பொக்கிஷம்!

2 mins read
8537e0b1-7112-47aa-91a9-ee68b9c9af2a
சிறுவன் புத்தகக் கடைக்குச் சென்ற மாணவன். - படம்: ஊடகம்

இரண்டு வாரங்களாக நீடித்த என் தேடல் இறுதிக்கட்டத்தை அடைந்தது. என் பயணத்தின் கடைசி நிலையாக இருந்த அந்தப் புத்தகக் கடையின் வாசலில் நின்றேன். என் உள்ளத்திலிருந்த ஒரே நம்பிக்கை ஒரு தொன்மையான, அரிய மரபுச்சின்னம் எனக் கருதப்படும் நூலைக் கண்டுபிடிப்பது. அது கிடைத்தால், உடலியங்கியல் தொடரை முழுமையாகப் படித்து உலகின் முதல் நபராக வரலாற்றில் பெயர் பதிக்க முடியும்.

நுழைந்தவுடனேயே, கடையின் ஒவ்வொரு பகுதியையும் ஆராயத் தொடங்கினேன். பொறுமையாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சோதித்தேன். விரல்களின் நுனியில் இருக்கும் பழைய நூல்களின் இடையே, என் தேடல் தொடர்ந்தது. ஆனால், முடிவில் புத்தகம் கிடைக்கவில்லை. நான் தோற்றுவிட்டேன்.

சோகம் நிறைந்த நெஞ்சுடன், நான் கடையை விட்டு வெளியேறினேன். அதிக எண்ணிக்கையில் மக்கள் நெருக்கமாய்த் திரண்டிருந்த அந்தச் சந்தையில் மெதுவாக நடந்தேன். எதிர்பார்ப்பின்றி நகர்ந்து கொண்டிருக்கும்போது, காலச்சுவடுகளை வைத்திருக்கும் ஓர் பழமைவாய்ந்த கட்டடம் என் பார்வையில் தெரிந்தது. அதன் சுவர் சாய்ந்திருந்தது. ஓர் அறைவாசல், அங்கு அகலமான குழி இருந்தது, மற்றும் நீரைச் சிதறவிட்டுக் கொண்டிருந்த குழாய் ஒன்றும் இருந்தது.அந்த இடம் புதைந்த இடம் போலவே தோன்றியது. ஆனால், அதுவும் ஒரு புத்தகக் கடைதான்.

பாழடைந்த தோற்றத்தைக் கண்டுகொள்ளாமல் , ஓர் இறுதியான முயற்சியாக உள்ளே நுழைந்தேன். தீவிரமாகப் புத்தகங்களை ஆய்வு செய்தேன். ஒவ்வோர் ஒடுக்கமான பகுதியையும் கண்காணித்தேன். ஒற்றைத் தீபத்தின் மந்தமான ஒளியில் உடைந்துபோன அலமாரிகளின் மீது என் கைவிரல்கள் தேடியபோது, சோர்வு என் உடலில் படர்ந்தது.

அந்தக் கணத்தில்...! ஓர் ஒதுங்கிய மூலையில், மறைந்து கிடந்த அந்த நூல் என் பார்வையை ஈர்த்தது. மகிழ்ச்சி என் உடலெங்கும் பரவியது.

ஆவலுடன்,“கண்டுபிடிச்சிட்டேன்” என் குரலால் கட்டடம் முழுவதும் அதிர்ந்தது. கண நேரத்தில், பலரின் பார்வைகள் என்னை நோக்கி திரும்பின.

நான் பதற்றமின்றி புத்தகத்தை என் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு, அந்தப் பழைய கடையின் வாசலை நோக்கி நடையைக் கட்டினேன்.பிறகு, அதற்குக் காசு கொடுத்துவிட்டு சந்தோஷமாக வீடு திரும்பினேன்.

நிதீஷ் குமார், உயர்நிலை 2, பார்ட்லி உயர்நிலைப் பள்ளி

குறிப்புச் சொற்கள்