சூரியன் தன்னுடைய தங்க நிறக் கதிர்களால் உலகத்தை எழுப்பியது. அது தண்ணீரில் தன்னந்தனியாக சோகமாக இருந்த நீர்த்துளியைப் பார்த்தது. உடனே நீர்த்துளியின் மேல் அக்கறை கொண்டது. இவன் சிறுவனாக பயந்துபோய் காணப்படுகிறான். இவனை பயத்தில் இருந்து வெளியே கொண்டு வரவேண்டும் என்று நினைத்தது சூரியன். உடனே, “நீர்த்துளியே! ஏன் கவலையாக இருக்கிறாய்?” என்று கேட்டது.
“எனக்கு வெளியே வரவே பயமாக இருக்கிறது,” என்றது நீர்த்துளி. கவலைப்படாதே! நான் உன்னை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன்,” என்று கூறியது சூரியன். நீர்த்துளியும் மகிழ்ச்சியுடன் சூரியனுடன் கிளம்பியது. உயரத்திற்கு சென்றபோது அங்கு தன்னைப்போன்ற பலரைச் சந்தித்தது நீர்த்துளி. அனைவரும் ஒன்றாகக் கூடி, ஒரு பஞ்சுபோன்ற மேகமாக மாறினார்கள். இதற்குப் பெயர் ‘ஒடுக்கம்’ என்றது சூரியன்.
மென்மையான காற்று அந்த மேகத்தை மெதுவாகத் தள்ளிக்கொண்டு சென்றது. மேகத்திலிருந்து பார்த்தபோது கீழே பசுமையான மலைகள், வயல்கள், வீடுகள் இருப்பதை ரசித்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளை மேகங்களாக இருந்தன. நீர்த்துளிக்கு இது புது அனுபவமாக இருந்தது. ‘இதுதான் வேறு உலகம் என்று சூரியன் சொன்னதுபோல இருக்கிறது,’ என்று நினைத்து ஆர்வத்துடன் மேகத்திலிருந்து எட்டிப் பார்த்தபடி சென்றது நீர்த்துளி.
மேகங்களில் அதிகமான நீர்த்துளிகள் அனைத்தும் ஒன்று சேர்த்தன. அதனால் வெள்ளையாக இருந்த மேகங்கள் உடனே அடர் சாம்பல் நிறத்திற்கு மாறின. பூப்போல் மென்மையாக இருந்த நான் திடீரென்று கனமாக இருப்பதை உணர்கிறேன் என்று நினைத்தது நீர்த்துளி. சில வினாடிகளில் மற்ற நீர்த்துளிகளுடன் கீழே விழத் தொடங்கியது நீர்த்துளி. கீழே தாகத்துடன் காத்திருந்த பூவின் மேல் விழுந்தது.
அந்தப் பூ நன்றியுடன் நீரைப் பார்த்தது. பூக்களின் மேல் விழுந்து தவழ்ந்து கீழே விழுந்தது நீர்த்துளி. அதற்கு வலிக்கவே இல்லை. அங்கிருந்த மற்ற நீர்த்துளிகளுடன் ஒன்று சேர்ந்தது. மெதுவாக ஒவ்வொரு துளியும் ஒன்று சேர்ந்து, சிறிய நீரோடையாக மாறின. அந்த நீரோடையில் பயணம் செய்தபோது ‘இது ஒரு புதிய அனுபவம்’ என்பதை உணந்து சிரித்தது நீர்த்துளி. அந்த நீரோடை ஒரு பெரிய ஆற்றில் கலந்தது.
ஆறு வேகமாக பயணித்து கடலில் கலந்தது. மீண்டும் கடலுக்குள் வந்த நீர்த்துளி தனது நீர் சுழற்சி பயணத்தை முடித்திருந்தது. சூரிய ஒளியால் உறிஞ்சப்பட்டு மேலே சென்று மீண்டும் மழையாக பெய்தது தனக்கு ஓர் நல்ல அனுபவம் என்பதை உணர்ந்தது நீர்த்துளி.
நல்ல ஓர் அனுபவத்தைத் தந்த சூரியனுக்கு நன்றி கூறி, அடுத்த பயணத்திற்கு தயாராக அது நிமிர்ந்து சூரியனைப் பார்த்தது. நீர்த்துளியின் பயணக்கதை மூலம் மழை உருவாவதைத் தெரிந்து கொண்டீர்களா சிறுவர்களே!