தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி என்பது படிப்படியாக உழைத்துப் பெற வேண்டியது. படித்தவற்றை நன்கு புரிந்து உள்வாங்கிய பிறகு நன்கு பயிற்சி செய்யும் மாணவர்களுக்குக் கல்வி நன்கு கனியும்.
இவ்வாறு நிதானம் காத்து, முறையாகப் படித்து தங்கள் இறுதித் தேர்வுகளை எழுதச் சென்ற தொடக்கப் பள்ளி மாணவர்கள் சிலர், தங்கள் அனுபவங்களைத் தமிழ் முரசுடன் பகிர்ந்தனர்.
நல்ல மதிப்பெண்களுக்குப் பின்னால் தனித்துவ திறமைகளும் உழைப்பும் மட்டுமின்றி குடும்ப ஆதரவும் இருப்பதாக இந்த மாணவர்கள் கூறுகின்றனர்.
ஓயெஸிஸ் பள்ளியின் அயான் அப்துல் ரஹீம், கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டவர். இருப்பினும், கல்வியிலும் காற்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்குவதற்கான முயற்சியை அவர் கைவிடவில்லை. அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்ட போதும், அவர் காற்பந்தில் விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தார். தந்தையைப் பெருமைப்படுத்துவதே இலக்கு எனச் செயல்பட்டார்.
“காற்பந்து அவருக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் கருவியாக இருந்தது. நேரப் பற்றாக்குறையால் வகுப்புகள் விடுபட்டாலும் என் தந்தையும் ஆசிரியர்களும் உதவி நல்குவர்,”என்று அவர் கூறினார்.
மதிப்புமிக்க பீட்டர் லிம் உதவித்தொகை வழங்கப்பட்ட அவர், செயின்ட் ஜோசப் அனைத்துலகக் கல்வி நிலையத்தில் படிக்க வாய்ப்பையும் பெற்றார்.
வருங்காலத்தில் முழுநேர காற்பந்து வீரராகத் திகழ்வது அயானின் விருப்பம்.
குவீன்ஸ்டவுன் பள்ளி மாணவி அனிஷா டயான் சண்டர்சன், கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாலும், வகுப்புத் தலைவராகவும் அணித் தலைவராகவும் பொறுப்புடன் செயல்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கட்டொழுங்கின் முக்கியத்தை உணர்ந்த அனிஷா, குறுக்கு வழி எதனையும் கையாளாமல் நேர்மையான முறையில் பயிற்சி செய்தார்.
பயிற்சிகளின்போது இழைக்கும் தவறுகளை மூடி மறைக்காமல் தன்னைத் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார் இந்தக் கெட்டிக்கார மாணவி.
அத்துடன் ஜிம்னாஸ்டிக்ஸ் எனப்படும் சீருடற்பயிற்சி மீதான அவரது ஆர்வம், படிப்பில் கவனம் செலுத்த உதவியது.
“எப்போதெல்லாம் சோர்வும் சலிப்பு ஏற்படுகிறதோ, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அன்பு வார்த்தைகளால் இதமளித்து உற்சாகமூட்டுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
பள்ளிக்கு வெளியிலும் சமூகச் சேவை செய்வதிலும் ஆர்வம் காட்டும் அனிஷா, எதிர்காலத்தில் கால்நடை மருத்துவராக விரும்புகிறார்.
முழுமையான வெற்றிக்கு நல்ல பண்புகள் வித்திடும் என்பதை இம்மாணவர்கள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.

