நூலகம் செல்வது நற்பழக்கம் - அது நாளும் வரணும் நம்பழக்கம்! நூலகம் என்பது போதிமரம் - அதன் நிழலில் ஒதுங்கு; ஞானம் வரும்!
நூலகம் அது ஒரு நூல்ஏணி - உன் நோக்கம் உயர்த்தும் புகழ்ஏணி! படங்கள் போட்ட கதைநூல்கள் - நல்ல பாட்டும் சொல்லும் கவிநூல்கள்!
திடமாய் வளரும் பொதுஅறிவு - அங்கு தினமும் நூல்கள் புதுவரவு! அறிவுரை கூறும் சிறுநூல்கள் - நுட்ப அறிவியல் பேசும் சிலநூல்கள்!
வரலாறுகளும் வாழ்வியலும் - உன்னை வடிவமைக்கின்ற தாய்மடிகள்! தன்னம்பிக்கை தரும் நூல்கள் - உன் தகுதியை வளர்க்கும் பெருநூல்கள்
இன்னும் எத்தனை உண்டிங்கு - நீ ஏற்றம் பெறுவாய் சென்றங்கு! நூலகம் செல்வது நற்பழக்கம் - அது நாளும் வரணும் நம்பழக்கம்!

