில் வேலைகளைப் பகிர்ந்துகொண்டால் அதுவே எனக்குக் கிடைத்த வெற்றியாக கருதுவேன்,” என்றார் சாய் சரண்.

குறிப்புச் சொற்கள்