தரைப்பந்து (Floorball) விளையாடிக் கொண்டிருந்த 10 வயது ராயன் பாக்யேஷ் சௌபேயின் கால் முறிந்தபோது அது அவருக்குப் பெரும் தடையாக அமைந்தது.
அதன் பிறகு, அவருக்கு ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டபோது விரைவான இயக்கத்தைக் கோரும் அந்த விளையாட்டில் ஈடுபடுவது மேலும் கடினமானது.
இருப்பினும், ராயனின் தளராத உறுதி, கடுமையான பயிற்சி, அவரது குடும்பத்தினரின் வலுவான ஆதரவு ஆகியவை, அவர் வெறும் குணமடைவதோடு மட்டுமல்லாமல், முன்பை விடச் சிறப்பாக தரைப்பந்து விளையாட்டுக்குத் திரும்புவதற்கும் உதவின.
அண்மையில் நடைபெற்ற 34வது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) உன்னத விருதுகள் விழாவில் தற்போது 13 வயதான ராயன், கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியதற்காக விருதுடன் கௌரவிக்கப்பட்டார்.
தரைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட ராயன், தனது திறமைகளை மேம்படுத்தப் பல ஆண்டுகள் கடினமாக உழைத்தார். தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார். தமது தொடக்கப்பள்ளி தரைப்பந்து அணியின் தலைவராகவும் ராயன் செயல்பட்டார். அணியின் தலைவராகவும் ராயன் செயல்பட்டார்.
“எனது விளையாட்டுப் பயணம் இளம் வயதிலேயே தொடங்கியது. நான் ஆறு வயதாக இருந்தபோது காற்பந்து விளையாடத் தொடங்கினேன்,” என்று ராயன் நினைவுகூர்ந்தார்.
சவால்கள் இருந்தபோதிலும், தோல்விகளால் தனது வாழ்க்கையை வரையறுக்க அவர் அனுமதிக்கவில்லை. “கடினமாக உழைத்து, உடல் நோய் எதிர்ப்பு சக்தியையும் உறுதியையும் வலுவாக்க நான் உறுதிபூண்டேன். இறுதியில், ஆஸ்துமா தாக்குதல்கள் பெரும்பாலும் நின்றுவிட்டன,” என்று அவர் கூறினார்.
ராயனின் ஆர்வம் வெறும் விளையாட்டைத் தாண்டி சமூக சேவையிலும் விரிந்துள்ளது. கொவிட்-19 தொற்றுக் காலத்தில், கட்டுமானத் தொழிலாளர்களுக்காக நிதி திரட்ட, அவர் தனது குடும்பத்தினருடன் ஒரு மாதம் தினமும் 20 கிமீ சைக்கிள் ஓட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
மொத்தம் $1,500 நிதி திரட்டப்பட்டது. “தொடக்கத்தில் இந்த முயற்சியில் ஈடுபடுவது எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது. ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு, அது எனக்கு பழகிவிட்டது.
“நாங்கள் திரட்டிய பணத்தையும் அதனால் ஏற்பட்ட நேர்மறை தாக்கத்தையும் பார்த்தபோது, அது எனக்கு மிகுந்த ஊக்கமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.
ஒருநாள் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது கனமழை பெய்யத் தொடங்கிய தருணத்தை அவர் நினைவுகூர்ந்தார். உடல் முழுவதும் நனைந்து, பயணம் மிகவும் சவாலாக இருந்தாலும், தாங்கள் செய்துகொண்டிருப்பது ஒரு நல்ல செயல் என்ற எண்ணமே அவருக்கு ஊக்கத்தை அளித்தது என்று அவர் கூறினார்.
அவர் ஓப்ரா எஸ்டேட் தொடக்கப்பள்ளியில் பயின்ற பிறகு, தற்போது ஆங்கிலோ சீன பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அறிவியல் மீதான ஆர்வத்தால் உந்தப்பட்ட ராயன், வானியற்பியல் நிபுணராக (astrophysicist) பணிபுரிந்து எதிர்காலத்தில் நட்சத்திரங்களை ஆராய விரும்புகிறார்.